சிறுவயதில் பூத்த காதல்:
எலிசபெத் தனது 8-வது வயதில், கிரீஸ் இளவரசரான பிலிப்பை முதன் முறையாகச் சந்தித்தார். அதன்பிறகு, 1939-ல் எலிசபெத் தனது குடும்பத்தோடு ராயல் கடற்படைக் கல்லூரிக்குச் சென்றபோது அவர்களுக்குப் பாதுகாவலராக வந்த பிலிப் மீது தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார் 13 வயதான எலிசபெத். அதன்பிறகு, கடிதங்கள் மூலம் காதல் வளர, 1947-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
எலிசபெத் ஸ்பெஷல்:
இரண்டாம் எலிசபெத்தின் செல்லப்பெயர் `லிலிபெட்' (Lilibet). அவருக்கு ஆசிரியர்கள் வீட்டுக்கே வந்து கல்வி போதித்தனர். மேலும், எலிசபெத் தனது சம வயது பெண்களோடு பழகும் வாய்ப்பை ஏற்படுத்துவதுக்காக, `ஃபர்ஸ்ட் பக்கிங்ஹாம் பேலஸ்' என்ற பெயரில் ஒரு அணியே உருவாக்கப்பட்டது.
நீண்டகால மகாராணி:
1952-ம் ஆண்டு பிரிட்டன் மகாராணியாக முடிசூட்டிக்கொண்ட எலிசபெத் அந்நாட்டு வரலாற்றில் 70 ஆண்டுகாலம் மகாராணியாக கோலோச்சினார். தனது பதவிகாலத்தில் 15 பிரதமர்களை பதவியேற வைத்திருக்கிறார். மேலும், பிரிட்டனை 63 ஆண்டுகள் ஆட்சி செய்த மகாராணி விக்டோரியாவின் சாதனையை முறியடித்து, 70 ஆண்டுகளுடன் பிரிட்டன் நாட்டை மிக அதிக ஆண்டுகள் ஆண்ட மகாராணி எனும் பெருமையையும் எலிசபெத் பெற்றிருக்கிறார்.
`முதல்' பிரிட்டன் ராணியாக :
1953-ம் ஆண்டு காமன்வெல்த் நாடுகளுக்கு நீண்ட சுற்றுப் பயணம் மேற்கொண்டார் எலிசபெத். அதில், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துக்குச் சென்றதன்மூலம் ஆட்சியில் இருக்கும்போது அந்த நாடுகளுக்குச் சென்ற முதல் பிரிட்டன் ராணி என்ற பெயரைப் பெற்றார்.
1991-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்ற எலிசபெத், அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அதன்மூலம் அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய முதல் பிரிட்டன் மகாராணி எனும் பெயரைப் பெற்றார்.
2011-ம் ஆண்டு ஐரிஷ் குடியரசுக்குச் சென்றார் மகாராணி எலிசபெத். பிரிட்டன் மகாராணி ஒருவர் அரசுமுறைப் பயணமாக ஐரிஷ் குடியரசுக்கு செல்வது அதுவே முதல்முறை என்பதால் வரலாற்று நிகழ்வாக அது கருதப்பட்டது.
மூன்றுமுறை இந்தியா வருகை:
மாகாராணி இரண்டாம் எலிசபெத் மூன்று முறை இந்தியாவுக்கு வந்திருக்கிறார். 1961-ம் ஆண்டு முதன்முறையாக தனது கணவருடன் இந்தியாவுக்கு வந்தார் மாகாராணி எலிசபெத். அப்போது, அவரை காண்பதற்காக டெல்லி விமான நிலையத்திலிருந்து இந்திய குடியரசு தலைவர் மாளிகை வரையிலான சாலையில் சுமார் 10 லட்சம் மக்கள் திரண்டிருந்தனர்.
காமராஜர் முன்னிலையில் மகனுக்கு கேக் கட்டிங்:
முதல்முறையாக இந்தியா வந்தபோது, சென்னைக்கு வருகை புரிந்த ராணி எலிசபெத், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராஜரையும் சந்தித்தார். அப்போது, இளவரசர் அன்ட்ருவின் முதல் பிறந்தநாள் என்பதால், அவரின் பிறந்தநாளை சென்னையில் வைத்தே கொண்டாட ஏற்பாடு செய்தார் காமராஜர். அதைத்தொடர்ந்து, சென்னை ராஜாஜி அரங்கில், காமராஜர் முன்னிலையிலேயே தனது மகன் ஆண்ட்ரூவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் ராணி எலிசபெத்.
அதன்பிறகு, 1983-ம் ஆண்டு இரண்டாவது முறையாக அவர் இந்தியா வந்தபோது, இந்திய பிரதமர் இந்திராகாந்தி, அன்னை தெரசாவை உள்ளிட்டோரைச் சந்தித்தார்.
மருதநாயகம் படப்பிடிப்பில்:
1997-ம் ஆண்டு, மூன்றாவது முறையாக இந்தியா வந்த எலிசபெத், சென்னையில் நடைபெற்ற நடிகர் கமல்ஹாசனின் மருதநாயகம் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதை தற்போது நினைவு கூர்ந்திருக்கும் கமல்ஹாசன், ``25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்" எனத் தெரிவித்திருக்கிறார்.
சோகமான பொன்விழா ஆண்டு:
1952-ல் மகாராணி பதவியேற்ற எலிசபெத், 2002-ம் ஆண்டில் தனது ஆட்சியின் பொன்விழா ஆண்டை விமரிசையாகக் கொண்டாடத் தயாரானார். ஆனால் அதே ஆண்டு, தனது தாயும், இளவரசி மார்கரெட்டும் இறந்ததால் அந்தக் கொண்டாட்டம் கலையிழந்துபோனது.
இறுதியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி:
பிரிட்டனின் 56-வது பிரதமராக தேர்வான லிஸ் ட்ரஸுக்கு (47) ராணி எலிசபெத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதுவே அவர் இறுதியாக கலந்து கொண்ட நிகழ்ச்சியாகும்.!
source https://www.vikatan.com/government-and-politics/international/interesting-moments-and-rare-information-in-the-life-of-queen-elizabeth
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக