நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று (செப்டம்பர் 30) வெளியாகி இருக்கிறது. விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் பரவலாக ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. அடுத்த ஒரு வாரத்துக்கு தியேட்டர்கள் அனைத்தும் ஹவுஸ்புல் என்கிற நிலைதான் இப்போது.
பொன்னியின் செல்வன் வரலாற்றுக் காவியத்தின் பட்ஜெட், படமாக்கும்போது ஆகும் செலவு, வியாபாரம் இது பற்றி எல்லாம் சினிமா தயாரிப்பாளர் கஸாலியிடம் கேட்டோம்.
``பொன்னியின் செல்வன் சினிமா பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் கனவு. அது இன்று நிஜமாகி இருக்கிறது. இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.250 - 300 கோடி வரை இருக்கலாம். இயக்குநர், நடிகர்கள் சம்பளம் இதில் தோராயமாக 30% வரை இருக்கும். 180 நாள்கள் திட்டமிட்டு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகத்தையும் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
இது போன்ற வரலாற்றுப் படங்களில் சினிமா செட்டும், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸும் மிகவும் முக்கியம். இவற்றுக்கு மட்டுமே பட்ஜெட்டில் கணிசமான சதவிகிதம் செலவு செய்யப்பட்டிருக்கும். படத்தின் மேக்கிங் செலவு மட்டுமே ஒரு நாளைக்கு ரூ.15 லட்சம் வரை அடங்கும். இதற்கு மட்டுமே சுமார் ரூ.40 கோடி வரை ஆகி இருக்கலாம்.
பொன்னியின் செல்வன் சோழர் வரலாறு, தமிழர் வரலாறு என்றெல்லாம் கூறினாலும் பொன்னியின் செல்வன் பொதுவாக ஓர் அரச குலத்தின் வரலாறு. இதில் வீரம், அன்பு, பாசம், நட்பு, காதல், துரோகம், வஞ்சகம், போட்டி, பொறாமை என அனைத்தும் கலந்த கலவையான ஒரு காவியம். நமக்குத் தொடர்பே இல்லாத கிளேடியேட்டர், ட்ராய் போன்ற ஹாலிவுட் படங்களை நாம் எப்படி கொண்டாடினோமோ, அதேபோல் பொன்னியின் செல்வன் படத்தையும் மொழி கடந்து, கண்டம் கடந்து மக்கள் கொண்டாடுவார்கள். இதன்மூலம் பொன்னியின் செல்வன் பான் இந்திய சினிமா என்று சொல்வதைவிட, பான் வோர்ல்டு சினிமா என்றே சொல்லலாம்.
இந்தப் படத்தின் பிசினஸைப் பொறுத்தவரை தென் இந்திய மாநிலங்கள், வட இந்தியப் பகுதிகள், வெளிநாடுகள் எனப் பிரித்து விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. தென் இந்தியாவில் மட்டும் படத்தின் வசூல் ஒரு வாரத்தில் ரூ.100 கோடி வரை இருக்க வாய்ப்புள்ளது. அது போக, வட இந்தியாவில் ரூ.25 கோடி வசூல் ஆகலாம். வெளிநாடுகளில் ரூ.100 கோடி வரை கிடைக்கும்.
இதுபோக, ஓ.டி.டி ரைட்ஸ் ரூ.125 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. சாட்டிலைட் ரைட்ஸ் குறித்த தகவல் தெரியவில்லை.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றி, வசூல் பொறுத்து இரண்டாம் பாகத்துக்கு வரவேற்பு இருக்கும். மொத்தமாக இரண்டு பாகமும் சேர்த்து வசூல் சுமார் ரூ.600 கோடி முதல் ரூ.800 கோடி வரை இருக்கலாம்.
பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி அப்படத்தோடு நிற்கப் போவதில்லை. பாகுபலி தந்த வெற்றிதான் அது போன்ற பிரமாண்ட வரலாற்றுப் படங்களை எடுப்பதற்கான முன் உதாரணமாக அமைந்தது. அதுபோல, பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி தொடர்ந்து வரலாற்றுக் காவியங்களைப் படமாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். குறிப்பாக, ஏற்கெனவே வேள்பாரி கதையை ஷங்கர் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறார்.
சிவகாமியின் சபதம் சினிமாவாக எடுக்கப்படலாம். கரிகால் சோழனின் கதை சினிமாவாகலாம். கமலின் மருதநாயகமும் மீண்டும் வர வாய்ப்பிருக்கிறது. இப்படி வரலாற்றுக் காவியங்கள் அனைத்தும் சினிமாவாக உருப்பெற பொன்னியின் செல்வன் காரணமாக இருக்கும்.
இதன்மூலம் தமிழ் சினிமாவின் விற்பனையும் அதிகரிக்கும். இப்போது தமிழ் சினிமா ஆண்டு விற்பனை ரூ.2,500 கோடியாக இருக்கிறது. பொன்னியின் செல்வனின் வெற்றியும் அதைத் தொடர்ந்து உருவாகப்போகும் வரலாற்று சினிமாக்களின் உருவாக்கமும் வெற்றியும் சாத்தியமானால் தமிழ் சினிமா துறையின் ஆண்டு விற்பனை ரூ.5,000 கோடியை எட்டும் என்பதில் சந்தேகமே இல்லை" என்றார்.
பாகுபலி 1, 2, கே.எஃப்.ஜி 1, 2 மாதிரி பொன்னியின் செல்வன் 1, 2 வசூல் சாதனை செய்யுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி!
source https://www.vikatan.com/business/finance/ponniyin-selvan-will-make-tamil-cinema-business-from-2500-cr-to-5000-cr
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக