கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பேருந்து நிலையத்திலிருந்து வாணியக்குடிக்குச் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியிருக்கிறார் செல்வமேரி என்ற மீனவப்பெண். அவரைப் பார்த்த பஸ் கண்டக்டர், ``மீன் வித்துட்டா வர்றே... நாறும். இறங்கு இறங்கு" எனக் கூறி பஸ்ஸிலிருந்து இறக்கிவிட்டிருக்கிறாராம். இதனால் மனம் நொந்த மீனவ மூதாட்டி செல்வமேரி, குளச்சல் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு சக பயணிகளிடம் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார். அவர் குளச்சல் பேருந்து நிலையத்தில் நின்று பேசுவதை வீடியோ எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். மீன் விற்பனை செய்யும் ஏழை மூதாட்டி நியாயம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம்பெற்றது. அரசுப் பேருந்தில் பயணிக்கக் கூடாது என மீனவ மூதாட்டிக்கு நடந்த புறக்கணிப்பு, சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது பற்றிப் பேசிய மூதாட்டி செல்வமேரி, ``தினமும் காலையில் தலைச்சும்மாட்டில் மீன்களைச் சுமந்து குளச்சல் பகுதியில விற்றுவிட்டு, மிச்சமுள்ள மீன்களை சாயந்திரம் குளச்சல் மார்க்கெட்டில விற்க வருவேன். ராத்திரி `பெண்களுக்கு இலவசம்’னு போர்டுவேச்சிருக்கிற அரசு பஸ்ல வீட்டுக்குப் போவேன். அதுபோலத்தான் திங்கள்கிழமை மீனை விற்றுவிட்டு ராத்திரி குளச்சல் பஸ் ஸ்டாண்டுல வந்து வாணியக்குடி போற அரசு பஸ்ஸுல ஏறினேன். பஸ் கண்டக்டரு `மீனு வித்துட்டா வாற... நாத்தமடிக்கும், பஸ்சுல வேற யாரும் போக வேண்டாமான்னு சொல்லி பஸ்ல இருந்து இறக்கிவிட்டுட்டாங்க" என்றார் அப்பாவியாக.
இந்தச் சம்பவம் குளச்சல் அரசுப் பேருந்து பணிமனை மேலாளர் சுந்தர்சிங் கவனத்துக்குச் சென்றிருக்கிறது. இதையடுத்து மூதாட்டியைப் பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துனர் யார் என்று விசாரணை நடத்திவருவதாகவும், நடத்தனர் குறித்த முழு விவரம் கிடைத்தவுடன் அவர்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் துர்நாற்றம் வீசுவதாக மூதாட்டி செல்வத்தை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், மூதாட்டியின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத குளச்சல் பேருந்து நிலைய சமய குறிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை போக்குவரத்துதுறை பொதுமேலாளர் அரவிந்த் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறாறார். மேலும் தமிழ்நாடு போக்குவரத்து துணை இயக்குநர் ஜெரோலின், அந்த மூதாட்டியிடம் நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார். மீன் விற்றுப் பிழைப்பு நடத்தும் முதாட்டியின் மனது புண்படும்படி அரசுப் பேருந்து நடத்துனர் நடந்துகொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. 1/2
— M.K.Stalin (@mkstalin) December 7, 2021
இந்தச் சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "குமரி மாவட்டத்தில், மீன் விற்பனைசெய்துவந்த தாய் ஒருவரை பேருந்து நடத்துனர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடையவைத்தது. மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச் சீட்டை வழங்கி, அதை நடத்துனர்கள் திறம்பட செயல்படுத்திவரும் இக்காலத்தில், ஒரு நடத்தனரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/cm-stalin-condemns-the-action-of-government-bus-employee-against-a-women-fish-seller
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக