Ad

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

பட்டியலின பெண் சமைக்கும் உணவை சாப்பிட மறுத்தார்களா மாணவர்கள்? - குற்றச்சாட்டும், ஆட்சியரின் ஆய்வும்

தமிழகம் முழுக்க உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே மதிய உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், காலை உணவுத்திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 25 - ம் தேதி தொடங்கி வைத்தார். அந்த வகையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பள்ளியில் சமையல் செய்ய, மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த சுமதி என்ற பெண் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

ஆய்வு செய்யும் ஆட்சியர் பிரபுசங்கர்

இந்த பெண் பட்டியலின சமூகத்தை சேந்தவர் என்பதால், 'பள்ளியில் சமையல் பணி செய்யக்கூடாது. அப்படி செய்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்' என்று ஊர் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. சில தினங்களாகவே இந்த பிரச்னை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியரிடம், சமூக ஆர்வலர் ராஜகோபால் மற்றும் தோழர் களம் அமைப்பைச் சேர்ந்தவர்களும் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், மேலைச்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பட்டியலின பெண் சுமதி சமைத்த உணவை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் சாப்பிட்டு பார்த்து பின்னர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடைய பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடமும், 'பட்டியலினப் பெண் சமைத்தால், எங்கள் குழந்தை சாப்பிட முடியாது' என ஒருவர் கூறியுள்ளார்.

ஆய்வு செய்யும் ஆட்சியர் பிரபுசங்கர்

இதையடுத்து கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், 'அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்' என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். இன்னொருபக்கம், இந்த விவகாரத்தைப் பற்றி செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை வீடியோ பதிவு செய்யக்கூடாது என்று செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி தடுத்தார்.

இந்நிலையில், கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், வேலன் செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 25.08.2023 அன்று துவங்கப்பட்டது. இப்பள்ளியில், 30 மாணவர்கள் படித்து வருகிறார்கள். மகளிர் சுய உதவி குழு உறுப்பினரான சேர்ந்த சுமதி அவர்களால் காலை உணவு சமைக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பிற பிரிவினரைச் சேர்ந்த பதினைந்து குழந்தைகள் காலை உணவை புறக்கணித்து வந்ததால், இது தொடர்பாக 29.08.2023 அன்று திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் அவர்களால் குழந்தைகளின் பெற்றோரை அழைத்து, 'பள்ளியில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைத்து குழந்தைகளும் உணவு உண்ண வேண்டும்' என்று தெரிவித்ததை தொடர்ந்து, 30.08.2023 அன்று இதர பிரிவிலிருந்து இரண்டு குழந்தைகள் மட்டுமே காலை உணவை உட்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, 05.09.2023 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர், பள்ளிக்கு திடீர் ஆய்வு செய்து உணவின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

ஆய்வு செய்யும் ஆட்சியர் பிரபுசங்கர்

மேலும். காலை உணவை உண்ணாத 15 குழந்தைகளின் 10 பெற்றோர்களை விசாரணை செய்து கோரியபோது, பாலசுப்பிரமணியம் என்பவர் அருந்ததியர் பிரிவு பெண் சமைத்தால் தம்முடைய குழந்தை உணவு உண்ணாது என்றும் வேண்டுமென்றால் குழந்தையின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்ததையொட்டி, அவர்மீது மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பாலசுப்பிரமணியன் தனது குழந்தையும் காலை உணவை உண்ண சம்மதிக்கிறேன் என மன்னிப்பு கோரியதின் அடிப்படையில், அவர்மீது வழக்கு தொடுக்கப்படாமல் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். மேலும், மீதமுள்ள அனைத்து பெற்றோரும் தங்களது பிள்ளைகளை தொடர்ந்து காலை உணவு உண்ண ஏற்பாடு செய்யப்படும் என கேட்டுக்கொண்டார்கள். அதனைத்தொடர்ந்து, "பள்ளிகளில் எவ்வித பாகுபாடும் காட்டக் கூடாது. இது தொடர்ந்து கண்காணிக்கப்படும்" என்று அனைவருக்கும் அறிவுரையையும், எச்சரிக்கையையும் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/education/school-education/karur-government-school-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக