Ad

வெள்ளி, 14 அக்டோபர், 2022

திமுக-வும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டமும்!

தி.மு.க அரியணை ஏறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்தி திணைப்புக்கு எதிரான போராட்டங்கள். ‘கட்டாய இந்தியை புகுத்தி இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதும் அதன் நீட்சிதான். எனவேதான் அக்டோபர் 15-ஆம் தேதி(இன்று) தி.மு.க இளைஞரணி, மாணவர் அணி சார்பாக இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க அறிவித்துள்ளது. இதற்கு முன் தமிழ்நாடு கண்ட இந்தி திணிப்பு போராட்டங்கள் பற்றி சுருக்கமாக.

முதல் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

1937-ம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் முதல்வராக பொறுப்பேற்ற ராஜாஜி, ‘இனி பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்கும்’ என அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. திருச்சி துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில், அறிஞர் அண்ணா இந்தித் திணிப்பை கண்டித்து ஆற்றிய உரைதான் முதல் எதிர்ப்பு குரலாக ஒலித்தது. இதையடுத்து தந்தை பெரியாரும் இந்தி திணிப்பை எதிர்த்து கருத்து தெரிவித்தார். அதன்பின், தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. திருச்சியிலும், காஞ்சியிலும் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. சிறை நிரப்பும் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டார். இந்தி திணிப்பு எதிரான போராட்டத்தால் நடராசன் , தாளமுத்து இருவரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இப்போராட்டம் மக்கள் போராட்டமாக வெடித்தது. அதை கட்டுப்படுத்த முடியாமல் ராஜாஜி திணறினார். இதனால் 1939-ல் ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியது. பின்னர் ஆட்சி பொறுப்பேற்ற பிரிட்டிஷ் அரசு 1940-ம் ஆண்டு பிப்ரவரி 21-ல் ‘இந்தி கட்டாயம்’ என்ற உத்தரவை திரும்பப் பெற்றது.

அண்ணா , பெரியார்

இரண்டாவது இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்:

இந்திய விடுதலைக்கு பின் முதன் முதலில் இந்தி கட்டாயம் என 1948-ல் அப்போதைய ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது. இதனால் இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டமாக மாறியது தமிழகம். இதை தி.க மற்றும் தமிழ் அமைப்புகள் முன்னெடுத்தன. இந்த போராட்டமும் மக்கள் போராட்டமாக மாறியதால் இந்த உத்தரவை ஓமந்துரார் அரசு திரும்பப்பெற்றது.

மூன்றாவது இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்:

1965-ஆம் ஆண்டு இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது. அலுவல் மொழியாக இருந்த ஆங்கிலம் படிப்படியாக நீக்கப்படும், மத்திய அரசின் சட்டங்கள், ஆணைகள், கட்டளைகள் என அனைத்தும் இந்தியில் மட்டுமே வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு இந்தி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுகவின் அன்றைய மக்களவை உறுப்பினர்கள் நாஞ்சில் மனோகரன், க.ராசாராம், மாநிலங்களவை உறுப்பினர் அறிஞர் அண்ணா ஆகியோர் இந்த அறிவிப்புக்கு எதிராக இந்தியாவின் முதல் கண்டனங்களை பதிவு செய்தனர். கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் எங்கும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் திமுக முழுமையாக செயல் இறங்கியது. திமுகவின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 1965-ஆம் ஆண்டு நடந்த மொழிப்போரில் திமுக பெரும் பங்காற்றியது.1965 ஜனவரி 27-ஆம் தேதி ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என்று கோஷமிட்ட படியே திருச்சி ரயில்வே சந்திப்பு முன்னர் கீழ்ப்பழுவூர் சின்னசாமி தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார். பல மாணவர்கள் இளைஞர்கள் தமிழர்கள் மொழிப்போரில் தங்களது இன்னுயிர்களை நீத்தனர். பல மாணவர்கள் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடினார்கள் . மக்களின் மொழிப்போரில் அஞ்சி கட்டாய இந்தி திட்டத்தை கைவிட மத்திய அரசு முடிவு எடுத்தது.

இந்தி எதிர்ப்பு

நான்காவது இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்:

1986-ஆம் ஆண்டு, பிரதமர் ராஜீவ் காந்தி ‘இந்தியாவிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு இனி புது டெல்லியிலிருந்து வரும் கடிதங்கள் இந்தியில் மட்டும்தான் வரும் என்றார்’. அதோடு, ‘இந்தியா முழுவதும் நவயோதியா பள்ளிகள் தொடங்கப்படும் அப்பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக்கப்படும்’ எனவும் அறிவிகப்பட்டது. மீண்டும் ஒரு மொழிப்போருக்கு இந்த அறிவிப்பு வித்திட்டது. இதனைத் தொடர்ந்து திமுக இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்தியது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 17-வது பகுதியின் 343-வது பிரிவின் நகலை, பொது இடங்களில் தீயிட்டுக் கொளுத்தும் நிகழ்வு பேராசிரியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதனால் தி.மு.க வின் தலைவர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சிறைக்குச் சென்றார்.

இவ்வாறாக தமிழகம் கண்ட இந்தி திணிப்பு போராட்டம் மீண்டும் உருவாகும் சூழல் அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-and-the-struggle-against-imposition-of-hindi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக