Ad

திங்கள், 19 அக்டோபர், 2020

குன்னூர்: வரவேற்பைப் பெறும் ஜாதிக்காய் ஊறுகாய்... அசத்தும் அரசு பழவியல் நிலையம்!

நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை தோட்டக்கலைத் துறையின் பங்கு முக்கியமான ஒன்றாக‌ உள்ளது. ஊட்டி‌ அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, ஊட்டி‌ தேயிலை பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா உள்ளிட்ட ‌பல பூங்காக்கள் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

ஜாதிக்காய் ஊறுகாய்

மேலும் குன்னூர், பர்லியார் உள்ளிட்ட பகுதிகளில் அரசு பழப் பண்ணைகளும் உள்ளன. இங்கு விளையக்கூடிய பழங்களைக் கொண்டு குன்னூரில் உள்ள அரசு பழவியல் நிலையத்தில், ஜாம், ஜெல்லி, ஜூஸ் ஊறுகாய் போன்றவை தயாரிக்கப்பட்டு அரசே நேரடியாக விற்பனை செய்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக தயாரிப்புப் பணிகள் சில காலம் நிறுத்தப்பட்டது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 500 கிலோ ஜாதிக்காய்களைக் கொண்டு ஊறுகாய் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஜாதிக்காய்

இது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "நீலகிரியில் விளையும் ஸ்ட்ராபெரி, பேரிக்காய், பிளம்ஸ் மட்டுமின்றி திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி போன்றவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கப்படுகிறது. மேலும், ஜாதிக்காய், மால்மட் ஆரஞ்சு, லக்கோட் போன்றவற்றில் ஜாம், ஊறுகாய் போன்றவற்றையும் தயாரிக்கிறோம். 2 மாதங்கள் பணி நிறுத்தப்பட்ட நிலையில், முதல் கட்டமாக கடந்த மே மாதம் 300 கிலோ ஜாதிக்காய்களைக் கொண்டு ஊறுகாய் தயாரிக்கப்பட்டது. தற்போது 500 கிலோ ஜாதிக்காய்களைக் கொண்டு ஊறுகாய் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் பணியாற்றி வருகின்றனர்" என்றார்.

ஜாதிக்காய் ஊறுகாய் குறித்து நம்மிடம் பேசிய தோட்டக்கலைத்துறையின் மற்றொரு பெண் அதிகாரி, "மருத்துவ குணங்கள் நிறைந்த ஜாதிக்காய் ஊறுகாய் தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அரசே உற்பத்தி செய்து, நேரடியாக விற்பனை செய்வதால், அரை கிலோ ஜாதிக்காய் ஊறுகாய் 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஜாதிக்காய் ஊறுகாய்

ரத்தத்தில் கொழுப்பை குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்த புற்றுநோயைத் தடுப்பதிலும் ஜாதிக்காய் பயன்படுவதாகவும் கூறப்படுகிறது. இவற்றை தோட்டக்கலைக்குச் சொந்தமான கடைகளில் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/coonoor-nutmeg-pickle-sales-booming-in-post-lockdown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக