Ad

வெள்ளி, 9 செப்டம்பர், 2022

``பின்லேடனை போன்று யாகூப் மேமன் உடலை ஏன் கடலில் தூக்கிப்போடவில்லை?!" - ஆதித்ய தாக்கரே கேள்வி

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு விசாரணை நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கியது. அதனை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததையடுத்து நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவரின் உடல் மும்பை கொண்டு வரப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த சமாதி சமீபத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உத்தவ் தாக்கரே ஆட்சிக்காலத்தில்தான் யாகூப் மேமன் சமாதி அழகுபடுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் பூ, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சமாதி புகைப்படங்களையும் வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து உடனே அந்த சமாதியில் இருந்த பூக்கள் மற்றும் மின் விளக்குகளை போலீஸாரே நேரில் சென்று அப்புறப்படுத்தினர். இதற்கு பதிலளித்துள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, ``ஒசாமா பின்லேடனை போல் யாகூப் மேமன் உடலை ஏன் கடலில் தூக்கிப்போடவில்லை. யாகூப் மேமன் உடல் மும்பையில் புதைக்கப்படும் போது மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட யாகூப் மேமன் சமாதி

அது போன்ற மரியாதை ஏன் கொடுக்கப்பட்டது? இதற்காக எதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதே போன்று மகாராஷ்டிரா காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அதுல் லோண்டே இது தொடர்பாக அளித்த பேட்டியில், ``பாஜக அரசு ஏன் யாகூப் மேமன் உடலை அவனது குடும்பத்திடம் கொடுத்தது. இப்பிரச்னையை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த முயற்சி செய்கிறது. பாஜக-வின் இச்செயல் நாட்டிற்கு கேடு விளைவிக்கும். மும்பை மாநகராட்சி தேர்தலுக்காக யாகூப் மேமன் சமாதி பிரச்னையை எழுப்பி நகரில் மத மற்றுமையை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது. பாஜக அரசுதான் 2015ம் ஆண்டு யாகூப் மேமன் உடலை அவரின் குடும்பத்திடம் கொடுத்தது. எந்த தீவிரவாதியின் உடலும் குடும்பத்திடம் கொடுக்கப்படுவது கிடையாது. ஆனால் பாஜக அரசு யாகூப் மேமன் உடலை அவனது குடும்பத்திடம் கொடுத்தது. காங்கிரஸ் அரசு தீவிரவாதிகள் அப்சல் குரு மற்றும் அஜமல் கசாப் உடல்களை யாருக்கும் தெரியாத இடத்தில் அடக்கம் செய்தது” என்றும் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/india/why-didnt-terrorist-yakub-memon-body-throw-in-the-sea-like-bin-laden-aditya-thackeray

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக