இந்த வார ஆனந்த விகடன் இதழில், “இன்று மரப்பாச்சி விளையாட்டும் இல்லை... மரக்குதிரைகளும் இல்லை!” என்ற தலைப்பில் எழுத்தாளர் பாவண்ணனின் பேட்டி வெளியாகியிருக்கிறது. அந்த நீண்ட உரையாடலில் விடுபட்ட கேள்விகளும் பதில்களும் இங்கே இன்னும் விரிவாக...
இந்தப் பேட்டியின் முதல் பகுதி, கீழேயுள்ள இணைப்பில்...
"இலக்கியம் அடுத்தவர்களைப் பற்றி யோசிக்கத்தூண்டும் கூறு என்று சொல்கிறீர்கள். நவீன எழுத்துகளில் அப்படியான ஆகச்சிறந்த எழுத்து என்று எதையெல்லாம் குறிப்பிடுவீர்கள்?"
"ஒரு வங்கி ஊழியர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் எந்த அளவுக்கு இந்த வாழ்க்கையைப்பற்றி தெரிந்துவைத்திருப்பார் என்று யோசித்துப் பாருங்கள். அவருக்கு அவருடைய பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, பெற்றோர்களோடும் உறவினர்களோடும் வாழ்ந்த வாழ்க்கை, வங்கி வாழ்க்கை போன்றவை மட்டுமே அவர் அறிந்த வாழ்க்கையாக இருக்கும். அதன் சிக்கல்களையும் தீர்வுகளையும் மட்டுமே அவர் தெரிந்துவைத்திருப்பார். சற்றே நட்புவட்டம் பெரிதாகவும், பேசிப் பழகுவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருந்தால், அந்தந்த நண்பர்களுடைய வாழ்க்கையையும் அவர் அறிந்தவராக இருப்பார். அவரே ஒரு நல்ல இலக்கிய வாசகராக இருந்தால் , அவர் வாசிக்கும் படைப்புகள் சுட்டும் பலவிதமான மனிதர்களின் வாழ்க்கையை அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் அமைந்துவிடுகின்றன. வாழ்க்கையின் பன்முகத்தன்மையையும் நம்மைச் சுற்றி நிலவும் ஏற்ற இறக்கங்களையும் அவை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. ஒரு வாசகர் மட்டுமே ஒரு தாயாக, தந்தையாக, பெண்ணாக, மகளாக, தொழிலாளியாக, நிர்வாகியாக என பல வடிவமெடுத்து வாழ்வின் சாரத்தைத் தொட்டுத் திரும்பமுடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சாஸ்திரி என்பவர் எழுதிய ஆயுத எழுத்து என்னும் நாவலைப் படித்தேன். ஓர் இளைஞன் இலங்கையின் போர்க்குழுக்களில் போராளியாக இருந்து, பிறகு அங்கிருந்து எப்படியோ வெளிநாடு சென்று, போருக்காக நன்கொடை திரட்டியனுப்புவராக வாழ்ந்து, ஆயுதங்கள் வாங்குவதற்காக போதைப்பொருட்களை கைமாற்றி விடுபவராக வாழ்ந்த வாழ்க்கையை தன்வரலாற்றின் சாயலில் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும் அதிர்ச்சியை அளித்தது. அவர் சித்தரித்திருக்கும் வாழ்க்கையை கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை. தன்னுடைய உயிர்நண்பன் ஒருவனையே தற்காப்புக்காக ஒருவன் சுட்டுவிடுகிறான். அவன் அக்கா அந்த உடலைப் பார்த்துக் கதறி அழுகிறாள். ஒரு நாட்டில் போர் எப்படியெல்லாம் மனித உறவுகளைச் சிக்கலாக்கியிருக்கிறது என நினைக்கவே துயரமாக இருக்கிறது. எஸ்.செந்தில்குமாரின் `கழுதைப்பாதை' என்றொரு நாவல் இந்த மண்ணில் போன நூற்றாண்டில் நிலவிய ஒரு புதுவிதமான வாழ்க்கைமுறையை ஆவணப்படுத்தியிருக்கிறது. தேவிபாரதியின் `நொய்யல்' நாவல் ஒரு நாகரிகத்தின் வரலாற்றையே ஆவணமாக மாற்றியிருக்கிறது. ஒரு வாசகனுக்கு மட்டுமே இப்படி ஏராளமான மனிதர்களைப் பற்றியும் வாழ்க்கைத்தருணங்களைப் பற்றியும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. கலைச்செல்வியின் `ஆலகாலம்' நாவலும் அப்படிப்பட்ட ஒரு படைப்பு. மரணம் என்னும் ஒரு புள்ளியின் வழியாக வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களை ஒருங்கிணைத்து நம் முன் நிறுத்தியிருக்கிறார். நசீமா ரசாக் என்பவர் எழுதியிருக்கும் `மராம்பு' நாவல், ரமா சுரேஷின் `அம்பரம்', கனகராஜ் பாலசுப்பிரமணியன் எழுதிய `அல் கொஸாமா' என சொல்லிக்கொண்டே போகலாம். நாம் அறிந்தே இராத நிலப்பரப்பையும் மனிதர்களையும் அப்படைப்புகள் நமக்கு நெருக்கமான ஒன்றாக மாற்றுகின்றன. இப்படி நல்ல படைப்புகள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கின்றன. எம்.கோபாலகிருஷ்ணன், சு.வேணுகோபால், சுனில் கிருஷ்ணன், செந்தில் ஜெகன்னாதன், பா.திருச்செந்தாழை, மயிலன் ஜி.சின்னப்பன், கமலதேவி, ஜி.கார்ல்மார்க்ஸ், சுரேஷ் பிரதீப், ஜா.தீபா, சரவணன் சந்திரன் போன்ற படைப்பாளிகள் தொடர்ந்து தரமான படைப்புகளை நமக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள்."
"குழந்தைகளுக்கான இலக்கியங்கள் தமிழில் புதிய வீச்சில் உருவாகத் தொடங்கியுள்ளன. அதன் போக்கை கவனிக்கிறீர்களா?"
"உண்மைதான். எண்ணற்றோர் குழந்தைகளுக்காக எழுத வந்திருக்கிறார்கள். பலர் காணொளிகள் வழியாக குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்கிறார்கள். மாவட்ட அளவில் பலர் பள்ளிகளுக்கு நேரடியாகவே சென்று மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து இலக்கிய ஆர்வத்தை உருவாக்கப் பாடுபடுகிறார்கள். பாரதி புத்தகாலயம் அதை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்துச் செல்கிறது. எந்தெந்த வழிகளிலெல்லாம் சிறார்களைச் சென்று சேரமுடியுமோ, அந்தந்த வழிகளிலெல்லாம் சிறார்களை நெருங்கிச் செல்வது எதிர்காலத்தில் நிச்சயம் பயனளிக்கும். நம் சமூகத்தில் காலம்காலமாக பெற்றோர் மனநிலை என ஒன்றிருக்கிறது. முற்காலத்தில் புத்தகம் படித்தால் பிள்ளைகள் கெட்டுப் போய்விடுவார்கள் என்றொரு அச்சத்தை அந்த மனநிலை விதைத்தது அல்லது அதை வளர்த்தெடுத்தது. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு கூட அந்த மனநிலை மாறவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. தன் மகனுடன் ஒரு மணி நேரம் புத்தகக் கண்காட்சியைச் சுற்றிய ஒரு தந்தை, அவன் மன்றாடிக் கேட்ட எந்தப் புத்தகத்தையும் வாங்கித் தராமல், கடைசியில் வேண்டா வெறுப்பாக ஒரு அகராதியை எடுத்து “வேணும்னா இத வாங்கிக்க. இத படிச்சா அறிவு வளரும்” என்று சொன்னதை என் கண் முன்னால் கண்டேன். அடிப்படையில் இந்த மனநிலை மாறவேண்டும். இது மாறினால்தான் பிள்ளைகள் புத்தகங்களை நோக்கி நெருங்கி வருவார்கள். அப்படி நெருங்கிவரும் சிறார்களுக்கு, அவர்களுடைய கற்பனையைத் தூண்டும் அளவுக்கு விதவிதமான கதைக்களங்களை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். நாம் இன்னொரு பெற்றோராகவோ, இன்னொரு ஆசிரியராகவோ ஒருபோதும் மாறிவிடக்கூடாது. பள்ளிக்கூட அறையைப்பற்றிய கதையாக இருந்தால்கூட, அதன் வழியாக நாம் அடையக்கூடிய ஆனந்தமான அம்சங்களை முன்வைப்பதாக இருக்கவேண்டும். பால்யத்தின் ஆனந்தத் துளிகளை, ஒரு சொட்டு கூட எஞ்சாமல் நம் படைப்புகள் வழியாக அவர்கள் அருந்தவேண்டும். அந்த அளவுக்கு நாம் அளிக்கும் படைப்புகள் ஈர்ப்பும் கற்பனையும் நிறைந்ததாக இருக்கவேண்டும். இரு ஆண்டுகளுக்கு முன்னால் கொரானா காலத்தில் சிறார்களுக்காக நூறு கதைகள் எழுதினேன். ஒவ்வொரு கதையிலும் ஆனந்தத்தைத் தவிர வேறெதுவும் இல்லை என்றே சொல்லவேண்டும். அதன் முதல் தொகுதியை 'பொம்மைகள்' என்னும் தலைப்பில் தன்னறம் பதிப்பக சகோதரர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். நான் முடிந்த வரையில் என் கைக்குக் கிட்டும் புத்தகங்களைப் படித்துவிடுவேன். சமீபத்தில் அபிநயா என்னும் சிறுமியே எழுதிய `புலிப்பல்லும் நரிக்கொம்பும்' என்னும் கதைத்தொகுதியைப் படித்தேன். பஞ்சதந்திரக்கதைகளின் சாயலில் எல்லாக் கதைகளும் சுவாரசியத்தோடு இருந்தன. ஆயிஷா இரா.நடராசன் எழுதிய `மின்மினி', `காலநிலை அகதிகள்' ஆகிய இரு புத்தகங்களையும் படித்தேன். அறிவியலும் கற்பனையும் ஒருங்கே இணைந்தவை."
"ஒரு பேட்டியில் 'இலக்கிய எழுத்து, சாதாரண எழுத்து என்றெல்லாம் இல்லை. எல்லாமே ஒன்றுதான்' என்று சொன்னதாக நினைவு. உண்மையிலேயே இலக்கிய எழுத்து என்பது தனித்துவமான ஒன்று இல்லையா?"
"எந்த இடத்திலும் நான் அப்படிச் சொன்னதாக என் நினைவில் இல்லை. ஒருவேளை, அப்படி பொருள்படும்படி எங்காவது நான் சொல்லியிருந்தால், அது பிழை. ஜனரஞ்சக எழுத்துக்கும் இலக்கிய எழுத்துக்கும் ஆழமான வேறுபாடு உண்டு. ஒவ்வொன்றும் தனித்த வகைமை. வாசகர்களுக்கு எது பிடிக்குமோ, எதை காது கொடுத்து கேட்பார்களோ, எதற்கு வசப்படுவார்களோ, அதை முன்வைப்பது ஜனரஞ்சக எழுத்து. அதுவே வாசிப்பறிவு பெற்றவர்களை, வாசிப்பில் திளைக்கவைத்து, வாசிப்பின் சுவையை அறியவைத்து, இன்னும் இன்னும் என தேடல் கொண்ட மனநிலையை மெல்ல மெல்ல வளர்த்தெடுக்கிறது. வாசகனின் ருசி/அருசிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவன் அறிந்துகொள்ளவேண்டிய வாழ்வின் பரிமாணங்களையும் பன்முகத்தன்மையையும் இணக்கமான புள்ளிகளையும் முரண்புள்ளிகளையும் ஆழமான மனிதநேயத்தையும் அடிப்படைகளையும் முன்வைப்பது இலக்கிய எழுத்து. எடுத்துக்காட்டாக, தேவன் எழுதியவை ஜனரஞ்சக எழுத்து. ஜெயகாந்தன் எழுதியவை இலக்கிய எழுத்து. ஓர் அறிவார்ந்த சமூகத்துக்கு இருவகை எழுத்துகளுமே தேவை."
"கால வரிசைப்படி உங்கள் படைப்புகளை நீங்களே அடுக்கிப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?"
"1982-ல் என்னுடைய முதல் சிறுகதை வெளியானது. 1987இல் என் முதல் சிறுகதைத்தொகுதி வெளியானது. சொந்தப் படைப்புகளும் மொழிபெயர்த்த படைப்புகளுமாக 99 நூல்கள் வந்துள்ளன. நூறாவது புத்தகமாக என் புதிய சிறுகதைத்தொகுதி ’நயனக்கொள்ளை’ அச்சுக்குப் போயிருக்கிறது. அந்த எண்ணிக்கை எனக்குத் தரும் நிறைவை விட, இக்கணம் வரைக்கும் ஒரு பொழுதையும் வீணடிக்காமல் ஏதோ ஒரு வகையில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பதே எனக்கு நிறைவைத் தருகிறது. எழுதத் தொடங்கி அரைகுறையாக இரு நாவல்களை நிறுத்திவைத்திருக்கிறேன். அவற்றை உடனடியாக முடிக்கவேண்டும். இன்னும் நான் எழுதவேண்டிய நாவல்களும் உள்ளன. குறைந்தது ஆறு நாவல்கள். நெஞ்சில் அவை இன்னும் கருக்களாகவே உறங்குகின்றன. இன்னும் எழுதவேண்டிய சிறுகதைகளும் அனுபவக்கட்டுரைகளும் ஏராளமாக எனக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன. தென்னகத்தில் இன்னும் நான் ஆந்திரத்திலும் ஒரிசாவிலும் வடக்கே ராஜஸ்தானிலும் சுற்றுலாத்தலங்கள் தவிர சரிவர முழுமையாக பார்த்ததில்லை. அங்கெல்லாம் பயணம் செய்துவந்த பிறகு, அந்த அனுபவங்களையெல்லாம் எழுதவேண்டும். இன்னும் வேகத்தோடும் மன எழுச்சியோடும் செயல்படவேண்டியிருக்கிறது."
"கதைக்காரராக மட்டும் இல்லாமல் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். ஒரு விமர்சனக்காரராக கறாரான விமர்சனங்கள் குறித்த உங்கள் கருத்து என்ன? சமீபத்தில் ஜெயமோகன் யுவபுரஸ்கார் விருது பெற்ற ஒரு எழுத்தாளர் குறித்த விமர்சனத்தில் மிகக் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தார். இந்த அளவுக்குக் காட்டமாக விமர்சிக்க வேண்டுமா?"
"கறாரான விமர்சனங்கள் எப்போதும் நல்ல விளைவையே உருவாக்கும். என் இளமையில் அப்படிப்பட்ட விமர்சனத்தை நானும் பெற்றிருக்கிறேன். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நான் எழுதும் எண்சீர் விருத்தங்களையும் அறுசீர் விருத்தங்களையும் எனக்கு ஆசிரியராக இருந்த தங்கப்பாவிடம்தான் முதலில் படிப்பதற்குக் கொடுப்பேன். அவர் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் எனக்கு முக்கியமாக இருந்தது. தங்கப்பா அன்பான மனிதர். அதே சமயத்தில் பிழைகளை உறுதியாகவும் கறாராகவும் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டக்கூடியவர். ஒருமுறை ஒரு பாடலில் புதிய உவமைகளைப் பயன்படுத்திப் பார்க்கும் வேகத்தில் கற்பனையாக சில வரிகளை எழுதிவிட்டேன். அதைக் கடுமையாக விமர்சனம் செய்தார் தங்கப்பா. நான் முகம் சோர்வுற்றதையும் பொருட்படுத்தாமல் சங்க இலக்கியக் கவிஞர்கள் முதல் திருவள்ளுவர், இளங்கோ வரைக்கும் ஒருவர் கூட கண்ணால் பார்த்த பொருட்கள், காட்சிகள், இயற்கைநிலைகள் ஆகியவற்றை மட்டுமே உவமைகளாக எடுத்தாண்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார். உவமை என்பதற்கு அடிப்படையில் நம்பகத்தன்மை வேண்டும். அதன் வழியாகத்தான் பாடல் மீது படிப்பவனுக்கு நம்பிக்கை பிறக்கும் என்று வெகுநேரம் சொல்லிச்சொல்லி எனக்குப் புரியவைத்தார். அன்று அவர் அந்தக் கறாரான சொற்களை அன்பின் காரணமாக என்னிடம் ஒருவேளை சொல்லாமல் இருந்திருந்தால் நான் வளர வாய்ப்பே இருந்திருக்காது. உலகில் உள்ள இலக்கிய ஆளுமைகள் எல்லோருமே அத்தகு விமர்சனங்களுக்கு உட்பட்டவர்களே. தல்ஸ்தோய் கார்க்கியைப்பற்றி குறிப்பிடும்போது அவர் தம் எழுத்துகளைவிட நல்ல மனிதர் என்று குறிப்பிட்டார். செகாவைப்பற்றிக் குறிப்பிடும்போது அவருக்கு நாடகமே எழுத வரவில்லை என்று சொன்னார். கார்க்கியும் செகாவும் அந்த விமர்சனங்களை மீறி தம்மை நிறுவிக்கொண்டார்கள். அந்த விமர்சனங்களைப் பொய்யாக்கினார்கள். யாராக இருந்தாலும் சரி, எந்த விமர்சனமாக இருந்தாலும் சரி, திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில் உண்மைத்தன்மை உள்ளதா என்று ஆராயவேண்டும். உண்மை இருக்குமெனில் அதை களைந்து மேலெழும் விதங்களைப்பற்றி யோசிக்க வேண்டும்.
சரி, இப்போது யுவபுரஸ்கார் விருது விமர்சனத்துக்கு வரலாம். அந்த விமர்சனத்தை முன்வைக்கும் ஜெயமோகன் எளிய மனிதரல்ல. தமிழ்ப்படைப்பாளிகளில் முக்கியமானதொரு ஆளுமை. பிச்சமூர்த்தி, பிரமிள், சுந்தர ராமசாமி, கலாப்ரியா, தேவதச்சன், தேவதேவன், அபி தொடங்கி இப்போது எழுதிக்கொண்டிருக்கும் போகன்சங்கர், மதார் வரைக்குமான இளம்கவிஞர்களின் படைப்புகளை முன்வைத்து விமர்சனங்களை எழுதியவர். தேவதேவனை முன்வைத்து அவர் எழுதிய விமர்சனம் ஒரு நூலாகவே வந்துள்ளது. இப்படி தொடர்ச்சியாக கால்நூற்றாண்டுக்கும் மேலாக கவிதை விமர்சனத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் ஒரு கவிஞருடைய படைப்புகளைப்பற்றி ஒரு விமர்சனத்தை முன்வைக்கும்போத்து அதன் உண்மைத்தன்மை என்ன என ஆய்வு செய்வதுதான் முக்கியம். ஆனால், அது இங்கே நிகழவில்லை. யுவபுரஸ்கார் விருது என்பது ஒரு தேசிய விருது. தேசிய அரங்கில் நடைபெறும் ஒரு கவிதைவாசிப்பு நிகழ்ச்சியில் விருதுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தொகுதியிலிருக்கும் ஒரு கவிதை ஆங்கிலத்திலோ இந்தியிலோ மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படும்போது அரங்கத்தில் எப்படி எதிர்வினை நிகழும் என கற்பனை செய்து பார்க்க முடிந்த மனங்களுக்கு, அதன் சங்கடங்கள் புரியும். அப்படி ஒரு சங்கடத்துக்கு இந்த நடுவர்கள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்களே என்னும் ஆற்றாமைதான் இந்தக் காட்டத்துக்குக் காரணம் என்று தோன்றுகிறது."
"உங்கள் மொழிபெயர்ப்புகளில் ஒரு ஆற்றோட்டமான ஒழுங்கு இருக்கும். அதனால் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்கலாம் என்று தோன்றுகிறது. தமிழில் பல உலகப் படைப்புகள் வாசிக்கப்படாமல் போனதற்கு மோசமான மொழிபெயர்ப்பு ஒரு காரணம் என்ற விமர்சனம் இருக்கிறது. குறிப்பாக வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்து, படைப்பின் ஜீவனைக் கொன்றுவிடும் மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். மொழிபெயர்ப்புக்கு என்று இலக்கணம் ஏதும் இருக்கிறதா?"
"மொழிபெயர்ப்பில் இதுதான் வழிமுறை என ஒரு பாதையை திட்டவட்டமாக வகுத்துச் சொல்லமுடியாது. எழுத்துக்கு எழுத்து, வாக்கியத்துக்கு வாக்கியம் மொழிபெயர்ப்பதைக்கூட, மொழிபெயர்ப்பில் ஒரு வகைபாடு என்று சொல்வதுண்டு. ஆனால் எந்த மொழிபெயர்ப்பாக இருந்தாலும் சரி, கடைசியில் அது வாசகர்களின் ஏற்பைப் பெறவேண்டும். அதைப் பெறவில்லை என்றால் எப்படிப்பட்ட முயற்சியாக இருந்தாலும், அதற்கு மதிப்பில்லை. நமக்கு முன்னால் பாரதியார் தொடங்கி, புதுமைப்பித்தன், க.நா.சு., ஆர்.ஷண்முகசுந்தரம், தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, த.நா.குமாரசாமி, கிருஷ்ணமூர்த்தி என பல படைப்பாளிகள் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவர்கள் வகுத்தளித்த வழியே நமக்கு இலக்கணம். தமிழ்மொழியின் வாக்கிய அமைப்புக்கும் பிற மொழிகளின் அமைப்புக்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் உண்டு. எப்படி தொடங்கவேண்டும், எப்படி முடியவேண்டும் என்பதிலும் வேறுபாடுகள் உண்டு. இன்னொரு மொழியில் பின்பற்றப்பட்டிருக்கும் அமைப்பை நாம் பின்பற்ற முயற்சி செய்யும்போது குழப்பத்துக்கு இடமளித்துவிடலாம். அப்படி நேருவதற்கு வாய்ப்புள்ள பிழைகளை கவனமாகத் தவிர்க்கவேண்டும். அடுத்து கதைக்குப் பொருத்தமான மொழியோட்டமும் அவசியம். முதல் வாக்கியமும் இரண்டாவது வாக்கியமும் ஒன்றோடு ஒன்று இயைந்து செல்ல வேண்டும். அதே சமயத்தில் மூலமொழியில் உள்ள ஒரு சொல்லைக்கூட நாம் விட்டுவிடக் கூடாது. மேலும் நம் மொழியின் வாசிப்புக்கு ஏற்ற வகையில் பொருத்தமான சொற்களைக் கொண்ட வாக்கியங்களையும் அமைக்க வேண்டும். கம்பி மீது நடப்பது போல அது பெரிய சவாலான பணி. த.நா.குமாரசாமியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த `ஆரோக்கிய நிகேதனம்' நாவலும் சித்தலிங்கையாவின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த `மண்ணும் மனிதரும்' நாவலும் ஆர்.ஷண்முகசுந்தரம் மொழிபெயர்த்த `பதேர் பாஞ்சாலி' நாவலும் மிகமுக்கியமான மொழிபெயர்ப்புகள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நம் நெஞ்சுக்கு நெருக்கமாக அவை நிற்பதற்கு எது காரணமோ, அதை அடைவதே ஒரு மொழிபெயர்ப்பாளரின் லட்சியப்பணியாக இருக்கவேண்டும்."
"பலிபீடம், நாக மண்டலம் போன்ற அற்புதமான நாடகங்களை மொழிபெயர்த்தவர் நீங்கள். தற்போது தமிழில் நாடக இலக்கியம் என்ற ஒன்று இருக்கும் தடமே இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?"
"தடமே இல்லாமல் போய்விட்டது என்று சொல்லமுடியாது. உண்மையிலேயே தீவிரமான ஈடுபாடும் அர்ப்பணிப்புணர்வும் கொண்ட முயற்சிகள் நிகழ்ந்தபடிதான் இருக்கின்றன. திருப்பத்தூர் பார்த்திபராஜா, பிரளயன், முருகபூபதி போன்றோர் பல நல்ல நாடகங்களை இன்னமும் தொடர்ந்து அரங்கேற்றியபடிதான் இருக்கிறார்கள். நாடக விழாக்கள் அவ்வப்போது நடந்தபடிதான் இருக்கின்றன. ஆனால் நம் தமிழ்ச்சூழலில் நாடகங்களுக்கான பார்வையாளர்கள் இல்லை என்பதுதான் முக்கியமான குறை. கன்னடச்சூழலோடு ஒப்பிடும்போது, அதை நான் உறுதியாகச் சொல்லமுடியும். கர்நாடகத்தில் முப்பத்தியொன்று மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டிலிருந்து ஆறு வரை நாடகங்கள் மட்டுமே நிகழும் அரங்குகள் உள்ளன. திரையரங்கத்துக்கு இணையான பார்வையாளர்கள் அங்கு திரண்டு வந்து நாடகங்கள் பார்க்கிறார்கள். பெரும்பாலானவை ஜனரஞ்சகமான நாடகங்கள் என்றாலும் திட்டவட்டமான எண்ணிக்கையில் பார்வையாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். கடந்த முப்பதாண்டுகளாக, அது எண்ணிக்கையில் குறையவில்லை என்பதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். பெங்களூரில் மட்டும் ஆறு அரங்குகள் உள்ளன. ரங்கஷங்கர என்னும் அரங்கத்தில் தினந்தோறும் நாடகம் உண்டு. இவை தவிர, தென்கன்னட மாவட்டங்களில் நூறுக்கும் மேற்பட்ட யட்சகானக்குழுக்கள் உள்ளன. ஓர் ஆண்டு முழுக்க நிகழ்ச்சிகளுக்காக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட யட்சகானக்குழுக்கள் உண்டு. இவற்றுக்கு மேலாக, ஹெக்கோடு என்னும் கிராமத்தைத் தலைமையிடமாகக் கொண்ட நீநாசம் என்னும் நாடகக்குழு நான்கு புதிய நாடகங்களுடன் மாநிலம் முழுதும் பயணம் செய்து அரங்கேற்றும் காட்சிகளும் உண்டு. ஹயவதனன், துக்ளக், பலிபீடம் போன்ற நாடகங்கள் இருநூறாவது காட்சி, முன்னூறாவது காட்சி என இன்னமும் நடித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு சுவாரசியமான செய்தியை இங்கே சொல்ல விரும்புகிறேன். ஹயவதனன் நாடகத்தை ஒரு குழு முதன்முதலாக அரங்கேற்றியபோது பத்மினி, கபிலன், தேவதத்தன் என மூன்று முக்கிய பாத்திரங்களில் மூன்று நடிகர்கள் நடித்தார்கள். அப்போது அவர்கள் இளைஞர்கள். அவர்கள் வளர்ந்து, பெரியவர்களாகி, திருமணம் புரிந்து, நாடகங்களில் இன்னும் நடித்து வருகிறார்கள். அதே குழுவில், அவர்களுடைய பிள்ளைகள் வளர்ந்து அதே பாத்திரங்களை ஏற்று நடிக்க, அப்படி ஒரு காட்சி கொரானா காலத்துக்கு முன்னால் அரங்கேறியது. தமிழ்ச்சூழலில் இலக்கியக்கூட்டமாக இருந்தாலும் சரி, நாடகங்களாக இருந்தாலும் சரி பார்வையாளர்கள் இல்லை. தமிழில் ஜனரஞ்சக நாடகங்கள் முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டாலும், நவீன நாடக முயற்சிகள் குறிப்பிட்ட அளவில் இயங்கியபடிதான் இருக்கின்றன."
"ஆங்கிலத்திலிருந்து ஆப்பிரிக்க இலக்கியம் ஒன்றை (நீர் யானை முடியுடன் இருந்தபோது) மொழிபெயர்த்திருக்கிறீர்கள்... அந்த அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்?"
"சிறார்களுக்கான நூல்கள் மீது எனக்கு எப்போதும் ஆர்வமுண்டு. ஒருவகையில் ராதுகா பதிப்பகம் வெளியிட்ட சிறார்களுக்கான கதை நூல்களையும் அறிவியல் நூல்களையும் தேடித்தேடிப் படித்ததால் உருவான ஆர்வம் என்றும் சொல்லலாம். எல்லா நாட்டினரும் அப்படிப்பட்ட புத்தகங்களை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். நான் ஒவ்வொரு மாதமும் என் மகனுடன் எம்.ஜி.ரோட்டில் இருந்த பிரிமியர் புக் ஷாப்புக்குச் செல்வேன். அடிக்கடி சந்தித்துக்கொண்டதால், அந்தக் கடைக்காரர் ஷான்பாக்குக்கு எங்கள் தேவையும் ரசனையும் புரிந்துவிட்டன. எங்களுக்கு விருப்பமான புதிய புத்தகங்களை அவரே எடுத்துக் கொடுப்பார். அவர்தான் ஒருமுறை ஆப்பிரிக்க வனவிலங்குகளைப்பற்றிய புத்தகங்களை எங்களுக்குக் கொடுத்தார். மூன்று தொகுதிகளாக இருந்த அந்தப் புத்தகங்களை உடனே நான் வாங்கிக்கொண்டேன். நானும் என் மகனும் ஒரே சமயத்தில் அவற்றைப் படித்துமுடித்தோம். ஒரே சமயத்தில் நாட்டுப்புறக்கதை போலவும் புராணக்கதை போலவும் உயிரியல் தகவல் தொகுதி போலவும் இருந்த அப்புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. எழுத்தாளர் ஆதவனின் மறைவுக்குப் பிறகு வெகுகாலமாக நிரப்பப்படாமல் இருந்த நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் தமிழின் சார்பாக ஒரு பெண்மணி அப்போதுதான் இணைந்து பணிசெய்யத் தொடங்கினார். அவர் மதுரையைச் சேர்ந்தவர்.
ஒருமுறை இந்திய தொடக்ககால நாவல் வரிசையில் எம்.எஸ்.புட்டண்ணா என்பவர் எழுதிய ஒரு நாவலை மொழிபெயர்ப்பது குறித்து என்னிடம் அவர் பேசினார். நான் அந்த நாவலை மொழிபெயர்க்க ஒப்புக்கொண்டேன். இலக்கியம் தொடர்பாக பல விஷயங்களை அடிக்கடி அவர் பேசுவதுண்டு. அப்போதுதான் நான் ஆப்பிரிக்க வன விலங்குகள் புத்தகங்களைப்பற்றி அவரிடம் சொன்னேன். வெளிநாட்டுப்புத்தகம் என்பதால் காப்புரிமையைப் பெறுவதில் சிக்கல் இருக்கலாம் என்று அவர் தொடக்கத்தில் தயங்கினாலும் இறுதியில் ஒப்புக்கொண்டார். ஒருவழியாக அது செயல்வடிவம் கொள்வதற்குள் இரு ஆண்டுகள் கடந்துவிட்டன. அதற்கிடையில் நான் எனக்குக் கொடுத்த நாவல் மொழிபெயர்ப்பை முடித்து, அந்தப் புத்தகமும் வந்துவிட்டது. ஒருநாள் தொலைபேசியில் அழைத்து ஆப்பிரிக்க வனவிலங்குகள் தொகுதிகளை மொழிபெயர்க்கும் உரிமையை பெற்றாகிவிட்டது என்றும் எல்லா இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க இருப்பதாகவும், ஏதேனும் ஒரு தொகுதியிலிருந்து முதலில் தொடங்கலாம் என்றும் தெரிவித்தார். அவர் அந்த மொழிபெயர்ப்புக்காக மிகவும் பாடுபட்டிருந்தார். அவர் குரலில் அந்தப் பூரிப்பு தெரிந்தது. பிறகு அவராகவே நீர்யானை தொகுதியிலிருந்து தொடங்கலாம் என்றும் சிங்கம் தொகுதியையும் யானை தொகுதியையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் செய்யலாம் என்றும் தெரிவித்தார். அந்த மாதத்திலேயே அந்த மொழிபெயர்ப்பு வேலை எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கடிதம் வந்துவிட்டது. ஒருசில மாதங்களிலேயே நானும் புத்தகத்தை மொழிபெயர்த்து நான் அனுப்பிவிட்டேன். பிரதியைப் பெற்றுக்கொண்டதும் கிடைத்த தகவலைச் சொல்வதற்காக ஒருமுறை அவர் பேசினார். எல்லா இந்திய மொழிகளிலும் முதல் தொகுதி வெளிவந்ததும் இரண்டாவது தொகுதி வேலையைத் தொடங்கலாம் என்று தெரிவித்தார். துரதிருஷ்டவசமாக, அடுத்த சில மாதங்களில் அவர் இறந்துவிட்டார். அவர் அறிவுக்கு எட்டாமலேயே அவருக்குள் ஒளிந்திருந்த நோய் அவரை எதிர்பாராத கணத்தில் பலிவாங்கிவிட்டது. அவர் மறைந்து கால்நூற்றாண்டுக்கும் மேல் கடந்துவிட்டது. அவர் மிகவும் ஆசையுடன் முயற்சி செய்து அனுமதி பெற்று எல்லா இந்திய மொழிகளிலும் வரவேண்டும் என்று திட்டமிட்ட அந்தப் புத்தகம் வெளிவரும்போது அதைப் பார்க்க அவர் உயிருடன் இல்லை. முதல் தொகுதியை அடுத்து, எஞ்சிய இரு தொகுதிகளுக்கான வேலை தொடங்கப்பட்டதா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. நீர்யானை தொகுதியைப்பற்றி என்னிடம் ஆர்வமுடன் பேச வரும் அனைவரையும் எஞ்சியிருக்கும் இரு தொகுதிகளையும் ஆங்கிலத்திலாவது படித்துவிடுங்கள் என்று ஆற்றுப்படுத்துவது என் வழக்கம். உங்களுக்கும் அதையே சொல்ல விழைகிறேன். WHEN THE LION COULD FLY, WHEN THE ELEPHANT WAS KING என்ற தலைப்பில் கிடைக்கும் மற்ற தொகுதிகளையும் தேடிப் படத்துப் பாருங்கள்."
"இலக்கியம் வாசிப்பவர்கள் அக்காலத்தில் குழுக்களாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். நிறைய சிற்றிதழ்கள் வெளியாகின. நவீனத்துவம், பின்நவீனத்துவம், தலித்தியம், அமைப்பியல் என பல கோட்பாட்டு அடிப்படையில் எழுதுவதும் விமர்சிப்பதுமாக அக்குழுக்கள் இயங்கின. இன்றைய இலக்கியம் பெரும்பாலும் இணையத்துக்குள்ளாகவே முடங்கிவிட்டது போல் தோன்றுகிறது. கோட்பாடுகளுக்கு அதுசார்ந்த நகர்வுகளுக்கு என்னவாயிற்று?"
"இணையம் வழியாக இலக்கியம் தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் கோட்பாடுகள் மீதான ஆர்வக்குறைபாட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை. இணையம் வழியாக இலக்கியம் வளரும்போது, கோட்பாடு மட்டும் வளர இடமில்லாமல் போய்விடுமா என்ன? இணையம் எல்லாவற்றையும் அணைத்துக்கொள்ளும் பேரன்னையாக இருக்கிறது. இரண்டாயிரத்துக்குப் பிறகு, கல்வியாளர்களில் ஒரு புதிய தலைமுறை வீச்சுடன் உருவாகவில்லை என்பதுதான் உண்மை. ஏடுகள் வழியாகவோ, இணையம் வழியாகவோ இயங்குவதற்கு ஒருவரும் இல்லாமல் போய்விட்டார்கள் என்பதுதான் மிகப்பெரிய குறை. அதை ஒரு பெரிய இழப்பாகவே கருதுகிறேன்."
"தமிழ் இலக்கியச்சூழலில் குருபீட மனோபாவம் அதிகமாகிவிட்டதாகத் தோன்றுகிறதே?"
"தலைமைத்தகுதி என்பது ஒருவர் தனக்குத்தானே அறிவித்துக்கொள்வதால் உருவாவதில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக வரலாற்றினூடாகவும் மற்றவர்களின் ஏற்பின் வழியாகவும் உருவாகி வந்து நிலைப்பது. இலக்கியத்துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறையிலும் தலைமைகள் இப்படித்தான் உருவாகின்றன."
- இந்தப் பேட்டியின் தொடர்ச்சி நாளையும் தொடரும்...
source https://www.vikatan.com/arts/literature/writer-pavannan-talks-about-his-writing-career-and-the-current-scenario-of-tamil-literature
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக