Ad

புதன், 7 அக்டோபர், 2020

`செயற்குழுக் கூட்டம் முதல் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வரை...! - அ.தி.மு.க-வில் என்ன நடந்தது?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அ,தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த சில ஆண்டுகளாகவே நீடித்தாலும், செயற்குழு தொடர்பாக அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போதுதான் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பில் வெளிப்படையாக நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஓ.பி.எஸ் வந்தபோது `ஜெயலலிதாவின் அரசியல் வாரிசே' என்றும், ஈ.பி.எஸ் வந்தபோது, `நிரந்தர முதல்வரே..' என்று அவர்களது ஆதரவாளர்கள் கோஷமிட்டது நீறுபூத்த நெருப்பாக இருந்த விவகாரத்தை வெளிச்சம்போட்டு காட்டியது.

அ.தி.மு.க செயற்குழு - ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்

இதற்கு அடுத்தபடியாக அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செப்டம்பர் 28-ம் தேதி நடந்த செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் காரசாரமாக நடைபெற்றது. அன்றைய தினம் காலை 10 மணி அளவில் தொடங்கிய செயற்குழுக் கூட்டம், முதல்வர் வேட்பாளர் விவகாரம், வழிகாட்டுதல் குழு அமைத்தல் உள்ளிட்டவற்றால் மாலை 3 மணி வரை சுமார் 5 மணி நேரம் நீடித்தது. அந்தக் கூட்டத்திலேயே முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாக வேண்டும் என மூத்த அமைச்சர்கள் சிலர் வலியுறுத்தியதாகவும், ஆனால், வழிகாட்டுதல்குழு விவகாரத்தால் அது தோல்வியில் முடிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. வழக்கமாக அ.தி.மு.க கூட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசும் அமைச்சர் ஜெயக்குமாருக்குப் பதிலாக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, ``அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற அறிவிப்பை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கூட்டாக அக்டோபர் 7-ம் தேதி வெளியிடுவார்கள்'' என்று அறிவித்தார்.

Also Read: `முதல்வர் வேட்பாளர்; அக்டோபர் 7 டார்கெட்!' - 5 மணி நேரம் நீடித்த அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம்

இதையடுத்து, அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் விவாதம் அக்கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளிடையே சூடுபிடித்தது. தொடர்ந்து அரங்கேறிய காட்சிகளும் பரபரப்பைப் பற்றவைத்தன. செயற்குழுக் கூட்டம் முடிந்த அடுத்த நாள், அதாவது செப்டம்பர் 29-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதை ஓ.பி.எஸ் தவிர்த்தார்.

அதேநேரத்தில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார் ஓ.பி.எஸ். அன்றைய தினம் மாலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மூத்த அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அவர்கள், துணை முதல்வர் ஓ,பன்னீர்செல்வத்தையும் சந்தித்துப் பேசினர்.

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்

செப்டம்பர் 30-ம் தேதியும் இரண்டாவது நாளாக, தனது இல்லத்தில் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ஓ.பி.எஸ். கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஓ.பி.எஸ்-ஸின் காரில் இருந்து தேசியக் கொடி கழற்றப்பட்டதாக வெளியான தகவல், முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதது ஆகியவற்றை இணைத்து அரசு நிகழ்ச்சிகளைத் தவிர்க்கிறாரா ஓ.பி. எஸ் என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமக் கூட்டத்தில் ஓ.பி.எஸ் கலந்துகொண்டார்.

இந்தசூழலில் அக்டோபர் 1-ம் தேதி திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. ``முதல்வர் வேட்பாளருக்குப் போட்டியெல்லாம் இல்லை. எப்போதும் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர்'' என்று அவர் பேசியதை ஓ.பி.எஸ் தரப்பு ரசிக்கவில்லை. திண்டுக்கல் சீனிவாசனின் கருத்தை அமைச்சர்கள் ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் கண்டித்தனர். ஓ.பி.எஸ் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஜே.சி.டி.பிரபாகர், ``அவர் கட்சியின் மூத்த நிர்வாகி. இதுபோன்று கருத்துத் தெரிவிப்பது சரியல்ல'' என்றார்.

இதற்கு அடுத்த நாளே அக்டோபர் 2-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், தனது கருத்தில் இருந்து பின்வாங்கினார். திண்டுக்கல் அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், `கட்சியின் கண்டிப்பு சரிதான். ஆகவே, இந்த விவகாரத்தில் இனிமேல் நான் வாய்திறப்பதாக இல்லை' என்றார். இந்தநிலையில், ஓ.பி.எஸ் தனது சொந்த ஊரான பெரியகுளத்துக்கு அக்டோபர் 2-ம் தேதி திடீரென புறப்பட்டுச் சென்றார். இந்தநிலையில், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் 6-ம் தேதி சென்னை வர தலைமைக் கழகம் உத்தரவிட்டிருப்பதாக ட்வீட் செய்யப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தியது. `அந்த அறிவிப்பு குறித்த தகவல் எனக்கே தெரியவில்லை' என்றார் அமைச்சர் ஜெயக்குமார். பதிவிடப்பட்ட அன்று மாலையே அந்த ட்வீட் நீக்கப்பட்டது.

அ.தி.மு.க ட்வீட்

அதேபோல், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், `திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாள்கள் அமைச்சர்களை சென்னையில் இருக்கச் சொன்னார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி' கூறியதும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர் அவசர அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா தடுப்புப் பணிக்காகவே முதல்வர் அப்படி சொன்னார். ஊடகங்கள்தான் தனது கருத்தைத் திரித்து வெளியிட்டுவிட்டதாக விளக்கமளித்தார். அதேநேரம், கைலாசபுரம் பண்ணைவீட்டில் ஓ.பி.எஸ், அக்டோபர் 3, 4 ஆகிய இரண்டு நாள்களாகத் தொடர்ந்து ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Also Read: `ஓ.பி.எஸ் - எடப்பாடிக்கு ஆளுநரின் அட்வைஸ் முதல் பன்னீரின் மனபாரம் வரை..!' - கழுகார் அப்டேட்ஸ்

அக்டோபர் 5-ம் தேதி காலை 9 மணியளவில் ட்விட்டரில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்தார் ஓ.பி.எஸ். அதில், `தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனைக் கருத்தில்கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கும்! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!'' என்று பகவத் கீதையை மேற்கோள் காட்டி கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஓ.பி.எஸ் ட்வீட்

இதனிடையே, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இரண்டு நாள்களாக தேனியில் ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ் சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பிய நிலையில், இரு தரப்பிலும் தனித்தனியாகத் தொடர்ச்சியாக ஆலோசனை நடந்தது. இதுகுறித்து அக்டோபர் 6-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ``அண்ணன் - தம்பி இடையே பேச்சுவார்த்தை நடப்பதுதான். இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எட்டப்படும்'' என்றார்.

முதல்வர் வேட்பாளராக ஈ.பி.எஸ் அறிவிக்கப்படுவார் என்றும் வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதேநேரம், இருதரப்பிலும் 18 மணிநேரத்துக்கும் மேலாக அமைச்சர்கள் மாறிமாறி ஆலோசனை நடத்தினார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் இருதரப்பிலும் ஆலோசனை நிறைவுபெற்று முடிவெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்

இந்தசூழலில் அறிவித்தபடி இன்று காலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் வந்தனர். கூட்டத்தில் முதலில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல்குழு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். `திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி, தங்கமணி, காமராஜ், ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிராபகர், முன்னாள் அமைச்சர் மோகன், கோபாலகிருஷ்ணன், சி.வி சண்முகம், சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகிய 11 பேர் வழிக்காட்டுதல்குழு அமைக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்

அதன்பிறகு மைக் பிடித்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, `அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற அறிவிப்பை ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் வெளியிடுவார்' என்றார். அதன்பிறகு பேசிய ஓ.பி.எஸ், அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக அன்பிற்கினிய அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார்.

Also Read: ``அருமை அண்ணன்’ எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர்!’ - ஓ.பி.எஸ் அறிவிப்பு #LiveUpdates

இன்றைய கூட்டத்துக்கு வந்திருந்த ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள், ``எடப்பாடி கே.பழனிசாமி எனும் நான்...'' என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளைக் கொண்டுவந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. அதேபோல், எடப்பாடி பழனிசாமியின் முகத்தை உடலில் வரைந்தபடியும் சிலர் அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வெளியில் கூடியிருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி

அதன்பின்னர், ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க-வில் கடந்த சில ஆண்டுகளாக நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டிந்த விவகாரத்துக்கு சில பல ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின்னர் ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/admk-cm-candidate-issue-what-happened-between-gc-meet-to-cm-candidate-announcement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக