இடும்பாவனம் கார்த்தி, இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர், நா.த.க.
“உண்மை. இந்த ஆட்சியில் லஞ்சமும் ஊழலும் புரையோடிப்போயிருக்கின்றன. இது குறித்து யாரும் பேசக் கூடாது, எழுதக் கூடாது என்று காவல்துறை வெளிப்படையாக விடுத்திருக்கும் மிரட்டல்தான் இது. ஏற்கெனவே சமூக வலைதளங்களைக் கண்காணிக்கவும், இணையக் குற்றங்களைத் தடுக்கவும்தான் சைபர் க்ரைம் பிரிவு இருக்கிறதே... பிறகு புதிதாக எதற்கு ஒரு குழு... திருத்தணியில் ‘தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்லி இருக்கிறது’ என்று சொன்னவர்மீது அவதூறு பரப்புவதாக வழக்கு பதிவுசெய்தது காவல்துறை. அவர் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாகச் சொல்லவில்லை. தனக்கு வழங்கப்பட்டதில் பல்லி இருந்ததாகத்தான் கூறியிருந்தார். சமீபத்தில்கூட, அமைச்சர் செந்தில் பாலாஜி ‘வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பேசியிருந்தார். பொதுமக்கள் யாராவது தங்கள் பகுதியில் மின்வெட்டு என்று சமூக வலைதளங்களில் பதிவுசெய்தால், அதையும் அவதூறு பரப்புவது என்று சொல்லி வழக்கு பதிவுசெய்வார்கள். ஆனால், தி.மு.க நிர்வாகிகள் என்ன செய்தாலும் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. உதாரணமாக, நாம் தமிழர் மேடையில் ஏறி தி.மு.க நிர்வாகி அராஜகம் செய்தார். அவர்மீது காவல்துறையும் கட்சியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க ஜனநாயகத்துக்கு எதிரான, கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் மட்டுமே.
சிவா ஜெயராஜ், செய்தித் தொடர்பாளர், தி.மு.க.
“தவறான கருத்து. கருத்துச் சுதந்திரத்தால் உருவான அரசு தி.மு.க. மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் தி.மு.க எப்படி கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக இருக்கும்... மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைக் கண்காணிப்பதில் அரசுக்கு முக்கியக் கடமை இருக்கிறது. பொதுமக்களின் பாதுகாப் புக்காக, தமிழ்நாடு காவல்துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதன் ஒரு பகுதிதான் இந்த `சமூக ஊடகக் கண்காணிப்புக் குழு.’ சமூக வலைதளங்களின் வழியாகப் பண மோசடி, பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனையில் பலரும் ஈடுபட்டுவருகிறார்கள். அவற்றைத் தடுக்கவும், கண்காணிக்கவுமே காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அரசுக்கு எதிராகக் கருத்து சொல்லக் கூடாது என்று யாருமே சொல்லவில்லை. தி.மு.க அரசு அனைவரின் நியாயமான கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும். அதேசமயத்தில், அவதூறு பரப்புபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும்போது, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டியது இந்த அரசின் கடமை. சட்டத்துக்குப் புறம்பாக தி.மு.க நிர்வாகிகளே பேசியிருந்தாலும் அவர்கள்மீதும் வழக்கு தொடரப்படும். இந்தச் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சமூக ஊடகத்தில் அவதூறு பரப்புபவர்களும், தவறு செய்பவர்களும்தான் இந்தக் குழுவால் கருத்துச் சுதந்திரத்துக்கு பாதிப்பு என்று கதை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்!”
source https://www.vikatan.com/news/politics/discussion-about-freedom-of-expression-2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக