Ad

புதன், 1 டிசம்பர், 2021

12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: `மன்னிப்பு கேட்டால்’... `முடியாது’ - கடந்த கூட்டத் தொடரில் நடந்தது என்ன?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும், காங்கிரஸ், திரிணாமுல், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெறக்கோரி, கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாடாளுமன்றத்துக்குள்ளாகவும் கடும் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பிக்களும் கூட்டத்தொடர் முடியும் நாள் வரை, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு, தினமும் தர்ணா போராட்டம் நடத்தவிருப்பதாகவும் அறிவித்திருக்கின்றனர்.

12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டத்தை எதிர்த்து, எதிர்கட்சிகள் ஆர்பாட்டம்

இந்த நிலையில், எம்.பிக்கள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே சஸ்பெண்ட் விவகாரத்தை மறுபரிசீலனை செய்வதாக மாநிலங்களவை சபாநாயகர் வெங்கைய நாயுடு கூறியிருக்கிறார். ஆனால், மக்கள் பிரச்னைக்காக குரல்கொடுத்ததற்கு நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் அல்ல! என எதிர்க்கட்சி எம்.பிக்கள் காட்டமாக பதிலளித்திருக்கின்றனர். குளிர்கால கூட்டத்தொடரையே அனல் தகிக்க வைக்கும் இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?

`எதற்காக எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்? முந்தைய மழைக்கால கூட்டத்தொடரில் அப்படி என்னதான் நடந்தது?

கடந்த ஜூலை 19-ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது. தொடக்கம் முதலே பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் குறித்தான பிரச்னைகள் போன்றவற்றை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அனைவரும் கடும் அமளியில் ஈடுபட்டுவந்தனர். அந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி மாநிலங்களவைக் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் உச்சபட்சமாக மேசைகள் மீது ஏறியும், புத்தகங்கள், அறிக்கைகளைக் கிழித்தெறிந்தும் கடுமையான அமளியில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றம்

எதிர்க்கட்சியினரின் இந்த நடவடிக்கைகளால், தான் மிகுந்த வேதனையடைந்ததாகவும், இரவெல்லாம் தூங்கவில்லையென்றும் மாநிலங்களவை சபாநாயகர் வெங்கைய நாயுடு கண்ணீர் வடித்தார். அதுகுறித்து பேசிய அவர்,

`அன்றைய மழைக்கால கூடத்தொடரில் நடந்த சம்பவத்திற்காக,இன்றைய குளிர்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்ட்!'

இந்த நிலையில், கடந்த நவம்பர் 29-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முதல்நாளிலேயே புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு, விவாதம் நடத்தப்படாமல் மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, மாநிலங்களவை சபாநாயகர் வெங்கைய நாயுடு, `` கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற மாண்பையே சிதைக்கும் வகையில் செயல்பட்டனர். எனவே, இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள்" என அதிரடியாக உத்தரவிட்டார்.

வெங்கய்ய நாயுடு

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா வர்மா, பியூலா தேவி நநிதம், ரிபுன் போரா, ராஜாமணி படேல், சயீத் நசிர் ஹூசேன், அகிலேஷ் பிரசாத் ஆகிய ஆறு எம்.பிக்களையும், சிவசேனா கட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, அனில் தேசாய் வசேனா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டோலா சென், சாந்தா ஷேத்ரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த இளமாறன் கரீம், பினோய் விஸ்வம் உள்ளிட்ட 12 மாநிலங்களவை எம்.பிக்கள் மீது இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர் சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தினர், ஆனால் சபாநாயகர் மறுக்கவே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

`மன்னிப்பு `கேட்கவேண்டும்!' - பாஜக அரசு, `கேட்க முடியாது!' - 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!'

இந்த நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எட்டு எம்.பிக்கள், வெங்கைய நாயுடுவை சந்தித்து, 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவை ரத்துசெய்யக்கோரினர். ஆனால், சபாநாயகர் வெங்கைய நாயுடு, `சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் அதற்கு மன்னிப்புகேட்க வேண்டும்' எனக்கேட்டார். அதேபோல, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ` எம்.பிக்கள் மன்னிப்பு கோரினால் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும்' என தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.

பிரகலாத் ஜோஷி

ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் `மன்னிப்பு கேட்க முடியாது' என்ற கருத்தில் உறுதியாக இருக்கின்றனர். இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து வெளியிட்ட ராகுல்காந்தி, ``இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன 12 எம்.பிக்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என அரசு தரப்பில் கோருகின்றனர். ஆனால், நாங்கள் எதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும்? மக்கள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேசியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டுமா? அது எப்போதும் முடியாது!" என பதிலளித்திருந்தார்.

ராகுல்காந்தி

அதேபோல, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``முந்தைய கூட்டத்தொடரில் நடந்துகொண்ட விதத்திற்காக இந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். இது நாடாளுமன்ற விதிமுறைகளுக்கே எதிரானது. இதனால் மன்னிப்பு கேட்கும் தேவை இங்கு இல்லை" என நாடாளுமன்றத்திலேயே கருத்துதெரிவித்திருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல், சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பினோய் விஸ்வம், ``எதற்கு மன்னிப்பு? மன்னிப்பு கேட்பதற்கு நாங்கள் சாவர்க்கர் அல்ல. எங்கள் கலாசாரத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதும் வழக்கம் இல்லை" என காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும், ``நாடாளுமன்ற வழிமுறைகளையும், எதிர்க்கட்சிகளையும் கீழ்த்தரமாக நடத்தும் அரசு இது. எதிர்க்கட்சிகளே நாட்டுக்குத் தேவையில்லை எனக் கருதும் அரசு இது. இவர்களின் முன் நாங்கள் கீழ்ப்படிய மாட்டோம்! இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தை நாடவிருக்கிறோம்!" எனவும் பினோய் விஸ்வம் தெரிவித்திருக்கிறார்.

தர்ணா போராட்டத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பிக்கள்

மன்னிப்பு கேட்க வைப்பதில் பாஜக அரசும், மன்னிப்பு கேட்க முடியாது என்பதில் எதிர்க்கட்சிகளும் பிடிவாதமாய் இருக்கின்றன. இதன் முடிவு தான் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/background-of-12-rajya-sabha-mps-suspended-in-parliament-session

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக