Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

சென்னை: தாறுமாறாக காரை ஓட்டிய மாடல் அழகி; மடக்கிய பொதுமக்கள் - மீட்ட பா.ஜ.க. பிரமுகர்!

சென்னை கோடம்பாக்கத்தில் இருந்து வடபழனியை நோக்கி நள்ளிரவில் சென்ற கார் தாறுமாறாக சென்றது. காரின் வேகத்தைப் பார்த்த பொதுமக்களும் அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் அந்தக் கார், சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதுவது போல சென்றது. அதனால், ஆத்திரமடைந்த சிலர் அந்தக் காரை விரட்டிச் சென்று வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள திரையரங்கு அருகே மடக்கிப் பிடித்தனர். அப்போது காரை ஒட்டியது இளம்பெண் என்று தெரியவந்தது.

முற்றுகையிடப்பட்ட கார்

அந்தப் பெண், டிரைவர் இருக்கையில் அமர்ந்தபடி ஆங்கிலத்தில் அவர்களோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால், வடபழனி காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர். இதற்கிடையில் அந்தப் பெண், போனில் யாருக்கோ போன் செய்து தகவலைத் தெரிவித்தார். உடனடியாக பா.ஜ.க. கொடி பறக்க காரில் வந்து இறங்கிய ஒருவர், அந்தப் பெண்ணை பத்திரமாக அழைத்துச் செல்ல முயன்றார்.

Also Read: சென்னை: சாவு வீட்டில் கஞ்சா போதை, தகராறு! - கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஐ.சி.எஃப் ரெளடி

அப்போது தன்னுடைய காரை விட்டு இறங்கிய அந்தப் பெண், பா.ஜ.க பிரமுகரின் காருக்குள் ஏறி அங்கிருந்து செல்ல முயன்றார். அதைப்பார்த்த பொதுமக்கள், பா.ஜ.க பிரமுகரின் காரை முற்றுகையிட்டனர். மேலும், அந்தக் கார் செல்ல முடியாத அளவுக்கு சாலையை மறித்தனர். இதையடுத்து போலீஸாரிடம், `காரை தாறுமாறாக ஓட்டிய பெண், உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்தப் பெண்ணோ தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தார்.

வாக்குவாதம்

இதையடுத்து போலீஸார், பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க பிரமுகர், இளம்பெண் ஆகியோரிடம் சமரசமாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அதனால் சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர். அதன்பிறகு அந்தப் பெண் ஓட்டி வந்த காரை போலீஸார் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். அந்தப் பெண், பா.ஜ.க பிரமுகரின் காரில் பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்துக்குச் சென்றார்.

இதுதொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரின் பெயர் ஆஷா வனிதா என்றும் மாடல் அழகியாக இருப்பதும் தெரியவந்தது. விளம்பர படங்களிலும் அவர் நடித்துள்ளார். மேலும், நடந்த விசாரணையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் மது விருந்தில் கலந்துக் கொண்ட ஆஷா வனிதா, போதையிலேயே காரை கண்மூடித்தனமாக ஓட்டிவந்துள்ளார். நல்லவேளை விபத்து எதுவும் நடக்கவில்லை. அதற்குள் பொதுமக்கள், அந்த காரை வழிமறித்துவிட்டனர். ஆஷா வனிதா மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

முற்றுகை

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மது அருந்திவிட்டு ஆஷா வனிதா, கர்நாடக பதிவெண்ணைக் கொண்ட காரில் நுங்கம்பாக்கத்திலிருந்து கோடம்பாக்கம் வழியாக வடபழனியை நோக்கிச் சென்றுள்ளார். இரவு நேரம் என்பதால் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது. அதனால்தான் விபத்து எதுவும் நடக்கவில்லை. ஆஷா வனிதாவை மருத்துவமனைக்கு அனுப்பி மதுஅருந்தியுள்ளரா என்று சோதனை நடத்தியுள்ளோம். அவர் மீது மது அருந்திவிட்டு காரை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளோம். அவர் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்துள்ளோம். ஆஷா வனிதா, போதையில் இருந்ததால் அவரிடம் இரவு விசாரணை நடத்தவில்லை. அதனால் அவரைக் காலையில் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி கூறியுள்ளோம்" என்றனர்.

இதற்கிடையில் மாடல் அழகி ஆஷாவனிதா மீது நடவடிக்கை எடுக்கும்படி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயா ரோட்சா என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்தச் சம்பவம் இரவு அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



source https://www.vikatan.com/social-affairs/crime/pondy-bazar-police-books-model-over-driving-car-under-alcohol-influence

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக