மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையை தி.மு.க எதிர்த்துவருகிறது. குறிப்பாக, இந்த கொள்கையில் இடம்பெற்றிருக்கும் மும்மொழிக்கொள்கை போன்ற அம்சங்களை தி.மு.க கடுமையாக எதிர்க்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது மட்டுமல்லாமல், ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ச்சியாக புதிய தேசிய கல்விக் கொள்கையை தி.மு.க எதிர்த்துவருகிறது. கடந்த மே மாதம் இணையவழி கல்வி, புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக அனைத்து மாநிலங்களின் கல்விச் செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதை, தமிழக அரசு புறக்கணித்தது.
அந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாநிலங்களின் கல்வித்துறைச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மாநில அரசின் கருத்துகள் மற்றும் பரிசீலனைகளைத் தெரிவிக்க, மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். அந்த கடிதத்துக்கு, மத்திய கல்வித்துறை அமைச்சகத்திடமிருந்து பதில் இல்லை. எனவே, கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது.
இது தொடர்பாகப் பேசிய தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ``குலக்கல்வி திட்டத்தை மறைமுகமாகவோ, நேரடியாகவோ திணிக்கப் பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் தேசிய கல்விக் கொள்கையைப் பார்க்கும்போது தோன்றுகிறது. தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டுவைக்கும் விதமாக மும்மொழிக் கொள்கை இருக்கிறது. இட ஒதுக்கீடு பற்றியும் இந்தக் கல்விக்கொள்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எதிர்க் கட்சியாக இருந்தபோதும், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போதும், இதை தி.மு.க தொடர்ந்து கூறிவருகிறது.
மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று தமிழக அரசின் சார்பாக இந்த கருத்துகளைச் சுட்டிக்காட்டுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அமைச்சர்கள் பங்கேற்க அனுமதி கோரி நாங்கள் எழுதிய கடிதத்துக்கு மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவேதான், அந்த கூட்டத்தை நாங்கள் புறக்கணித்தோம். தி.மு.க எந்த விஷயத்தைக் கையில் எடுத்தாலும் கொள்கை மாறாமல், கருத்து மாறாமல் இறுதிவரைப் போராடும்´´என்றார்.
சமீபத்தில், தமிழக அரசின் சார்பில், `இல்லம் தேடிக் கல்வி’ என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்துக்கு, தி.மு.க அரசை ஆதரிக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தி.மு.க-வின் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அம்சம்தான், தமிழக அரசின் `இல்லம் தேடி கல்வி´ திட்டம் என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்த திட்டம் தொடர்பாக விளக்கமளித்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், ``மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பதை ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறோம். மாநில அளவிலான கல்விக் கொள்கையை வகுப்பதற்குக் கல்வியாளர்கள் அடங்கிய குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும்´´ என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில், ``தமிழ்நாடு 20 அரசுப் பல்கலைக்கழகங்களைக் கொண்டு, மாநிலத்தில் மாணவர் சேர்க்கை விகிதம் சிறந்த முறையில் இருக்கிறது. அதேபோல, புதிய தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல திட்டங்கள் இருப்பதால் பல்கலைக்கழகங்களில் அதை அமல்படுத்த முன்வரவேண்டும்´´ என ஆளுநர் ரவி கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
Also Read: `உரிமை பறிபோகும்; கல்வி சிதைந்துபோகும்!'- புதிய கல்விக் கொள்கை பற்றி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். ``பொதுவாகவே ஆளுநர்கள் மத்திய அரசின் ஒரு ஏஜென்ட்டாகவே செயல்படுவார்கள். அதனால், மத்திய அரசின் கொள்கை பற்றி தமிழக ஆளுநரும் அப்படித்தான் பேசுவார். முதல்வரைப் பொறுத்தவரையில், தி.மு.க-வின் வாக்குறுதிகளின் அடிப்படையில்தான் அவர் செயல்படுவார். முதல்வர் ஸ்டாலினின் கருத்து மத்திய அரசுக்கான சவால் என்று பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான் என்று கடந்த அதிமுக ஆட்சியில்கூட, திமுக உறுதியாக இருந்தது.
எனவே, புதிய தேசிய கல்விக் கொள்கையில் தி.மு.க என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது என்பதைத்தான் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். நீட் போன்ற விவகாரங்களில் தமிழக அரசு பெரிய அளவிலான எதிர்ப்பை தெரிவித்தது. ஆனால், நீட் கூட மத்திய அரசை நோக்கிய ஒரு பிரச்னையாகப் பார்க்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிமன்றம் மூலமாக வந்த ஒரு பிரச்னையாக அதை எடுத்துக்கொள்ளலாம். புதிய தேசிய கல்விக்கொள்கையில் தி.மு.க அரசு எந்தளவுக்கு முனைப்புடன் செயல்படும், அல்லது எந்தளவுக்கு எதிர்ப்புடன் செயல்படும் என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது" என்றார்.
Also Read: தமிழ்நாடு நாள் மாற்றமும் எதிர்ப்பும்; திமுக அரசின் முடிவும் பின்னணியும்! - ஓர் அலசல்!
தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்.``பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் இருக்கிறார். அந்த வகையில் அவர் துணைவேந்தர்களை அழைத்துப் பேசுகிறார். அதில் எந்தத் தவறும் இல்லை. தமிழக அரசு நிறைய நிதி ஒதுக்கீடு செய்து பல்கலைக்கழகங்களை நல்லபடியாக நிர்வகிப்பதாக ஆளுநர் பாராட்டியிருக்கிறார். இன்னும் நிறைய ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மாநில அரசுக்கென்று ஒரு கல்விக்கொள்கை இருக்கிறது. தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில்லை என்பதை மாநில அரசு கொள்கை முடிவாக எடுத்திருக்கிறது. இந்த நிலையில், தேசியக் கல்விக்கொள்கையை அமல்படுத்துங்கள் என்று துணைவேந்தர்களிடம் ஆளுநர் சொன்னதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால், ஆளுநரின் உரை தொடர்பாக ராஜ்பவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் அந்த அம்சம் இடம்பெறவில்லை. ஆளுநர் பேசியபோது, அதைச் சொல்லியிருக்கலாம். ஆனால், செய்திக்குறிப்பில் அதிகாரப்பூர்வமாக அது இடம்பெறவில்லை.
புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துங்கள் என்ற கருத்தை அவர் சொல்லியிருந்தாலும், அதிகாரப்பூர்வமாகச் செய்திக் குறிப்பில் அதைச் சொல்ல விரும்பவில்லை என்கிறபோது, மாநில அரசுக்கு ஒரு மரியாதை அவர் கொடுக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டும். அது, மாநில அரசுடன் மோதல் போக்கை உருவாக்கும் என்று ஆளுநர் நினைத்திருக்கிறார். மேலும், துணைவேந்தர்கள் கூட்டம் நடப்பதற்கு முந்தை நாள், அந்த கூட்டத்தில் மாநில சுகாதாரத்துறை செயலாளரும், உயர் கல்வித்துறை செயலாளரும் கலந்துகொள்வார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரும் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தமிழக அரசின் அதிகாரிகளும் யாரும் கலந்துகொள்ளவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் மோதலோ, கசப்புணர்வோ வேண்டாம் என்றுதான் இரு தரப்பினரும் நினைப்பதாகத் தெரிகிறது" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/does-governor-ravi-contradict-with-dmk-governments-stand-in-education-policy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக