Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

"கேப்டன்ஸி வேண்டாம்!" - தினேஷ் கார்த்திக் விலகலுக்கு அந்தத் தமிழ் பேட்டிதான் காரணமா? #DineshKarthik

கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டன் பதவியில் இருந்து திடீரென விலகியிருக்கிறார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். இதனால், 2020-யின் மீதி சீசனுக்கு இங்கிலாந்து கேப்டனும், கொல்கத்தாவின் துணை கேப்டனாகவும் இருந்த இயான் மார்கன் புதிய கேப்டனாகப் பொறுப்பேற்றிருக்கிறார். இயான் மார்கன் தலைமையில் இன்று இரவு நடைபெற இருக்கும் போட்டியில் மும்பையைச் சந்திக்கயிருக்கிறது கொல்கத்தா.
தினேஷ் கார்த்திக்

கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டனாக 2018-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் தினேஷ் கார்த்திக். கெளதம் கம்பீர் டெல்லி அணிக்குப்போனதால், குஜராத் லயன்ஸ் அணியில் இருந்துவந்த தினேஷ் கார்த்திக்கை கொல்கத்தாவின் கேப்டனாக நியமித்தார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜாக்யூஸ் காலிஸ் பயிற்சியின் கீழ், கொல்கத்தாவின் கேப்டனாகச் செயல்பட்டார் தினேஷ் கார்த்திக். 2018 ஐபிஎல் சீசனில் மூன்றாவது அணியாக ப்ளே ஆஃபுக்குள் நுழைந்த கொல்கத்தா எலிமினேட்டரில், ஹைதராபாத்திடன் தோல்வியடைந்து வெளியேறியது. 2019-ல் ஐந்தாம் இடம் பிடித்ததால் ப்ளே ஆஃபுக்குள் நுழையமுடியவில்லை. இதனைத்தொடர்ந்து 2020 சீசனுக்கு கொல்கத்தா அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

பயிற்சியாளராக இருந்த ஜாக்யூஸ் காலிஸ் மாற்றப்பட்டு பிரண்டன் மெக்கல்லம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பயிற்சியாளர் மாற்றப்பட்டபோதே கேப்டனும் மாற்றப்படுவார் என்கிற பேச்சுகள் எழுந்தன. ஆனால், "தினேஷ் கார்த்திக்கை மாற்றும் முடிவு இல்லை. அவர்மேல் நாங்கள் முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறோம்" என ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாகவே கொல்கத்தா அணியின் சிஇஓ வெங்கி மைசூர் தெளிவுபடுத்திவிட்டதால் அந்தப் பேச்சுகள் அப்படியே அடங்கின.

தினேஷ் கார்த்திக்

2020 ஐபிஎல்-ன் முதல் சுற்றின் முடிவில் 4 போட்டிகளில் வெற்றிபெற்று, 3 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது கொல்கத்தா. மோசமான பர்ஃபாமென்ஸ் இல்லையென்றாலும், வெற்றிபெறவேண்டிய போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் ஃபார்மும் இந்தாண்டு மோசமாக இருந்தது. 7 போட்டிகளில் ஒரேயொரு போட்டியில்தான் அதிரடி ஆட்டம் ஆடி அரை சதம் அடித்தார் தினேஷ். பஞ்சாபுக்கு எதிராக 29 பந்துகளில் 58 ரன்கள் அடித்த அவர் மற்ற ஆறு போட்டிகளிளும் சேர்த்து மொத்தமாக அடித்த ரன்கள் 50 மட்டுமே. கடைசியாக நடந்த போட்டியில் பெங்களூருவுக்கு எதிரான சேஸிங்கில் வெறும் 112 ரன்கள் மட்டுமே அடித்து 82 ரன்களில் தோல்வியடைந்திருந்தது கொல்கத்தா. கேப்டன் தினேஷ் கார்த்திக் அந்தப் போட்டியில் அடித்த ரன் 1.

Also Read: ரஹானே வரமாட்டார், தாஹிருக்கும் NO... குழப்பிய விதிகள்... ஆர்வம் காட்டாத அணிகள்! #MidSeasonTransfer

தினேஷ் கார்த்திக்கின் திடீர் விலகலுக்கு என்ன காரணம் என தமிழக கிரிக்கெட் வீரர்கள் சிலரிடம் விசாரித்தோம். ''தினேஷ் கார்த்திக் ஃபார்மில் இல்லை. அதனால், அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காகத்தான் கேப்டன்ஸியில் இருந்து விலகியிருக்கிறார். அதேசமயம் சில வாரங்களுக்கு முன்பு டெல்லி வீரரான ரவிச்சந்திரன் அஷ்வினின் யூடியூப் சேனலுக்கு தினேஷ் கார்த்திக் அளித்திருந்த பேட்டி டீமுக்குள் சில சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில் அஷ்வினும், தினேஷ் கார்த்திக்கும் முழுக்க முழுக்கத் தமிழில் பேசியிருப்பார்கள். நண்பனுடன் உரையாடியதால் ஆண்ட்ரி ரஸல், பிரண்டன் மெக்கல்லம் என கொல்கத்தா வீரர்களை ஒருமையில் 'அவன், இவன்' எனப் பேசியிருந்தார் தினேஷ் கார்த்திக். கொல்கத்தா அணி வீரர்கள் யாருக்கும் தமிழ் தெரியாது. ஆனால், அணியின் சிஇஓ வெங்கி மைசூருக்குத் தமிழ் தெரியும். அவர் சென்னையில் படித்து வளர்ந்தவர். வெங்கி மைசூர் அஷ்வினுடனான பேட்டியில் தினேஷ் கார்த்திக் பேசியவிதத்தை ரசிக்கவில்லை. அவர் தினேஷ் கார்த்திக்கிடம் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். ஃபார்ம் பிரச்னையோடு, பேட்டிப் பிரச்னையும் சேர்ந்துகொள்ள அது தினேஷ் கார்த்திக்குத் தலைவலியாக மாறியிருக்கிறது. அதனால், பேட்டிங்கில் கவனம் செலுத்தலாம் என கேப்டன்ஸியில் இருந்து விலகியிருக்கிறார்'' என்றார்கள்.

#DineshKarthik
தினேஷ் கார்த்திக்கின் விலகலைத்தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸிலும் தலைமை மாற்றம் நிகழ இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும், பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்புவதாகவும், ஜாஸ் பட்லரிடம் கேப்டன்ஸியை ஒப்படைக்கச்சொன்னதாகவும் தெரிகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


source https://sports.vikatan.com/ipl/ipl-2020-why-dinesh-karthik-stepped-down-from-kolkata-knight-riders-captainship

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக