Ad

சனி, 3 செப்டம்பர், 2022

காரைக்கால்: `படிப்பில் என் மகளை முந்துவதா?’ - குளிர்பானத்தில் விஷம் வைத்து பள்ளி மாணவனை கொன்ற பெண்

காரைக்காலை அடுத்த நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் வசிப்பவர்கள் ராஜேந்திரன் - மாலதி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண்ணும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

ராஜேந்திரன் காரைக்காலில் நியாய விலை கடையில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். ராஜேந்திரனின் இரண்டாவது மகன் பாலமணிகண்டன்.

நேரு நகரிலுள்ள தனியார் ஆங்கிலப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்திருக்கிறான். இவன் படிப்பில் முதல் மாணவனாகவும், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ள துடிப்பான சிறுவனாகவும் இருந்துள்ளான். .இந்நிலையில் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற இருப்பதால் மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஒத்திகைகளில் சிறுவன் பால மணிகண்டன் கலந்து கொண்டுள்ளான்.

பாலமணிகண்டன்

இதனிடையே நேற்று முந்தினம் காலை ஒத்திகை நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய பாலமணிகண்டன், தனது தாய் மாலதியிடம், "எனக்கு பள்ளியில் கூல்டிரிங்ஸ் கொடுத்து விட்டது யார்?" என கேட்டுள்ளான். பேசிக்கொண்டிருக்கும்போதே பாலமணிகண்டன் தொடர்ந்து வாந்தி எடுத்து மயக்கமுற்றான். உடனே பெற்றோர் பதறி பாலமணிகண்டனை காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இது தொடர்பாக பெற்றோர் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்து, அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தனர். இதில் பால மணிகண்டனுடன், படிக்கும் சக மாணவி ஒருவரின் தாய் சகாயராணி விக்டோரியா என்பவர், வாட்ச்மேன் தேவதாஸ் என்பவரிடம் வெள்ளை நிற பையில் இரண்டு கூல்டிரிங்ஸ் பாட்டிலை வைத்து, எட்டாம் வகுப்பில் படிக்கும் பால மணிகண்டனிடம் அவரின் உறவினர் கொடுக்க சொன்னதாக கூறி கொடுத்தது தெரிய வந்தது.

மாணவன் சிகிச்சையில் இருக்கும் போது, ராஜேந்திரன் பேசுகையில், பாலமணிகண்டனுக்கும், குறிப்பிட்ட அந்த மாணவிக்கும் வகுப்பில் முதல் மாணவன் யார் என்பதில் போட்டியிருந்தது. இதனால் பால மணிகண்டன் மீது அம்மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். நடைபெற இருக்கும் கலை நிகழ்சியில் சிறுவன் பாலமணிகண்டன் நடன நிகழ்சியில் பங்கேற் கூடாது என்றெண்ணிய சகாயராணி விக்டோரியா, உறவினர் என்ற போர்வையில் நஞ்சு கலந்த பொருளை கூல்டிரிங்ஸில் கலந்து பாலமணிகண்டனிடம் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் கூறினார்.

இக்கொடுஞ்செயல் குறித்து ராஜேந்திரன் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காரைக்கால் நகர காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீஸார் சகாயராணி விக்டோரியா மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Karaikal government hospital

இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் பால மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் உறவினர்கள் மருத்துவமனையை தாக்கினர். மேலும் அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

``படிப்பில் என் மகளை முந்தி முதலிடம் பெறுவதா?" என பொறாமையால் மாணவன் ஒருவனுக்கு, மாணவியின் தாய் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் காரைக்காலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/the-mother-of-girl-who-tried-to-kill-the-other-student-was-arrested-in-karaikal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக