Ad

திங்கள், 12 அக்டோபர், 2020

`மோடி ஆட்சி சமூகத்துக்கு எதிரானது!’-திருவண்ணாமலையில் கொதித்த காங்கிரஸ் தலைவர்கள்

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று வேளாண் மசோதாக்களைக் கண்டித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் `விவசாயிகள் சங்கமம்’ என்ற மாநாடு, திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் விவசாயிகளும் கலந்துகொண்டனர். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், செயல் தலைவர் ஜெயகுமார், ஜோதிமணி எம்.பி, விஜயதரணி எம்.எல்.ஏ, திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவர் செங்கம் குமார் உட்பட நிர்வாகிகள் பலர் முன்னிலைவகித்தனர். நிகழ்ச்சியின்போது,`பா.ஜ.க அரசின் விவசாய விரோத சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்?’ என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது.

மாநாடு

இதைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் `ஜூம்’ செயலி மூலமாகத் திரையில் தோன்றி உரையைத் தொடங்கினர். அப்போது, தொழில்நுட்பப் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, கே.எஸ்.அழகிரியின் செல் நம்பரைத் தொடர்புகொண்ட ப.சிதம்பரம், செல்போனை மைக்கில் கனெக்ட் கொடுக்கச் சொல்லி ஸ்பீக்கர் ஆடியோ மூலமாகப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, ``நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டிருக்கும் வேளாண் மசோதாக்களை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்க வேண்டும். பா.ஜ.க-வின் விளம்பரத்தில் நாம் ஏமாந்துவிடக் கூடாது. ஆட்சிக்கு வந்தவுடன் குடிமகன்களின் வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் ரொக்கத்தை முதலீடு செய்வதாகச் சொன்னார்கள். `வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்’ என்றார்கள். கேரளா, புதுச்சேரி, வடகிழக்கு மாநிலங்களில் ஒழுங்குமுறைச் சந்தைகள் கிடையாது. ஒழுங்குமுறைச் சந்தைகளில், பல வகையான அமைப்புகள் இருக்கின்றன.

Also Read: ``வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு வரி தவிர்க்கப்படும்!’’ - நிர்மலா சீதாராமன் சொல்வது உண்மையா?

இவற்றின் மூலம் எவ்வளவு கொள்முதல் செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். நாடு முழுவதுமுள்ள விவசாயிகளில், ஆறு சதவிகிதம் பேர் மட்டுமே தங்களின் விளைபொருள்களை ஒழுங்குமுறைச் சந்தைகளில் விற்கிறார்கள். சந்தைக்கு வெளியே பொருள்களை விற்கும் பெரும்பகுதி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலைகூட கிடைப்பதில்லை. அப்புறம் ஏன் அவர்கள் சந்தைக்குப் போய் விற்க மாட்டேன் என்கிறார்கள் என்றும் உங்களுக்குள் கேள்வி எழலாம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒழுங்குமுறைச் சந்தைக்கு விவசாயிகள் செல்ல வேண்டுமென்றால், சராசரியாக 25 கிலோமீட்டருக்குமேல் பயணிக்க வேண்டும். போனவுடனே, விற்க முடியுமா என்றால், அதுவும் இல்லை. மூட்டையைப் போட்டுவிட்டு இரண்டு, மூன்று நாள்கள் காத்திருக்க வேண்டும். இவ்வளவு சிரமம் ஏற்படுவதால், 300 ரூபாய் குறைந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து தங்களுடைய வீட்டு வாசலிலேயே விற்றுவிடுகிறார்கள். இதிலிருக்கும் முறை எல்லா விவசாயிகளுக்கும் பயனளிக்கவில்லை’’ என்றார்.

ஜூம் செயலி மூலம் பேசிய ப.சிதம்பரம்

பின்னர் பேசிய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ``மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு சமூகத்துக்கு எதிரான காரியங்களைச் செய்துவருகிறது. காங்கிரஸ் ஆட்சி இருந்தவரை பி.எஸ்.என்.எல் பொதுத்துறை நிறுவனத்தைப் பாதுகாத்தோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு தொலைத் தொடர்புத்துறையில் தனியாருக்கு தாராளமயமாகக் கொடுத்து பி.எஸ்.என்.எல் என்ற பொதுத்துறை நிறுவனத்தையே அழித்தவர் இந்த மோடி.

தற்போது, தனியாரிலும் அரசியல் செய்கிறார். ஒரே தனியார்தான் இருக்க வேண்டும். அதுவும் தன் நண்பராகத்தான் இருக்க வேண்டும் என்று மோடி நினைக்கிறார். அதற்காகத்தான் ஏர்செல்லை முடக்கி திவாலாக்கினார். இப்போது, `ஏர்டெல்’ நிறுவனத்தை அழித்துக்கொண்டிருக்கிறார். கடைசியாக 130 கோடி மக்களுக்கான ஒரே சேவையை ஜியோவிடமிருந்து மட்டுமே பெற வேண்டும் என்று திட்டம்போட்டுச் செயல்படுத்திவருகிறார். இதே நிலைதான் இந்திய விவசாயத்துக்கும் நடந்துகொண்டிருக்கிறது. இனிமேல், ஒப்பந்த விவசாயம்தான் செய்ய வேண்டும் என்ற நிலையையும் மோடி ஏற்படுத்துவார்’’ என்றார் காட்டமாக.

Also Read: `மதிப்பு அப்படியே இருக்கும்!’- சோனியாவுக்குக் கடிதம்; காங்கிரஸில் இருந்து விலகிய குஷ்பு

இந்த மாநாட்டில், மத்திய அரசுக்கு எதிராக மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ``2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது,`விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகக் கூட்டுவோம்’ என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அமர்ந்தார் மோடி. இதுவரை அந்த வாக்குறுதியை மோடி நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி, குறைந்தபட்ச ஆதாரவிலையை உறுதி செய்யும் வகையில் கூட்டமைப்பு வசதிகளைக்கூட ஏற்படுத்தவில்லை. அதற்கான நிதியையும் ஒதுக்கவில்லை. இதன் காரணமாக, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அவர்களுடைய கடன் சுமையும் கூடியிருக்கிறது. விவசாயிகளின் தற்கொலை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. இதற்கு முழுக்க முழுக்கக் காரணம், மோடி ஆட்சியின் தவறான விவசாயக் கொள்கைதான்.

கூட்டத்தின் ஒரு பகுதி

இந்தநிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகம் வகையில், கடந்த ஜூன் 5-ம் தேதி, மூன்று அவசரச் சட்டங்களை பா.ஜ.க அரசு பிறப்பித்திருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில், `விவசாயம்’ முழுக்க முழுக்க மாநிலப் பட்டியலில் இருப்பதாகும். இது தொடர்பாக, சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது. இந்த அவசரச் சட்டம், கூட்டாட்சி தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல். விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி களமிறங்கியிருக்கிறார். இதன் மூலம் இந்திய விவசாயிகளிடையே மிகப்பெரிய எழுச்சியும் நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கின்றன. பா.ஜ.க அரசின் விவசாய விரோதப் போக்கை தோலுரித்துக் காட்டிய தலைவர் ராகுல் காந்தியை இந்த மாநாடு மனதாரப் பாராட்டுகிறது.

பா.ஜ.க-வின் விவசாய விரோதச் செயல்களுக்கு அ.தி.மு.க துணைபோயிருக்கிறது. தமிழக நலன்கள் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்க்க அ.தி.மு.க-வுக்கு முதுகெலும்பு இல்லை. மடியில் கனம் இருப்பதால், மத்திய அரசுக்கு அடிமை அரசாகச் செயல்பட்டுவரும் அ.தி.மு.க ஆட்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

உத்தரப்பிரதேசத்தில், பாலியல் வன்கொடுமைக்கு பலியான தலித் பெண் விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனமாக இருக்கிறார். இதன் மூலம் பா.ஜ.க ஒரு தலித் விரோதக் கட்சி என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. பலியான தலித் பெண்ணுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீதி கேட்டு, வரும் 17-ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மெழுகுவத்தி ஏற்றி, கண்டனக் குரல் எழுப்ப வேண்டும். இந்தப் பிரச்னையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை உத்தரப்பிரதேச காவல்துறை தாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்’’ என்று தீர்மானத்தின் சாரம்சமாக குறிப்பிட்டிருந்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/congress-leaders-criticize-bjp-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக