Ad

திங்கள், 19 அக்டோபர், 2020

`விஜய் வைத்த பார்ட்டி, ரஜினியின் வேண்டுகோள், குஷ்புவின் அரசியல்!’ - பிருந்தா மாஸ்டர் ஷேரிங்ஸ்

பிரபல நடன இயக்குநர் பிருந்தாவுக்குச் சமீபத்தில் கேரள அரசின் சினிமா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியிருக்கும், `மரக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்துக்காக இந்த விருது பெறுகிறார். மோகன்லால், மஞ்சு வாரியர், பிரபு, சுனில் ஷெட்டி, கீர்த்தி சுரேஷ் உட்பட ஏராளமான நட்சத்திரங்களின் நடிப்பில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் தணிக்கை செய்யப்பட்டதன் அடிப்படையில் அந்தப் படத்தில் வரும் ஒரு பாடலுக்காகச் சிறந்த நடன இயக்குநருக்கான விருதைப் பெறுகிறார் பிருந்தா. பல மொழி சினிமா நட்சத்திரங்களின் பாராட்டு மழையில் நனைந்தவருக்கு வாழ்த்துகூறிப் பேசினோம்.

பிருந்தா

``கடந்த மார்ச்ல ரிலீஸாக வேண்டிய படம் இன்னும் ரிலீஸாகலை. பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் அந்தப் படம் வெளியான பிறகு, அதில் பணியாற்றிய கலைஞர்கள் பலருக்கும் பாராட்டுகள் கிடைக்கும்னு உறுதியா எதிர்பார்த்தோம். ஆனா, ரிலீஸுக்கு முன்பே அந்தப் படத்தில் நான் கோரியோகிராபி செய்த ஒரு பாடலுக்கு விருது கிடைச்சிருக்கு. இதை மொத்த டீமுக்கும் கிடைச்ச அங்கீகாரமாவே நினைக்கறேன். இதில் இன்னொரு ஸ்பெஷல் விஷயம் என்னன்னா, என்னுடன் சேர்ந்து என் அக்கா ஹேமலதாவின் மகன் பிரசன்னாவும் சிறந்த கோரியோகிராபர் விருது வாங்கப்போறார். அதே படத்துக்கு வேறொரு பாடலுக்காகவே அவரும் தேர்வு செய்யப்பட்டிருக்கார்.

எல்லா சினிமா கலைஞர்களுமே தங்கள் படைப்பைச் சிறப்பானதா கொடுக்கவே உழைக்கிறோம். நாம எதிர்பார்க்காத வகையில்தான் நமக்கு விருதுகள் கிடைக்கும். அப்படித்தான் ஒரு மலையாளப் படத்துக்காக எனக்குத் தேசிய விருது கிடைச்சது. அதேபோல இப்போது கிடைத்திருக்கும் விருது அறிவிப்பும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சிதான். கங்கனா ரனாவத் நடிக்கும் `தலைவி’ பட ஷூட்டிங் ஹைதராபாத்ல நடந்துச்சு. என் வேலைகளை முடிச்சுட்டு ஒருநாள் வீட்டுக்கு வந்திருந்தேன். கொஞ்ச நேரத்துலயே விருது அறிவிப்பு வந்துச்சு. உடனே பல மொழி சினிமா நண்பர்களும் வாழ்த்துகள் சொன்னாங்க. பிரியதர்ஷன் சாருக்கு போன் பண்ணி நன்றி சொன்னேன். என் பசங்க கேக் தயார் பண்ணி என்னை கட் பண்ண வெச்சு கொண்டாடினாங்க” - ஏற்கெனவே தமிழகம், கேரளா அரசின் சிறந்த நடன இயக்குநருக்கான விருதுகளைப் பலமுறை பெற்றிருக்கும் பிருந்தா, தற்போது பெறவிருப்பது ஆறாவது விருது!

மணிரத்னம் படக்குழுவினருடன்

தனது சினிமா பயண அனுபவங்கள் குறித்துப் பேசுபவர், ``பெற்றோருக்கு ஏழு பெண் குழந்தைகள். இத்தனை பேரையும் வளர்த்து ஆளாக்க அவங்க ஒருநாளும் வருத்தப்பட்டதில்லை. அப்பா வெளியூரில் வேலை செய்தார். அம்மா தனியாளா எங்களை வளர்த்தாங்க. சின்ன வயசுலயே அக்காக்கள் ஒவ்வொருவரா சினிமா துறைக்குள் நுழைஞ்சு உழைச்சாங்க. பத்தாவது படிக்கும் வரை சொகுசாதான் வளர்ந்தேன். அக்கா கிரிஜாவின் கணவர்தான் ரகுராம் மாஸ்டர். ஒருநாள் கலா அக்காவுக்குப் பதிலா மாமாவுக்கு உதவியாளரா போனேன். சரியா வேலை செய்யலைனா எல்லோர் முன்னிலையிலும் திட்டுவார். குருகிட்ட திட்டுவாங்காம யாரும் வளர முடியாதுதானே! ஒருகட்டத்துல அவரே என்னைப் பாராட்டும்படி பொறுப்புடன் செயல்பட்டேன்.

சினிமா வேலையால் ஸ்கூல் படிப்பைக்கூட முடிக்க முடியலை. ரகு மாஸ்டர்கிட்ட ஆறு வருஷம் உதவியாளரா இருந்த நிலையில் டான்ஸ் மாஸ்டரானேன். அப்போ ரொம்பவே ஒல்லியா இருப்பேன். கூச்ச சுபாவமும் அதிகம் இருந்துச்சு. அதனால, என்னை மாஸ்டராவே பலரும் ஏத்துக்கலை. படிப்படியா என் திறமையை வளர்த்துகிட்டு, தைரியமா வேலை செஞ்சேன். `உள்ளத்தை அள்ளித்தா’ படத்துல `அழகிய லைலா’ பாடல்தான் எனக்கு அடையாளம் கொடுத்துச்சு. ஷூட்டிங் போயிட்டா, பாடல் நல்லா வரணும், நட்சத்திரங்கள் சிறப்பா நடனமாடணும். இது மட்டுமே என் நோக்கமா இருக்கும். அங்க என்னைச் சுத்தி எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் கண்டுக்க மாட்டேன். அதனாலயே, என் குடும்பத்துல யாரும் ஷூட்டிங் பார்க்கக்கூட வரமாட்டாங்க.

ரஜினியுடன்

`இருவர்’ல தொடங்கி இப்பவரை மணிரத்னம் சாரின் எல்லா படங்களிலும் நான் பிரதான கோரியோகிராபர். அவர் என்மீது வெச்சிருக்குற நம்பிக்கையும், அவர்மேல நான் வெச்சிருக்கிற மரியாதையும் ரொம்ப பெரிசு. பாடல் வரும் கதைச் சூழலை என்கிட்ட சொல்லி, அவரோட எதிர்பார்ப்புகளை விவரிச்சுடுவார். அவர் திருப்தியாகுற அளவுக்கு ரொம்பவே மெனக்கெட்டு கோரியோகிராபி செய்வேன். அவர் படத்துல தொடர்ந்து வேலை செய்யுறதால, பாலிவுட்ல என்மீது கூடுதல் மதிப்பு வெச்சிருக்காங்க.

`நீ பாட்டுக்கு ஹெவி மூவ்மென்ட்ஸ் கொடுத்திடாதே. கொஞ்சம் பார்த்துக்கோ’ன்னு சிரிப்பார் ரஜினி சார். சுத்தி எத்தனை டான்ஸர்ஸ் இருந்தாலும், தன் பங்களிப்பைச் சரியா செய்திடுவார். `அண்ணத்த’ படத்துலயும் ரஜினி சாரை வெச்சு கோரியோகிராபி பண்ணியிருக்கேன். கமல் சார் எனக்கு இன்னொரு குரு. அவரும் ஒரு டான்ஸர் என்பதால, அவர் திருப்தியடையும் வகையில் நடனம் சொல்லிக்கொடுப்பது சவாலானது. அவருடன் பல படங்களில் வேலை செய்திருந்தாலும், `தசாவதாரம்’ படம் மறக்க முடியாத அனுபவம். க்ளைமாக்ஸ்ல வரும் `உலக நாயகனே’ பாடலுக்கு கோரியோகிராபி பண்ணியிருந்தேன். அடுத்தடுத்து மேக்கப் மாற்றி, சாப்பிடக்கூட முடியாம திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட்ட அவருடைய டெடிகேஷனைப் பார்த்து அசந்துபோயிட்டேன்.

விஜய்யுடன்

ஸ்விட்சர்லாந்தில் `மின்சார கண்ணா’ படப்பிடிப்பில் இருந்தோம். `மலையாளப் படத்துக்காக உங்களுக்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கு’ன்னு இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் சார் என்கிட்ட சொன்னார். நான் பெரிசா ரியாக்ட் பண்ணவேயில்லை. `என்னங்க ரொம்ப சாதாரணமா இருக்கீங்க. இது பெரிய விஷயம். கொண்டாடியே ஆகணும்’னு சொன்ன விஜய் சார், அன்னிக்கு நைட் என்னை கேக் வெட்ட வெச்சு பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்தார். விஜய் சார் தவிர, அஜித், நயன்தாரா, த்ரிஷா உட்பட இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் பலருடனும் அவங்களோட ஆரம்பகால சினிமா பயணத்துல இருந்து இப்பவரை நட்புடன் இருக்கேன். நாங்க எல்லோருமே ஒண்ணாவே வளர்ந்திருக்கோம். இப்ப ஷூட்டிங் போறப்போல்லாம் அந்த நினைவுகளால் சந்தோஷப்படுவேன்.

முன்பே பாடலை வாங்கி, ரிகர்சல் பார்த்துட்டுத்தான் ஷூட்டிங் போவேன். ஒவ்வொரு மொழிக்கும் நடிகர்களுக்கும் ஏற்ப நடன அமைப்புகளை வடிவமைப்பேன். அஞ்சு மொழி நட்சத்திரங்களுடன் நட்பில் இருக்கேன். ஆனா, ஷூட்டிங் முடிச்சுட்டு வந்த பிறகு, யாரையும் எந்த வகையிலும் தொந்தரவு பண்ண மாட்டேன். நான் கோரியோகிராபி பண்ற பாடல்கள்ல நிச்சயம் கதை இருக்கும். அப்படியான நீண்ட கால சினிமா அனுபத்துல, ஒரு படம் இயக்கணும்னு ஆசைப்பட்டேன். `ஹே சினாமிகா’ங்கிற பெயர்ல துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் நடிப்பில் படத்தை இயக்கிக்கிட்டிருக்கேன். ஷூட்டிங் ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல லாக்டெளன் வந்திடுச்சு. நிலைமை சரியானதும் மீண்டும் ஷூட்டிங் வேகமெடுக்கும். படம் ரிலீஸானதும் உங்க ஃபீட்பேக் சொல்லுங்க” என்று சிரிப்பவர் தனது பர்சனல் விஷயங்களைப் பகிர்கிறார்.

'ஹே சினாமிகா' பட பூஜையில்

``வீட்டில் கடைக்குட்டியான நான், `டாம் பாய்’ மாதிரி வளர்ந்தேன். இப்ப வரைக்கும் குடும்பத்தில் நான் செல்லக் குழந்தைதான். எதுக்குமே நான் சிரமப்படக் கூடாதுனு என் ஆறு சகோதரிகளும் நினைப்பாங்க. எனக்கு சின்ன பிரச்னை ஏற்பட்டாலும்கூட அவங்க எல்லோரும் துடிச்சுடுவாங்க. எனக்கு சமையல் தெரியாது. லாக்டெளன்ல வீட்டுப் பணியாளரும் வரலை. அந்த இக்கட்டான சூழல்ல நான் சமைக்க முயற்சி செய்தேன். ஆனா, `நீ ரிஸ்க் எடுக்காதே’ன்னு என் அக்காக்களே தினமும் எனக்கு சாப்பாடு அனுப்பி வெச்சாங்க. கலா அக்கா, என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட். சகோதரிகளுக்கு எதுனாலும், தூக்கத்தில் இருந்துகூட உடனே எங்களைப் பார்க்க ஓடிவரும் தாய் மனசு அவங்களுக்கு.

ஷூட்டிங் இல்லாதப்போ சகோதரிகள் வீட்டுக்குப் போவேன். சினிமா பாடல்கள் அதிகம் பார்ப்பேன். குடும்பத்துக்கு இணையா நட்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன். குஷ்பு, அனு பார்த்தசாரதி, தயாரிப்பாளர் சுஜாதா, சுப்பு பஞ்சுவுடனான எங்க நட்பு பலருக்கும் தெரிஞ்சதே. எங்க நட்பில் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒருபோதும் விவாதிக்க மாட்டோம். வாட்ஸ்அப் குரூப்ல ஆக்டிவ்வா இருப்போம். 33 வருட தோழியான குஷ்புவும் நானும், `வாடி போடி’ன்னு கூப்பிடும் குளோஸ் ஃபிரெண்ட்ஸ். எங்க வீட்டில் அவ எட்டாவது பொண்ணு.

தோழிகளுடன் brinda

எந்தச் சிக்கலா இருந்தாலும் அவங்களுக்கு போன் பண்ணினா போதும், உடனே தீர்வு கிடைச்சுடும். எனக்கு அரசியல் பத்தி எதுவும் தெரியாது. அதனால, குஷ்புவின் அரசியல் விஷயங்கள்ல நான் தலையிட மாட்டேன். இப்பக்கூட அவங்க பி.ஜே.பி-யில் சேர்ந்ததும் வாழ்த்து சொன்னேன். என் தோழி எது செஞ்சாலும் சரியா இருக்கும். அதனால, மேற்கொண்டு அவகிட்ட அரசியல் பத்தி பேசுறதுக்கு இடமே இல்லையே!” என்று புன்னகையுடன் முடிக்கிறார் பிருந்தா!



source https://cinema.vikatan.com/tamil-cinema/choreographer-brinda-master-shares-about-her-career-experience-and-new-award

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக