Ad

திங்கள், 12 அக்டோபர், 2020

நெருங்கும் மண்டலபூஜை... இந்த ஆண்டு சபரிமலை யாத்திரை மேற்கொள்வது எப்படி?

ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் தொடங்கியதுமே சபரிமலை யாத்திரையும் அதற்கான விரதமும் தொடங்கிவிடும். உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு விரதமிருந்து இருமுடிகட்டி யாத்திரை வருவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக வழக்கம்போல் அந்த யாத்திரை நடைபெறுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. அரசு, பக்தர்கள் வருகைக்குப் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. குறிப்பாக ஒரு நாளைக்கு 1,000 பக்தர்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2,000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மண்டலபூஜை மற்றும் மகர விளக்கு நாள்களில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி.

சபரிமலை கோயில்

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்துக்குள்ளாக கோவிட் பரிசோதனை செய்து அது நெகட்டிவ் என்ற சான்றிதழோடு வரவேண்டும். நிலக்கல்லில் மீண்டும் சோதனை செய்து அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதிலும் 10 வயதிற்குக் குறைந்த மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதியில்லை. கேரளாவைச் சேர்ந்த இந்து அமைப்புகள் இந்த ஆண்டு சபரிமலை யாத்திரைக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை எந்த அளவுக்குப் பின்பற்ற முடியும் என்று தெரியவில்லை என்பதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கேரள உயர்நீதிமன்றத்தை அணுகவும் முடிவுசெய்துள்ளனர். இந்த நிலையில் ஆண்டுதோறும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும் உலகெங்கும் வாழும் ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மூத்த குருசாமி அரவிந்த் சுப்ரமண்யத்திடம் கேட்டோம்.

"சுவாமியே சரணம் ஐயப்பா என்னும் நாமமும் சபரிமலை யாத்திரையும் கோடானகோடி ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளில் கலந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாகவே மண்டலபூஜையும் சபரிமலை யாத்திரையும் பல்வேறு சங்கடங்களுக்குள்ளாகி வருகிறது. அதிலும் இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. வயது காரணமாகப் பல மூத்த குருசாமிகளே யாத்திரை வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவிட் பரிசோதனை செய்த 48 மணி நேரத்துக்குள் வரவேண்டும் என்றால், அதிகபட்சமாகத் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வரமுடியும். இந்தியாவுக்கு வெளியேயிருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு சாத்தியமே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மத்தியில் பல்வேறு விதமான குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. விரதம் கடைப்பிடிப்பது, யாத்திரை மேற்கொள்வது தொடர்பான பல விளக்கங்களை பக்தர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்த ஆண்டு சபரிமலை யாத்திரை மேற்கொள்வது எப்படி?

பெரியபாதைக்கு அனுமதியில்லை!

பெரியபாதையில் சென்று ஐயப்பனை தரிசிப்பது பல நூறாண்டுப் பாரம்பர்யம். பெரிய பாதையில் செல்லும் ஐந்து நாள்களே அடுத்த 360 நாள்களுக்குத் தேவையான உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிப்பன என்று கருதுவார்கள் ஐயப்ப பக்தர்கள். அத்தகைய பெரியபாதை யாத்திரை இந்த ஆண்டு தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோன்று நெய் அபிஷேகம் நடைபெறுவது குறித்த சந்தேகமும் உள்ளது. இதுபோன்று சபரிமலை யாத்திரையின் முக்கியமான இந்த கூறுகள் கேள்விக்குள்ளாவது பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பம்பையில் ஷவர், ரூ.100-க்கு தண்ணீர்... சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனிக்க வேண்டியவை!

சபரிமலை யாத்திரையும் விரதத்தைக் கடைப்பிடித்தலும்...

சுவாமி ஐயப்பனே சபரிமலை வந்து தரிசனம் செய்யக் கடைப்பிடிக்க வேண்டிய விரதமுறைகளை ராஜசேகர பாண்டிய மன்னனுக்குத் தெரிவித்தார் என்கிறது பூதநாத உபாக்யானம் என்னும் நூல். பிரமாண்ட புராணத்தில் வரும் இந்த நூலில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின் படியே நாமும் சபரியாத்திரையை மேற்கொண்டுவருகிறோம். இந்த ஆண்டு சபரிமலை சென்று சுவாமியை தரிசனம் செய்வதில்தான் கட்டுப்பாடுகளும் சிக்கல்களும் எழுந்துள்ளதே தவிர விரதத்தைக் கடைப்பிடிப்பதில் யாருக்கும் எந்த சிக்கலும் இல்லை.

சபரிமலை

வழக்கமாக பக்தர்கள் பலரும் பிரதோஷம், ஏகாதசி, சஷ்டி விரதங்களை மேற்கொள்வது வழக்கம். அதேபோன்று ஆண்டுதோறும் ஒரு மண்டல காலம் ஐயப்பனுக்காக விரதம் இருப்பதும் வழக்கம். இந்த் ஆண்டு சபரியாத்திரை போகமுடியவிலை என்றால் அதற்காக விரதத்தைக் கைவிட வேண்டியதில்லை. கட்டாயம் ஒரு மண்டல விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். எனவே தாராளமாக மாலை அணிந்து விரதத்தை மேற்கொள்ளலாம். ஒருவேளை சிலருக்கு வழக்கமாக அணியும் முத்திரை மாலையை யாத்திரை மேற்கொள்ளாதபோது அணியலாமா என்று சந்தேகம் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள், அந்த மாலையை அணிந்துகொள்ளாமல் புதிதாக மாலைகள் வாங்கி அதை சுத்தி செய்து அணிந்துகொண்டு விரதம் அனுஷ்டிக்கலாம் என்கிறார்கள் பெரியவர்கள். அப்படி மாலை அணிந்து ஒரு மண்டலகாலம் பூஜை முடித்துத் தாங்கள் இருக்கும் இடத்தையே சபரிமலையாக பாவித்து தங்கள் சக்திக்கு உட்பட்டு விசேஷ பூஜைகள் செய்து அந்த விரதத்தை முடிக்கலாம்.

உள்ளம் பெருங்கோயில்... ஊனுடம்பு ஆலயம்!

பூதநாத உபாக்யானத்தில் சுவாமி ஐயப்பன், பந்தள மகாராஜாவுக்குச் சொல்லும் அறிவுரை ஒன்று உண்டு.

“எனக்கென்று தனியான கோயில் ஒன்று தேவையில்லை. நான் பக்தர்களின் மனதில் அந்தர்யாமியாக இருப்பவன். ஒவ்வொரு ஜீவராசிகளுக்குள்ளும் உறைபவன். ஆனால், ஜீவர் பக்குவமடையும்வரை அவர்கள் ஊனக்கண்ணாலே தரிசிக்க சபரிமலையில் ஓர் ஆலயத்தை எழுப்பு” என்றுதான் அறிவுறுத்துகிறார். எனவே இந்த ஆண்டு தத்வமஸி என்னும் மாபெரும் தத்துவத்தை உணர்ந்து விரதமிருக்க வேண்டும்.

வழக்கம்போல் விரதமிருந்து பெரியபாதை முழுவதும் என்னென்ன வருமோ அந்த வழிநடை சரணங்களை எல்லாம் சொல்லி வழிபடுவோம். எரிமேலிக்கோட்டையே சரணம் ஐயப்பா, பேட்டைதுள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா, கோட்டைப்படியே சரணம் ஐயப்பா, பேரூர்கோடே சரணம் ஐயப்பா, காளைகட்டி ஆசிரமமே சரணம் ஐயப்பா, அழுதா நதியே சரணம் ஐயப்பா, அழுதாநதி ஸ்நானமே சரணம் ஐயப்பா என்று ஒவ்வொன்றாகச் சொல்லி மானசிகமாக 18 படிகளும் ஏறி அபிஷேகம் செய்து தரிசனம் செய்வோம். வழக்கமான பூஜையைவிட மானசீக பூஜைக்குப் பலன் அதிகம். இதை நான் மட்டும் சொல்லவில்லை. பெரிய பெரிய குருசாமிகளிடம் கலந்து பேசி அவர்களின் வாக்காகத்தான் நான் சொல்கிறேன்.

எனவே அவரவர் இருக்கும் இடத்திலேயெ இருந்து மாலையிட்டு விரதத்தைக் கடைப்பிடியுங்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சுவாமி ஐயப்பனுக்கு சர்வரோக நிவாரண தந்வந்தர மூர்த்தி என்ற திருநாமமும் உண்டு. எனவே அவர் அருளால் இப்போது இருக்கும் இந்தப் பிரச்னைகளை எல்லாம் தீர்த்து விரைவில் நமக்கு எதிர்காலத்தில் ஆனந்த தரிசனம் அருள்வார் என்ற நம்பிக்கையோடு வழிபடுவோம். சுவாமியே சரணமையப்பா” என்று கூறினார் அரவிந்த் சுப்ரமண்யம்.



source https://www.vikatan.com/spiritual/temples/how-to-perform-the-mandala-viratham-for-sabarimalai-this-year

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக