Ad

செவ்வாய், 11 மே, 2021

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கோவிட் சிகிச்சை... உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இதோ!

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் கோவிட் நோயாளிகளுடைய செலவுகளை, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டட்த்தின் கீழ் அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார். பதவி ஏற்றவுடன் அவர் கையெழுத்திட்ட முதல் ஐந்து திட்டங்களில் இதுவும் ஒன்று.

ஸ்டாலின்

தமிழக அரசு, பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ், இந்த கோவிட்-19-ஐ பட்டியலிடப்பட்ட நோயாக அரசிதழில் அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்தத் தொற்றுப் பரவலின் நிலையைக் கருத்தில் கொண்டு, இதற்கு சிகிச்சை மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. மேலும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளை இயக்குநர் மூலமாக தேவைக்கேற்ப கூடுதல் தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கிட அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, அவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 1997 இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கோவிட் தொற்றுநோய் தடுப்பில் ஈடுபட்டிருக்கும் அனைத்து பங்கேற்பாளர்களையும் கலந்தாலோசித்து, இதற்கான சிகிச்சைகளை ஏழை எளியோருக்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கோவிட் நோயாளிகள்

அதில், கோவிட் நோயாளிகள் அனைவருக்கும் என்று முதல்வர் அறிவித்திருந்த நிலையில், இந்தக் காப்பீட்டுத் திட்டம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. அந்த சந்தேகங்கள் குறித்து, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் குறித்த அரசு உயர் அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் அந்தச் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். அந்தக் கேள்விகளும் பதில்களும் இனி...

``முதல்வர், அனைவருக்கும் காப்பீடு என்று கூறியுள்ளார். ஆனால், இதைப் பெறுவதற்கு காப்பீட்டுத் திட்டத்தில் இருக்கவேண்டியது அவசியமா? அல்லது, இனி காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துவிட்டு, இதைப் பெறலாமா? அல்லது, காப்பீட்டுத் திட்டம் இல்லாமலே, பொதுமக்கள் அனைவரும் இதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்களா?"

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

``முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட அட்டை வைத்துள்ளவர்களே இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வருவார்கள். இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் மக்களை புதிதாக இணைப்பதற்கான வேலைகள் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன. இதில் இதுவரை இணையாதவர்கள், தற்போது இணைந்துகொண்டு, அதன்மூலம் பயன்பெறலாம்."

``குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 ஆக இருந்தால்தான் முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியுமென்று 5 வருடங்களுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்டது. இப்போதும் அதுவேதான் பின்பற்றப்படுமா அல்லது புதிதாக வேறு அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளனவா?"

மருத்துவக் காப்பீடு

``ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம், 72,000 என்ற வரையறை அதேபோல்தான் கடைப்பிடிக்கப்படுகின்றது. அந்த வரையறையின் கீழ் வருவோர் மட்டுமே இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க முடியும். ஏழை, எளிய மக்களின் தலையில் கோவிட் சிகிச்சை என்ற பெயரில் மிகப் பெரிய பொருளாதாரச் சுமை விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம்."

``காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு 5 லட்சம் வரைதான் என்ற அளவு உள்ளது. ஆனால், கொரோனா சிகிச்சையில் அதற்கு மேலும்கூட செலவாகலாம். அப்படியாகும்போது அந்தச் செலவுகளும் ஏற்கப்படுமா?"

கொரோனா மருத்துவமனை

``ஓராண்டுக்கு 5 லட்சம் என்ற அளவு என்பது கோவிட் சிகிச்சையையும் உட்படுத்தியதுதான். ஒருவேளை, கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு 5 லட்சத்தைவிட அதிகமாக காப்பீட்டு நிறுவனத்தால் செலவிடப்பட்டால், ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் செலவிடப்பட்ட உரிமைக் கோரல் விகிதம் 95 விழுக்காட்டிற்கு மேல் வரும்போது கூடுதல் தொகையினை, காப்பீட்டு நிறுவனத்திற்கு மீண்டும் வழங்கிட தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஒருவேளை கொரோனா சிகிச்சைக்கு ஆகும் செலவினங்களைப் பற்றிய முடிவுகள், அந்தந்த தனிநபர்களின் சிகிச்சையைப் பொறுத்து முடிவெடுக்கப்படும்."

``ஒரே குடும்பத்தில் எத்தனை பேர் வரை இந்தக் காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தலாம்?"

C0VID 19 hospital (Representational Image)

``ஒரு குடும்பத்தில் முதலமைச்சர் காப்பீட்டு அட்டையில் இடம்பெறும் அனைத்து உறுப்பினர்களுமே இதன்மூலம் பயனடையலாம்."

``முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதேபோல், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மக்கள் கொரோனா சிகிச்சை எடுக்கலாம் என்று கூறினார். அதற்கும் இப்போது முதல்வர் அறிவித்திருக்கும் காப்பீட்டுத் திட்டத்திற்கும் என்ன வித்தியாசம்?"

``காப்பீட்டுத் தொகை, அதன்மூலம் பயன்பெறுவதற்கான தகுதிகள் ஆகியவ்ற்றில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், மக்களுக்கு இது இன்னும் எளிமையாகச் சென்றடைய வேண்டும் என்பதால், தனியார் மருத்துவமனைகளுக்கு பணம் உடனடியாகச் செலுத்தப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு - தலைமைச் செயலகம்

``முன்னர், ஒருவர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கோவிட் சிகிச்சையில் பயனடைய மருத்துவரின் பரிந்துரைக் கடிதம் வாங்கி வருவது போன்ற பல செயல்முறைகள் இருந்தன. அது, நோயாளிகள் காப்பீட்டில் பயன்பெற நீண்ட அவகாசம் எடுத்தது. அந்தச் சிக்கல்கள் இனி இல்லை. மருத்துவமனைகளுக்கு மூன்றே நாள்களில் சிகிச்சைக்கான பணம் செலுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மக்கள் கோவிட் சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக, அனைத்து தனியார் மருத்துவமனைகளோடும் தமிழக அரசு இணைந்து செயல்படுகின்றது. மேலும் கூடுதலாக கொரோனா சிகிச்சை அளிப்பதில் தனியார் மருத்துவமனைகள் ஈடுபடுத்தப்படும், அவையும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்று இதுகுறித்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


source https://www.vikatan.com/government-and-politics/healthy/covid-19-treatment-in-private-hospital-under-tn-govt-insurance-scheme-faqs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக