இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, இந்தத் தலைமுறையின் சிறந்த விளையாட்டு வீரர் என்பதில் சந்தேகமில்லை. கிரிக்கெட் தவிர, தனது ஃபிட்னெஸ் மீது ஆர்வம் கொண்டுள்ளவர், அதற்காக கடினமாக உழைத்து வருகிறார். இதற்கு அவரது உணவுப்பழக்கமும் முக்கிய காரணமாகும்.
விராட் கோலியின் உணவுப்பழக்கம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் பலரிடையே இருப்பதை அறிய முடிகிறது. இது தொடர்பான கேள்விகள் அவ்வப்போது இணையத்தில் டிரெண்ட் ஆகின்றன. இவற்றுக்கெல்லாம் விடை சொல்லும் விதமாக, தனது உணவுமுறை குறித்து மனம் திறந்திருக்கிறார் விராட் கோலி.
34 வயதான விராட் கோலி, தனது உணவுப்பழக்கம் பற்றி கூறியிருப்பதாவது... ``நான் உணவின் மீது பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. சுவையிலும் எனக்கு அக்கறை இல்லை. சாலடுகள் செய்து சாப்பிடுவது என் வழக்கம். என் உணவுகளில் 90 சதவிகிதம் வேகவைத்ததாகத்தான் இருக்கும். மசாலா சேர்த்துக் கொள்வதில்லை. உப்பு, மிளகுடன் கால்சியம் சத்துகள் நிறைந்த உணவை மட்டுமே சாப்பிடுவேன். சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்து பான்- கிரில் செய்வது நல்லது. கறிகள் எடுத்துக் கொள்வது இல்லை, மாறாக பருப்பு மட்டுமே சாப்பிடுகிறேன். நான் ராஜ்மா மற்றும் லோபியா சாப்பிடுகிறேன்; ஒரு பஞ்சாபியால் அவற்றைத் தவிர்க்க முடியாது.
பொதுவாக காலை உணவாக ரொட்டி, ஆம்லெட்டுன் கூடிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் போதும். காலைப்பொழுதில் புத்துணர்ச்சிக்காக கீரை, கருப்பு மிளகு மற்றும் பனீர் சாலட் சாப்பிடுவேன். மதிய உணவில் பருப்புகள், பிரவுன் ரொட்டி, மசித்த உருளைக்கிழங்கு, கீரை மற்றும் காய்கறிகள் இருக்கும். அத்துடன் ஒரு புரோட்டீன் ஷேக்கும் எடுத்துக்கொள்வேன். இரவு நேரத்தில் ரொட்டி, பருப்பு மற்றும் பலவகைப்பட்ட காய்கறிகளுடன் கூடிய உணவு உண்பேன்" என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சைவ உணவுக்கு மாறியது குறித்து விராட் கோலி குறிப்பிடும்போது, ``உடலில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் சைவ உணவுக்கு மாறினேன். என் கழுத்துப்பகுதியை ஒட்டிய முதுகெலும்பில் இரண்டு கட்டிகள் உருவாகின. இது என் கைகளின் நரம்பை பாதித்தது. இதனால் மிகவும் வலியில் அவதியுற்றேன். 15 நிமிடங்கள் கூட என்னால் ஒரேநிலையில் தூங்க முடியாது. அவ்வப்போது வலியால் எழுந்து விடுவேன். மருத்துவ பரிசோதனையில், எனது வயிறு முழுவதும் அமிலத் தன்மையுடன் இருந்தது தெரியவந்தது. எனவே, எனது உணவு முறையை மாற்றும்படி அறிவுறுத்தப்பட்டேன். அதைத் தொடர்ந்து ஒரே இரவில் எனது மொத்த உணவுப் பழக்க வழக்கத்தையும் மாற்றிக் கொண்டேன்" என்கிறார் விராட் கோலி.
source https://www.vikatan.com/health/diet/virat-kohlis-diet-changed-overnight
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக