Ad

திங்கள், 12 அக்டோபர், 2020

கமலின் `அரசியல்'; அது சரி,`டூபாக்கூர்'னா என்னங்க? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 7

பிக்பாஸ் நிகழ்ச்சி சற்று மெதுவாக நகர்வது போல் தோன்றினாலும் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். போட்டியாளர்கள் செய்யும் பிழைகளை அவர்களின் முகமும் மனமும் கோணாதவாறு கண்ணியமான எல்லையில் சுட்டிக் காட்டும் நாகரிகத்தையும் பண்பையும் கமல் எப்போதும் பின்பற்றுகிறார். ‘அதிரடியாக’ எதையாவது செய்து நிகழ்ச்சியின் விறுவிறுப்பை செயற்கையாக கூட்ட வேண்டும் என்பதற்காக எந்த மசாலாவையும் அவர் இணைப்பதில்லை. இதர மொழி நிகழ்ச்சிகளில் அவ்வாறு நடப்பதாகச் சொல்கிறார்கள்.

கமல் சொல்லும் போது பள்ளிக்கூட மாணவர்கள் மாதிரி பவ்யமாக கேட்டுக் கொள்ளும் போட்டியாளர்கள், அவர் தலை மறைந்ததும் “ஏண்டா என் பென்சிலை எடுத்தே?” என்று அடுத்த கணமே குடுமியைப் பரஸ்பரம் இழுத்துக் கொள்கிறார்கள்.

பிக்பாஸ் - நாள் 7

இன்று கமல் அணிந்து வந்திருந்த உடை அட்டகாசமாக இருந்தது. “இன்று ஞாயிற்றுக்கிழமை, ஓய்வு நாள். கொரோனா காலத்தில் வீட்டில் நாம் இருக்கும் நாள்கள் கூடிவிட்டன. ஆனால் பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கு ஓய்வு என்பதே இல்லை. சில சதவிகித ஆண்கள் சமையலறைப் பணிகளைப் பங்கிட்டுக் கொண்டாலும் பெரும்பாலும் அப்படியில்லை. தேசிய வளர்ச்சியில் பெண்களுக்கு அதிக பங்குண்டு. அதற்கான அங்கீகாரம் அவர்களுக்குத் தரப்பட்டாக வேண்டும்” என்று சமையல் அறை அரசியலைப் பற்றி கமல் பேசியது சிறப்பு.

கொரோனா காலகட்டத்தில் நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் பற்றியும் குறிப்பிடுவதாக அவரது உரை இருந்தது.

பிக்பாஸ் வீட்டின் உள்ளே எட்டிப் பார்த்தால் பாலா மற்றும் சனத்திற்கு இடையேயான உரசலின் சூடு இன்னமும் தணியவில்லை. வாக்குவாதம் போய்க் கொண்டேயிருக்கிறது. “நான் பொதுவாத்தாங்க சொன்னேன்... உங்களைத் தனிப்பட்ட முறைல சொல்லலை” என்று மன்னிப்பு கேட்கும் நோக்கில் பாலா பேசினாலும் சனம் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர் என்கிற முறையில் அது தன்னைப் பாதிக்கிறது என்று நினைக்கிறார் சனம். தன்னை மட்டுமில்லாமல் அப்படி பங்கேற்ற இதர மாடலிங் கலைஞர்கள் அனைவரையும் அது இழிவுப்படுத்துகிறது என்று கருதுகிறார். எனவே தன் பிடிவாதத்தை தொடர்கிறார்.

“உன் கருத்துதான். மறுக்கலை ஆனா அதை நீ தன்மையா சொல்லியிருக்கணும்” என்று ஆரி, பாலாவிற்கு தந்த ஆலாசனை பொருத்தமான நேரத்தில் சரியாக தரப்பட்டதொன்று.

அதே துறையில் இருப்பவர் என்பதால், “ஏம்ப்பா. நான் சொன்ன கருத்து உங்களைப் பாதிச்சதா?” என்று சம்யுக்தாவை நோக்கி பாலா கேட்க, அவர் ‘இல்லை’ என்று பாலாவிற்கு ஆதரவு தர "அப்புறம் என்ன?" என்பது மாதிரி பாலா நகர்ந்து போனார்.

பிக்பாஸ் - நாள் 7

பெண்கள் எத்தனை நெருக்கமாகப் பழகினாலும் அல்லது பழகுவது போல் தோன்றினாலும் அது ஒரு மாயை. ஏதோவொரு நுட்பமான விரோதப்புகை அவர்களுக்குள் மெல்ல கமழ்ந்து கொண்டேயிருக்கும் என்பதற்கு சனம் – சம்யுக்தாவின் உறவு ஒரு நல்ல உதாரணம்.

“பிரச்னை வரும்-னு தெரியும். அதனாலதான் நான் சபைல சொல்லலை. கமல் சார் அழுத்திக் கேட்டாருன்னுதான் சொன்னேன்" என்று தன் தரப்பு நியாயத்தை தொடர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார் சனம்.

மிக எளிமையான விஷயம் இது. “ஏதோ ஒரு ப்ளோல... தெரியாம சொல்லிட்டம்மா. இதை விட்டுடலாமே’ என்று சனத்திடம் பாலா சொல்லியிருந்தால் விஷயம் முடிந்திருக்கலாம். ஆனால் அவரும் தொடர்ந்து வீம்பு காட்டுகிறார்.

“எக்சர்சைஸ் பண்ணிட்டு அப்படியே சமையல் பொருள்களைத் தொடாதே” என்பது தொடங்கி சனம் முன்னர் செய்த சின்ன சின்ன விஷயங்கள் பாலாவின் மனதை நோகடித்திருக்கலாம். அதுவே இந்த வீம்பிற்கு ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். எல்லாமே பட்டர்ஃபிளை எஃபெக்ட்தான் (பட்டாம்பூச்சி விளைவு). முன்னர் நிகழ்ந்த பல்வேறு அழுத்தங்களை மனம் சேகரித்துக் கொண்டு வேறு எங்கோ வெடிக்க வைக்கிறது; பிடிவாதம் பிடித்து முரண்டு செய்கிறது.

அகம் டிவி வழியாக உள்ளே வந்தார் கமல். பாலாவிற்கும் சனத்திற்கும் இடைவிடாமல் நிகழ்ந்து கொண்டிருந்த வாதத்தைப் பார்த்து விட்டு, பாலாவை நோக்கி, "‘மீண்டும் கிளர்றேன்னு நெனச்சுக்காதீங்க. ஒருவரின் அங்கீகாரத்தை நாம் போகிற போக்கில் ‘டப்பென்று’ கிண்டலடிக்கக்கூடாது. நீங்க கூட ஊசி போட்டு உடம்பை ஏத்தினீங்கன்னு சொன்னா உங்களுக்கு வலிக்கும் இல்லையா. 'ஆளவந்தான்' திரைப்படத்திற்காக நான் கஷ்டப்பட்டு உடம்பை ஏத்திய போது அப்படிச் சொன்னாங்க.” என்ற கமல்,

"டுபாக்கூர் –ன்னு சொல்லிட்டீங்களே... அதற்கு அர்த்தம் தெரியுமா... எனக்கும் தெரியாது” என்றார் ஜாலியாக.

பிக்பாஸ் - நாள் 7
இந்த வார்த்தையின் பொருள் தேடிய போது, ‘பிரிட்டிஷ் இந்திய காலத்தில், பல மொழிப் புலமை கொண்டிருந்தவர்களை ‘துபாஷி’ என்றிருக்கிறார்கள். ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே இருந்த மொழித் தடையைக் கடக்க இவர்கள் பாலமாக இருந்தார்கள். சமயங்களில் இவர்கள் இந்தத் திறமையைப் பயன்படுத்தி மாற்றிச் சொல்லி ஏமாற்றியதால் ‘டுபாக்கூர்’ என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டார்கள்’ என்ற கருத்து இருக்கிறது. ‘துபாஷிகள்’ என்கிற சொல் கிண்டலாக மருவியிருக்கலாம்.

கமலின் இந்த விளக்கம் சனத்திற்கு ஆதரவாக இருந்ததால் அவர் ‘கரகாட்டக்காரன்’ செந்தில் மாதிரி முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். பாலாவோ ‘என்னமோ சொல்றீங்க சார்... அதெல்லாம் கரெக்ட்டுதான்... ஆனா... இவங்க என்னவெல்லாம் பேசினாங்க தெரியுமா?!' என்கிற பிடிவாத முகத்துடன் காணப்பட்டார்.

‘ஓகே.. நம்ம ‘ஹார்ட் சர்ஜரியை’ தொடர்வோமா?’ என்று ‘Heartbreak’ விஷயத்திற்கு வந்தார் கமல். வந்த முதல் நாளில் ஒருவரையொருவர் எப்படி மதிப்பிட்டார்கள்... பிறகு அது ஒரு வாரத்தில் எப்படி மாறியிருக்கிறது’ என்பதை அறிந்து கொள்வதே இந்தச் சடங்கின் நோக்கம்.
ஆனால் இந்தச் சடங்கு ‘Heart... Heartbreak’ என்று மீண்டும் அதே பாணியில் செய்யப்பட்டதால் சற்று சலிப்பாக இருந்தது. வேறு முறையில் செய்திருக்கலாமோ?

ஓகே... இந்தச் சடங்கின் தாத்பர்யம் என்னவென்று பார்த்தால், ‘நாம் சிலரை பார்த்த முதல் கணத்திலிருந்தே. அல்லது பழகிய சில மணி நேரங்களிலேயே வெறுக்கத் துவங்கி விடுகிறோம். தவறாக மதிப்பிட்டு விடுகிறோம். அந்த மதிப்பீட்டையே வாழ்நாள் பூராவும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். ‘அந்த ஆள் எப்படின்னு பார்த்தீங்கன்னா’ என்று நம் முன்தீர்மான கருத்துக்களை மற்றவர்களிடமும் பரப்பிக் கொண்டிருக்கிறோம். சம்பந்தப்பட்ட ஆசாமியை இன்னமும் புரிந்து கொள்வதற்கு நாம் எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை.

பிக்பாஸ் - நாள் 7

இந்தச் சடங்கின் மூலம் இந்த உண்மை நமக்குப் புலப்படுகிறது. முதல் நாளில் வெறுக்கப்பட்ட சில நபர்கள், ஒரு வாரம் கழிந்த பிறகு ‘பிடித்த நபர்களாக’ மாறிப் போனார்கள். நிலைமை தலைகீழாகியிருக்கிறது. உடைந்த இதயங்கள் இணைந்திருக்கின்றன.

இதை நடைமுறையிலும் நாம் பின்பற்ற முயலலாம். நமக்குப் பிடிக்காத ஓர் ஆசாமியிடம் உள்ள நேர்மறையான குணங்களை கருத்தில் கொண்டு இன்னமும் அதிகமாகப் பழகி அவரைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். இதன் மூலம் கசந்து போன சில உறவுகள் இனிமையாவதற்கு வாய்ப்புண்டு. (‘சண்டை கூடினால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது’).

‘Heartbreak’ சடங்கிற்காக முதலில் அழைக்கப்பட்ட போது ‘What is the procedure to change the room?” என்று ‘சாம்பு மவனாக’ மாறி வெள்ளந்தியாக கேட்டார் ரியோ.

“சார்... மீண்டும் இதைச் செய்யணுமா... எழுந்து வர முடியல... கால் வலிக்குது” என்று நிஷா ஜாலியாக பாவனை செய்தபோது "கைலதானே குத்தப் போறீங்க... வாங்க!” என்று கிரேஸி மோகன வாசனையுடன் கமல் அடித்த ‘கவுண்ட்டர்’ ஜாலியானது.

“மாடலிங் துறையில் உள்ள நல்ல விஷயங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லாம்" என்று பாலாவிற்கும் சனத்திற்குமான உரசலைப் பற்றி அபிப்ராயம் சொன்ன சம்யுக்தாவின் கருத்து அபாரமானது. சுருக்கமாகப் பேசினாலும் ‘நறுக்’கென்று பேசுகிறார் சம்யுக்தா.

நிஷாவிற்கு ஸ்டாம்ப் குத்த ரேகா முயன்ற போது மூடியைக் கழற்றவில்லை. இதை நிஷா சுட்டிக் காட்டினார். பிக்பாஸின் துவக்கத்தில் இதே பிழையைச் செய்த நிஷா, இப்போது மற்றவரின் பிழையைச் சுட்டிக் காட்டுமளவிற்கு முன்னேறியிருக்கிறார். பாராட்டுக்கள்.

பிக்பாஸ் - நாள் 7
‘அதிகம் பழகவில்லை’ என்கிற காரணத்திற்காக ஷிவானியும் ஆஜித்தும் எதிர்மறை முத்திரைகளை அதிகம் பெற்றார்கள். ‘மந்திரிச்சி விட்ட கோழி’ என்பதற்கு உதாரணமாக ஷிவானி இருக்கிறார். மற்றவர்கள் உபதேசம் தரும் போது அவர் முகத்தில் விநோதமான பாவங்கள் தெறிக்கின்றன. அப்போதும் அவர் வாய் திறந்து சரியாக பேசுவதில்லை. ஆஜித்தின் இளம் வயது கூச்சம் இன்னமும் போகவில்லை என்று தோன்றுகிறது.

“சாப்பாடு எல்லோருக்கும் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வார்” என்று ஆரியைப் பற்றிய நேர்மறை குணத்தை ரேகா சுட்டிக் காட்டியது சிறப்பு. இது வீட்டில் உள்ள அனைத்து ஆண்களும் பின்பற்ற வேண்டியது. பாத்திரத்தில் உள்ள அனைத்தையும் வழித்துப் போட்டு மொக்கி விட்டு ‘ஏவ்’ என்கிற சப்தத்துடன் சில ஆண்கள் கிளம்பி விடுவார்கள்.

சுரேஷையும் ரேகாவையும் மனமார பாராட்டி விட்டு, அவர்கள் செய்த உதவியையும் குறிப்பிட்டு விட்டு, சடக்கென்று அவர்களுக்கு ‘உடைந்த இதயம்’ முத்திரையைக் குத்திய வேல்முருகனின் சாமர்த்தியத்தைக் கண்டு ‘அடேங்கப்பா’ என்று வியந்து போனார் கமல். ‘லெஃப்ட்ல கை காண்பிச்சுட்டு ரைட் இண்டிகேட்டர் போட்டுட்டு நேராகச் செல்லும்’ ஆட்டோக்காரர்களின் ராஜதந்திரத்தைப் பின்பற்றினார் வேல்முருகன். உற்சாகத்தில் இவர் துள்ளி துள்ளிக் குதித்தது சற்று விநோதமாக இருந்தது.

இந்த முறை அதிக ‘Heartbreak’களை வாங்கியவர் சுரேஷ். சிலர் அவர் மீதிருந்த விமர்சனங்களினால் குத்தினார்கள். சிலர் அவர் மீது பிரியம் இருந்தாலும் ‘கொஞ்ம் மாத்திக்கலாம் சார்’ என்று சந்தர்ப்பம் தரும் உத்தேசத்தில் குத்தினார்கள். ‘துணிச்சலாக எல்லாவற்றையும் சொல்லி விடுபவராக இருப்பதால், அவரை அண்டியிருந்தால் நமக்குப் பாதுகாப்பு’ என்று சிலர் நினைத்திருக்கலாம்.

பிக்பாஸ் - நாள் 7
பிக்பாஸ் போட்டியாளர்களில் அதிகம் வெறுக்கப்படுபவராக சுரேஷ் இருக்கிறார். சமூகவலைத்தள எதிர்வினைகளில் இது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால் இந்த விளையாட்டை அவர்தான் அதிகம் புரிந்து கொண்டு வந்திருப்பவராகத் தோன்றுகிறது. அடிப்படையில் கோபமும் Obsessive–compulsive disorder என்கிற உளநிலையும் கொண்டிருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்காக அவற்றை தாம் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.

அதே சமயத்தில், ‘நம்முடைய அடிப்படையான இயல்பை விட்டு விட வேண்டாம். மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்லி விடலாம். மூடி மறைத்து இயல்பற்ற தன்மையில் பழக வேண்டியதில்லை’ என்பது அவரது நோக்கமாக இருக்கிறது. இதையேதான் சனத்திற்கும் ரேகாவிற்கும் அவர் உபதேசம் செய்கிறார். ‘நமத்துப் போன பட்டாசுங்க’ என்று கிண்டல் செய்கிறார்.

‘Heartbreak’ சடங்கில் அதிக எதிர்மறை முத்திரையை சுரேஷ் பெற்றாலும் வீட்டுத் தலைவருக்கான தேர்தலில் அவர் அதிக வாக்குகளைப் பெற்று தேர்வானதில் இருந்து அவரை விருப்பும் – வெறுப்புமாக அணுகும் நபர்கள் பிக்பாஸ் வீட்டில் அதிகம் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சுரேஷிடம் நேர்மறையான குணாதிசயங்களும் இருக்கின்றன. சனம் தொடர்பான உரசலில் பாலாவிற்கு தகுந்த உபதேசத்தை அளித்தார். வேல்முருகனுக்கு தன் சட்டையைத் தந்து உதவியிருக்கிறார். இந்தப் பண்புகளோடு இணைத்துதான் சுரேஷை மதிப்பிட வேண்டும். அவரே முன்பு ஒருமுறை குறிப்பிட்டபடி, ‘அவர் ஒரு கடுமையான போட்டியாளராக இருப்பார்’ என்றுதான் தோன்றுகிறது.

கடந்த முறையோடு ஒப்பிடும் போது இம்முறை குறைந்த ‘heartbreak’களைப் பெற்றவர் ஷிவானி. இவர் மற்றவர்களிடம் ஒட்டாமல் இருப்பது காலை நடனத்திலேயே தெரிந்து விடுகிறது. தனக்கு இணக்கமானவர்களுடன் மட்டுமே அதிகம் பழகும் இவரது குணாதிசயம் மற்றவர்களால் இன்னமும் அதிகமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில் இதுவே இவருக்கு எதிரானதாக மாறி விடும்.

பிக்பாஸ் - நாள் 7

ரம்யா ஒரு பொறுப்பற்ற, ஜாலியான கேப்டன் என்பது மாதிரியான சித்திரம்தான் இதுவரை நமக்கு கிடைத்தது. ஆனால் நமக்கு காண்பிக்கப்பட்ட காட்சிகளையும் தாண்டி அவர் சில பொறுப்பான முயற்சிகளையும் நிரந்தர இன்முகத்துடன் செய்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

‘தேர்தல் இல்லாமல் ஒருவர் தலைவரானால் இப்படித்தான்’ என்பது போல் சமகால தமிழக அரசியல் சூழலையொட்டி கமல் நையாண்டி செய்தது சுவாரஸ்யம். ஆனால், ‘யோசிச்சு ஓட்டு போடுங்க’ என்பதையே பல முறை சொல்வது அதீதமாக இருக்கிறது. இது அவருக்கே தெரிந்ததோ, என்னமோ ‘வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அப்படித்தான் சொல்வேன்’ என்று பிடிவாதம் காட்டினார்.

‘கொரியாவில், உணவை வீணடிக்கும் குடும்பங்களுக்கு அபராதம் விதிக்கிறார்கள். எனவே இங்கிருக்கும் வசதிகளை பொறுப்பாகப் பயன்படுத்துங்கள்’ என்று உபதேசம் செய்தார் கமல்.

இது தொடர்பாக எனக்கொரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. அது சம்பவமா அல்லது கதையா என்று தெரியாது.

இந்திய நாட்டிலிருந்து ஜெர்மனிக்குச் சென்ற ஒரு குழு, ஓர் உணவகத்திற்கு சென்றிருக்கிறது. அதில் சிலர் உணவுப்பொருள்களை வீணாக்கி பெரும்பாலும் தட்டில் மிச்சம் வைத்து விட்டிருக்கிறார்கள். அதற்கு கடுமையான அபராதத்தை உணவகம் விதித்திருக்கிறது. “ஏன் இப்படி... சாப்பாட்டிற்கான கட்டணத்தைத்தான் நாங்கள் செலுத்திவிட்டோமே?” என்று நம் ஆட்கள் புரியாமல் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள்.

பிக்பாஸ் - நாள் 7

“இது நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு.. என்று எங்கள் நாட்டின் வளங்கள் மற்றும் எங்கள் மக்களின் உழைப்பின் மூலம் உருவான உணவு. இதை வீணடிப்பதின் மூலம் எங்களின் இயற்கை வளங்களை பொறுப்பற்ற முறையில் நீங்கள் கையாண்டிருக்கிறீர்கள். எனவேதான் இந்த அபராதம்" என்று பதில் சொல்லிருக்கிறார்கள்.

அதுவொரு வணிகம் என்று சுயநல லாப நோக்கோடு பிரித்துப் பார்க்காமல் தேச நலனையும் அதனோடு இணைத்துப் யோசிப்பதால்தான் மேற்கத்திய நாடுகள் சுற்றுச்சூழல் விஷயத்தில் மிக கவனமாக செயலாற்றுகிறார்கள்.

ஆக... புதிய தலைவர் சுரேஷ்... 'சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்..ஏ’ என்கிற ‘அம்மாவாசை’ கெத்தோடு அணி பிரிக்கும் விஷயத்தில் இறங்கினார். ‘சமையல் வேலைதான் கடினமானது. எனவே ஏற்கெனவே அதில் இருந்தவர்கள், வேறு அணிக்குச் செல்வதை அவர்களாகத் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்று வாய்ப்பு அளித்தவர்...

‘ஒவ்வொரு அணியிலும் வயதில் இளையவர் கேப்டனாக இருக்க வேண்டும்’ என்றொரு விதியை அமைத்தது நல்ல விஷயம். ஆனால் நடைமுறையில் எது எத்தனை தூரம் சாத்தியமாகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

அணி பிரிப்பதில் சனத்திற்கு ஏதோவொரு விஷயம் முரண்பட தன் ஆட்சேபத்தைக் காட்டினார். "சொல்லும் போது கவனமாக கேளுங்கம்மா” என்று சுரேஷூம் அதை வழிமொழிவது போல சம்யுக்தாவும் இடித்துரைக்க நிகழ்ச்சி முடிந்தது.

பிக்பாஸ் - நாள் 7

‘வாரம் ஒரு புத்தக அறிமுகம்’ என்கிற பகுதியில் கமல் ஒரு புத்தகத்தைக் குறிப்பிட்டார். கடந்த வாரத்தில் அவர் அறிமுகப்படுத்திய நூல் ‘ஆல்பெர்ட் காம்யூ’வின் ‘The Plague’. (பிரெஞ்சில்: La Peste). இது தமிழில் ‘கொள்ளை நோய்’ என்கிற தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. எனவே ‘Pandemic’ என்கிற சொல்லைப் பயன்படுத்தி விட்டார் கமல். இது சிறிய விஷயம்தான் என்றாலும் நிச்சயம் பிழையான அறிமுகம். கமலின் பரிந்துரையால் அந்த நூலைத் தேடியவர்களுக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் இதை மழுப்பும் நோக்கில், "எனக்கென்ன பிரெஞ்ச்சா தெரியும்?” என்று கமல் இதைக் கடந்து போனது நெருடல்.

Also Read: `குழந்தை' சுரேஷ், கைகொடுத்த அனிதா; தொடரும் சனம் vs பாலா... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 6

சரி, இந்த வாரம் அவர் அறிமுகப்படுத்திய நூல் ‘அவமானம்’. சாதத் ஹசன் மண்ட்டோ எழுதியது. பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்த மண்ட்டோ, பாகிஸ்தானைச் சேர்ந்த உருது எழுத்தாளர். நம்மூர் புதுமைப்பித்தன் போல அடித்தட்டு மக்களின் பிரச்னைகளை கறுப்பு நகைச்சுவையோடும் பதற வைக்கும் உருக்கத்தோடும் எழுதியவர். குறிப்பாக இந்தியப் பிரிவினையின் போது எழுந்த வன்முறையிலும் கலவரத்திலும் எளிய மக்கள் அடைந்த துன்பங்களை மிக அழுத்தமாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்தியவை இவரது கதைகள்.

பிக்பாஸ் - நாள் 7

இது தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான தகவலையும் வெளிப்படுத்தினார் கமல். ‘ஹேராம்’ திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தவர் நவாஸூதின் சித்திக்கி. இடப்பற்றாக்குறை காரணமாக நவாஸின் பாத்திரம் வெட்டப்பட்டது. இதையறிந்த அவர் மிகவும் வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தியிருக்கிறார். ஆனால் பின்னாளில் அவர் சிறந்த நடிகராக பரிணமித்து ‘மண்ட்டோ’வின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் திரைப்படத்தில் எழுத்தாளராக நடித்தது பிரமிக்கத்தக்க வளர்ச்சி என்பதை கமல் குறிப்பிட்டுச் சொன்னது சிறப்பு.

மண்ட்டோவின் புத்தகத்தோடு இன்னொரு நூலையும் கமல் அறிமுகப்படுத்தியிருக்கலாம். அது,

"பிஸிபேளாபாத் செய்வது எப்படி?”



source https://cinema.vikatan.com/television/kamal-haasan-political-punch-dialogues-bigg-boss-tamil-season-4-day-7-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக