Ad

புதன், 8 டிசம்பர், 2021

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: அழைப்பிதழில் இந்தி... கண்டித்த அன்புமணி!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்த நிலையில், 37-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டமளித்து உரையாற்ற உள்ளார். தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, டெல்லி இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழக தலைவர் கனகசபாபதி ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் ‘Azadi Ka Amrit Mahotsav’ என்ற இந்தி வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குள்ளான இன்விடேஷன்

இதனைக் கடுமையாக கண்டித்து பா.ம.க., இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அதில், “திருச்சியில் நடைபெறவிருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழில், விடுதலை நாள் பவள விழாவைக் குறிக்க Azadi Ka Amrit Mahotsav என்ற இந்தி முழக்கம் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும். விடுதலை நாள் பவள விழாவுக்கான வாசகமான Azadi Ka Amrit Mahotsav என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை “சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா” என தமிழக அரசு தமிழாக்கம் செய்துள்ளது. அதைத் தான் பயன்படுத்த வேண்டும். அதை பாரதிதாசன் பல்கலைக்கழகம் மீறியுள்ளது!

அன்புமணி ட்விட்

அழகான தமிழ் முழுக்கத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ள நிலையில், இந்தி முழக்கத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகம் பயன்படுத்தியிருப்பது இந்தி திணிப்பு தான். தமிழக அரசின் ஆணையை மதிக்காத பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது? அனைத்து தமிழக அரசு நிறுவனங்களும் மாநில அரசின் ஆணையை மதிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆணையை மதிக்காமல் இந்தி முழக்கத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ட்விட்டரில் காட்டமாக தன்னுடைய கருத்தை முன் வைத்துள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/education/bharathidasan-university-invitation-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக