``தர்மயுத்தத்தின்போது ஓ.பி.எஸுக்கு பக்கம் பலமாக இருந்த நீங்கள் எடப்பாடியின் தீவிர ஆதரவாளர் ஆனதற்கு என்ன காரணம்?"
``சசிகலாவும் அவரின் குடும்பமும் இல்லாத கட்சியும், ஆட்சியும் வேண்டும். அம்மா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் ஆகிய ஓ.பி.எஸ்-ஸின் கொள்கைக்காகவே அவரின் பக்கம் நின்றோம். ஆனால், பதவி கிடைத்ததும் சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டுமென்று தீர்மானம் போட்டார். இப்படி ஒரு சந்தர்ப்பவாதியை எனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை. தலைமை பண்புக்கான தகுதியோ, திறமையோ ஒரு துளிக்கூட ஓ.பி.எஸ்-ஸுக்கு கிடையாது. கட்சியை எடப்பாடி ஒருவரால்தான் காப்பாற்றமுடியும். அதனால் அவருக்கு பக்கபலமாக இருக்கிறேன்."
``தகுதி இல்லாமலா ஜெயலலிதா அவரை இரண்டு முறை முதல்வராக்கினார்?"
"என்ன தகுதி... கிடைத்த வாய்ப்பைக்கூட ஒழுங்காகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையே...டி.டி.வி தினகரன் மூலம் எப்படியோ சந்தரப்ப சூழ்நிலையினால்தான் ஓ.பி.எஸ் மேலே வந்தார். அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, ஆகாசத்திலேயே அந்தர் பல்டி அடித்துவிடுவார். முரண்பாடுகளின் மொத்த உருவம் அவர். எடப்பாடி முதல்வரானதும், அம்மா எனக்குதான் முதல்வர் பதவியை கொடுத்தார். 'எனக்கு இல்லை எனக்கு இல்லை' என்று திருவிளையாடல் படத்தில் வரும் நாகேஷ்போல புலம்பிக் கொண்டே இருந்தார். அந்த பதவி வெறியிலிருந்து அவரால் வெளியே வரமுடியவில்லை."
"இவையெல்லாம் அவருடன் இருக்கும்போது உங்களுக்கு தெரியவில்லையா அல்லது தெரிந்தும் சுயநலமாக இருந்தீர்களா?"
``அம்மா மிகவும் புத்திசாலி. ஆனால், சசிகலாவின் இரட்டை வேடத்தை கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அம்மா யாரையாவது பாராட்டிவிட்டால்போதும், அவரை அத்தோதோடு 'க்ளோஸ்' செய்துவிடுவார் சசிகலா. அவ்வளவு ஏன், தினகரனின் பேச்சை அம்மா கேட்க தொடங்கியதும், சொந்த அக்கா மகன் என்றுகூட பாராமல், அவரையும் காலிசெய்துவிட்டார். எங்கள் நிலைமையெல்லாம் எப்படியிருந்திருக்கும் நினைத்து பாருங்கள்... சசிகலாவை பற்றி புத்தகமே வெளியிடலாம். அந்த பூனைக்கு மணிக்கட்ட யார் வருவார்கள் என்று பாதிக்கப்பட்ட எங்களை போன்றவர்கள் நினைத்த நேரத்தில்தான் ஓ.பி.எஸ் துணிந்து நின்றார். அதனால் அவரை ஆதரித்தோம். அவருக்கு பதவிக் கிடைத்ததும், உடன் இருந்தவர்கள் எக்கேடு கெட்டும் போகட்டும் என முதுகில் குத்திவிட்டார்.`சிறப்பாக முதுகில் குத்துபவர்’ என்ற பட்டத்தையே ஓ.பி.எஸ்-ஸுக்குக் கொடுக்கலாம்."
"ஓ.பி.எஸ்-ஸை கடுமையாக விமர்சித்ததற்காகதான் உங்களுக்கு துணை பொதுச் செயலாளர் பதவிக் கொடுக்கப்பட்டதோ?"
``இல்லைவே இல்லை. அம்மா இருக்கும்போதே ஓ.பி.எஸ்-ஸுக்கு அடுத்த இடத்தில் நான்தான் இருந்தேன். அதன்படிதான் எனக்கு துணைப்பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி வழங்கியிருகிறார். தற்போதைய அ.தி.மு.க தலைமையில் மூன்று சமூகத்துக்குதான் அதிக முக்கியதுவம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கிளப்பிவிடுகிறார்கள். அ.தி.மு.க-வில் சாதியும் கிடையாது, மதமும் கிடையாது. உழைப்பு, அனுபவத்தை மையப்படுத்திதான் பதவிகள் வழங்கப்படும்."
"ஓ.பி.எஸ் குறித்து நீங்கள் சொல்லுவது உண்மையென்றால் வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அது தெரியாமல் இருக்குமா?"
"ஓ.பி.எஸ் ஒரு மண்குதிரை. அவர்மீது ஏறி அரசியல் ஆற்றைக் கடக்க முடியாது. அவர்பக்கம் சேரும் நிர்வாகிகளின் நிலைமையை பார்த்தால் பாவமாக இருக்கிறது. இது வைத்திலிங்கத்துக்கும் தெரியும். சசிகலாவை எப்படியாவது கட்சியில் சேர்த்துவிட, ஓ.பி.எஸ்-ஸை வைத்து காய் நகர்த்துகிறார். சசிகலா தலைமையில் கட்சி வந்து, ஆட்சியை கைபற்றினால், முதல்வர் ஆகிவிடலாம் என்று வைத்திலிங்கம் அதீத கற்பனையில் இருக்கிறார். எடப்பாடி இருக்கும்வரை சசிகலாவால் கட்சிக்குள் வரமுடியாது."
"கடந்தமுறை அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டபோது பா.ஜ.க தான் அதை தீர்த்தது. இப்போது பா.ஜ.க-வின் நிலைபாடு ஏன்ன?"
" பா.ஜ.க-வின் நிலைபாடு என்ன என்பது குறித்து நான் எதுவும் கூறமுடியாது. அது என்னவாக இருந்தாலும் அதுகுறித்து எங்களுக்கு கவலையில்லை. அவர்கள் வேறு கட்சி நாங்கள் வேறு கட்சி."
"எதிரும் புதிருமாக இருந்த திண்டுக்கல் சீனிவாசனும் நீங்களும் ஒரே அணியில் எப்படி சுமூகமாக செயல்படுகிறீர்கள்?"
" (பலமாக சிரிக்கிறார்..) எனக்கும் அண்ணன் சீனிவாசனுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. 'விசு' என்று பாசமாக அழைத்து பேசுவார். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சேர்ந்தேதான் சென்று வருகிறோம். எங்களுக்குள் பிரச்னையென யார் கிளப்பிவிட்டார்கள் என்று தெரியவில்லை."
"உங்கள் மாவட்டத்தில் ரெட்டியார்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஓ.பி.எஸ் பக்கம் சென்றியிருக்கிறாரே?"
" ஒரு ஆள் போனதால் ஒன்னும் ஆகப்போறதில்லை. 99 சதவிகித நிர்வாகிகள் எடப்பாடியைதான் ஆதரிக்கிறார்கள். பூஜ்யம் ஒன்று என்று மாறும்போது, மொத்த கட்சியும் அவர்கள்பக்கம் சென்றதாக அவர்கள் நினைக்கிறார்கள். அதேநேரத்தில் ஓ.பி.எஸ்-ஸுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவிக்கும் தினகரனின் அ.ம.மு.க-வை சேர்ந்த நிர்வாகிகள் ஓ.பி.எஸ் பக்கம் சென்றிருக்கிறார்கள். இதனால், தினகரன்தான் கவலைப்படவேண்டுமே தவிர எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. "
" சுதந்திரபோராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்தநாளை எடப்பாடி வேண்டுமென்றே நிராகரித்து இருப்பதாக ஓ.பி.எஸ் தரப்பு கூறுகிறார்களே?"
" எல்லா விழாவுக்கும் எல்லாரும் போகவேண்டுமென்று அவசியமில்லை. எடப்பாடி வேண்டுமென்றே விழாவை நிராகரிக்கவில்லை. அவரின் பிரதிநிதியாக நாங்கள் நேரடியாக சென்றோம். 144 தடை உத்தரவிருந்ததால், பதிவு செய்து 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விழாவுவை சிறப்பித்தோம்."
" முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியின்போது தங்க கவசத்தை எடுத்துக் கொடுக்கும் விவகாரத்தில் பிரச்னை ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?"
"ஓ.பி.எஸ் தரப்பினர் பிரச்னை கிளப்பினால்தான் உண்டு. ஆனால், தங்க கவசத்தை எடுத்துக் கொடுக்கும் உரிமை இனி அவருக்கு இல்லை. அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன்தான் வங்கியில் இருந்து கவசத்தை எடுத்துக் கொடுப்பார். எப்போதும்போல அ.தி.மு.க சார்பில் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்."
"வரும்காலத்தில் ஓ.பி.எஸ்-ஸுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறதா?"
" ஓ.பி.எஸ்-ஸை எடப்பாடி ஒருகாலமும் கட்சியில் சேர்த்துக் கொள்ளமாட்டார் என்பது எனது நம்பிக்கை. மீண்டும் அவர் இங்கு வந்தால், ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவார். அவரை தவிர்த்து யார் வந்தாலும் இணைந்துக் கொள்வோம்."
"கட்சி பிரச்னையே கதியென்று இருந்தால், அ.தி.மு.க வெற்றிபெற்ற தொகுதியை யார் கவனிப்பது?"
"ஓராண்டு தி.மு.க ஆட்சிமீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்தநேரத்தில், அந்தபிரச்னை குறித்து பேசவிடமால் எங்களை தடுத்து தி.மு.க-வுக்கு மறைமுகமாக பல நன்மைகளை ஓ.பி.எஸ் செய்கிறார். இருந்தபோதிலும் மக்கள் பிரச்னை குறித்து தொடர்ந்து பேசிதான் வருகிறோம்."
source https://www.vikatan.com/government-and-politics/politics/natham-viswanathan-open-talks-regarding-admk-panneer-vaithilingam-and-other-politics
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக