சே.பாக்கியராசன், செய்திப் பிரிவுச் செயலாளர், நா.த.க
“தேர்தலுக்குத் தேர்தல் நோட்டாவுடன் போட்டி போடும் ஒரு கட்சி, எங்களை விமர்சிப்பது வியப்பாக இருக்கிறது. பா.ஜ.க-வின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமியே ‘அண்ணாமலை யார்... தமிழ்நாட்டில் பா.ஜ.க என்ற ஒரு கட்சி இருக்கிறதா..?’ என்று கேட்டதையெல்லாம் மறந்துவிட்டாரா அண்ணாமலை... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி நாங்கள்தான். அ.தி.மு.க-வின் முதுகில் ஏறிப் பயணித்து, நான்கு சட்டமன்ற இடங்களைப் பிடித்துக்கொண்ட பா.ஜ.க., `நாம் தமிழர் கட்சி இருக்காது’ என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வளவு வீராப்புப் பேசும் அண்ணாமலையால், அந்த நான்கு இடங்களையும் ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலைச் சந்திக்க முடியுமா... அந்தத் தேர்தலில் நாம் தமிழரைவிட அதிக வாக்குகள் வாங்கிக் காட்ட முடியுமா... `தேர்தலைத் தனித்துச் சந்திக்கிறோம்’ என்று சொல்லக்கூட அதிகாரமில்லாதவர் அண்ணாமலை. நாம் தமிழர் வாக்குக்கும் கூட்டத்துக்கும் பணம் கொடுத்து ஆட்களைச் சேர்த்ததில்லை என்பது தமிழகம் அறிந்த உண்மை. ஆனால், பா.ஜ.க நடத்திக்கொண்டிருக்கும் பாதயாத்திரைக்குப் பணம் கொடுத்தும் கூட்டம் சேரவில்லை. தன்னந்தனியாக யாத்திரை போய்க்கொண்டிருக்கும் அண்ணாமலை, தன்னை மக்கள் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காக நாம் தமிழர் கட்சியை வம்புக்கு இழுத்திருக்கிறார். பா.ஜ.க-வைப்போலக் கூட்டணியில் அல்ல, தனித்து நின்று தேர்தலைச் சந்தித்திருக்கிறோம் நாங்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க என்ற கட்சி எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. இருக்கப்போவதும் இல்லை!”
நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க
“உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். ஒரு ஜனநாயக நாட்டில் எதற்கெடுத்தாலும் ஒரு சாரார்மீது வெறுப்பை உமிழ்பவர்களை மக்கள் கண்டிப்பாகப் புறக்கணிப்பார்கள். நாம் தமிழர் கட்சியை மட்டுமன்றி, இந்து மதத்தின் மீதும், இந்து மக்களின் மீதும் தொடர்ந்து வெறுப்பை விதைக்கும் தி.மு.க-வையும் தமிழக மக்கள் தூக்கி எறியும் காலம் தொலைதூரத்தில் இல்லை. ஒருகாலத்தில், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு ஓர் எதிர்க்கட்சியாக நாம் தமிழரைப் பின்பற்றினார்கள். ஆனால், வெகு விரைவிலேயே நாம் தமிழர் கட்சி, தி.மு.க-வுக்கு எதிரான கட்சி கிடையாது என்ற உண்மையை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். அந்தக் கட்சியிலிருந்து பலரும் தற்போது பா.ஜ.க-வைப் பின்தொடர்கிறார்கள் என்பதே கள நிலவரம். தமிழகத்தில் தொடர்ச்சியாக பா.ஜ.க தன்னுடைய வாக்குவங்கியை வெகுவாக வலுப்படுத்திக்கொண்டே வருகிறது. பெரும் அரசியல் மாற்றத்தை பா.ஜ.க செய்துகொண்டிருக்கிறது. அண்ணாமலை தி.மு.க அரசின் ஊழல்களை மக்களிடம் எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்த விவகாரத்தைத் திசை மாற்றவே பா.ஜ.க - தி.மு.க என்று இருக்கும் தமிழக அரசியல் நிலையை, பா.ஜ.க - நாம் தமிழர் என்று மடைமாற்றும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். உண்மையில் சீமான் ஒரு விளம்பரப் பிரியர். எப்போதும் ஏடாகூடமாக ஏதாவது ஓர் எதிர்மறைக் கருத்தைச் சொல்ல வேண்டும். செய்திகளில் இடம்பெற வேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கமாக இருக்கிறது. அவரையும், அவர் கட்சியையும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இதையெல்லாம் கடந்து செல்வதே சரி!”
source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-annamalai-comments-about-naam-tamilar-katchi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக