Ad

சனி, 10 அக்டோபர், 2020

புதுச்சேரி: `இரண்டு வேட்டி, சட்டை போதும்!’ - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் நாராயணசாமி

புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருந்தார். ஆதாரமின்றி பேசும் அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யும்படி மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டுமென்று புதுச்சேரி பா.ஜ.கவினர் ஊர்வலமாகச் சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் மனு அளித்திருக்கின்றனர். அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “மாநில அரசின் அதிகாரங்களை மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து பறித்து வருகிறது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

பட்ஜெட்டை தாக்கல் செய்ய விடாமல் 4 மாதங்கள் காலதாமதம் செய்தனர். ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடியை மாநில அரசுக்கு மத்திய அரசு நிதியாக கொடுக்க வேண்டும். ஆனால் ரூ.1,700 கோடிதான் நிதியாகக் கொடுக்கின்றனர். மாநில அரசின் நில உரிமையை பறித்துவிட்டனர். இருமொழிக்கொள்ளை என நாம் கூறினால், மும்மொழி கொள்கை என கூறுகின்றனர்.

நீட் வேண்டாம் என்று நாம் கூறும் நிலையில் அதனை திணிக்கின்றனர். அவற்றையெல்லாம் கருத்தில்கொண்டுதான் புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க மத்திய பா.ஜ.க அரசு திட்டமிடுகிறதோ ? என்று கூறினேன். நம் புதுச்சேரியின் அதிகாரங்களை பறித்துவிட்டு தமிழகத்துடன் இணைப்பதுதான் அவர்களின் சதித்திட்டம். அதைக் கூறியதற்காக பா.ஜ.கவினர் எனக்கு எதிராக ஊர்வலம் நடத்தி, என் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். தங்களை எதிர்க்கும் எதிர்கட்சி தலைவர்கள் மீது தேசத் துரோக வழக்குகளை பதிவு செய்வது, அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுப்பது, சி.பி.ஐயை ஏவுவது என மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. நான் இந்திராகாந்திக்காக ஏற்கனவே சிறைக்கு சென்றவன்தான். மக்கள் உரிமைக்காகவும், மாநிலத்தின் உரிமைகளையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க இப்போதும் 2 வேட்டி, 2 சட்டையுடன் சிறை செல்ல தயாராக இருக்கிறேன். புதுச்சேரியில் உள்ள எதிர்கட்சிகள் தூங்கிக்கொண்டிருக்கின்றன. ஒருபுறம் மாநில உரிமை பறிக்கப்படுகிறது. மறுபுறம் ஆளுநரால் நலத்திட்டங்கள் தடுக்கப்படுகிறது.

முதல்வர் நாராயணசாமி - துணை நிலை ஆளுநர் கிரண் பேடி

எதிர்கட்சிகள் அவற்றை வேடிக்கை பார்க்கின்றனர். பல்வேறு தடைகளையம், இடையூறுகளையும் தாண்டி நலத்திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையை தருவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது மாநில அரசே வெளிமார்க்கெட், ரிசர்வ் வங்கியில் கடன்களை பெறலாம் என கூறுகிறது. மாநில அரசுகளுக்கு அளித்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டுமே தவிர அதனை தட்டிக் கழிக்கக்கூடாது” என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-cm-narayanasamy-slams-bjp-government-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக