Ad

புதன், 12 மே, 2021

``கமல்ஹாசனிடம் ஸாரி கேட்டேன்!'' - வானதி சீனிவாசன்

தேர்தல் பிரசாரத்தில் தொடங்கி வாக்கு எண்ணிக்கை வரை பரபரப்பாக இருந்தது கோவை தெற்குத் தொகுதி. கமல்ஹாசனுக்கும் வானதி சீனிவாசனுக்கும் நடந்த கடுமையான போட்டியில், `துக்கடா’ முதல் `லிப் சர்வீஸ்’ வரை பல விமர்சனங்கள் வெடித்தன. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் தங்களது இருக்கையின் நுனியில் அமர்ந்து எதிர்நோக்கியதும் கோவை தெற்குத் தொகுதி முடிவைத்தான்.

வானதி சீனிவாசன்

Also Read: `மம்தா இப்படித்தான் அரசை வழிநடத்துகிறாரா?’ - மேற்கு வங்கத்தில் கைதான வானதி சீனிவாசன் காட்டம்

இறுதியில் கமல்ஹாசனை தோற்கடித்து கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றிருக்கிறார் வானதி சீனிவாசன். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

``சட்டமன்ற உறுப்பினர், பி.ஜே.பி தேசிய மகளிரணித் தலைவர்... எப்படி உணர்கிறீர்கள்..?”

``30 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் இருக்கிறேன். என் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கப்போகிறது என்பதில் பெருமிதம். தமிழ்நாட்டில் தாமரை மலராது என்று எங்களுக்கு எதிராகப் பலர் பிரசாரம் செய்தனர். அவர்கள் முன்பு எப்படியாவது தாமரையை ஜெயிக்க வைத்துக் காட்ட வேண்டும் என மனதில் உறுதியெடுத்தேன். தாமரையை ஜெயிக்க வைத்துவிட்டோம் என்பதைத்தான் முதலில் உணர்ந்தேன். அதன்பிறகுதான் பிரபலமான நடிகர், வளர்ந்து வரும் அரசியல் கட்சித் தலைவரை தோற்கடித்தோம் என்பதை உணர்ந்தேன். நம் ஊரில் தாமரையை மலர வைத்துவிட்டோம் என்பதில் மகிழ்ச்சி. என்னுடைய களப்பணிகள்தான் தேசிய தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் என்னை அமர வைத்துள்ளது.”

``கோவை தெற்குத் தொகுதியில் மும்முனைப் போட்டி இவ்வளவு கடுமையாக இருக்கும் என எதிர்பார்த்தீர்களா?”

``கமல் இங்கு நிற்கிறார் என்று பலரும் ஆச்சர்யத்துடன் கூறினர். என் மனதில் கொஞ்சம்கூட சலனமே இல்லை. சரி வரட்டும் என்றுதான் தோன்றியது. நாம் அதைப் பெரிதாக நினைக்கவில்லையா என்று இப்போது நினைக்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை மக்களை சந்திப்பது, கட்சியினரை ஒருங்கிணைப்பது, கூட்டணி போன்ற பல புதிய அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.”

வானதி சீனிவாசன்

``தேர்தல் களத்தில் உங்களுக்கு நிறைய சவால்கள் இருந்தன. அதை எப்படிச் சமாளித்தீர்கள்?”

``அ.தி.மு.க-வில், ஆரம்பத்தில் இந்தத் தொகுதி அவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்ற வருத்தத்தில் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்கு கேட்க சென்றுவிடுவேன். `எங்களுக்கு நல்ல வேட்பாளர் கிடைத்துள்ளார். எல்லோருடனும் அனுசரித்து சென்று, மக்களுடன் இறங்கிப் பழகுகின்றார்’ என்று அ.தி.மு.க-வினர் பெருமையடைந்தனர். தொடர்ந்து 4 மணி நேரம் வரை நடப்பேன். ஒரு நாளைக்கு 3 - 4 மணிநேரம்தான் தூங்கினேன். இப்படித்தான் ஒவ்வொரு நாளும் சென்றது.

கமலின் பிரபலம் என்பதை மட்டும்தான் நான் சவாலாகக் கருதினேன். சமூக வலைதளம், ஊடகங்கள் அவருக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுத்தனர். அதைச் சமாளிக்க நான் ஒவ்வொரு வீடாக இறங்கிச் சென்று, அனைத்துத் தெருக்களுக்கும் சென்றேன். அ.தி.மு.க கட்டமைப்பும், பூத்தில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கும் மிகவும் பலமானது. அதையும் கடந்து, ஒவ்வொரு பூத்திலும் கமல் வாங்கிய வாக்குகளால் நான் ஆச்சர்யமடைந்தேன். சினிமாவுக்கு இத்துணை வீச்சு இருக்கிறதா என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். அதற்கு முன்பு கமல் இவ்வளவு வாக்குகள் வாங்குவார் என நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. பொதுவாழ்க்கையில் நிறைய அவதூறுகளைக் கடந்துதான் நான் வந்துள்ளேன். யோகி ஆதித்யநாத் வருகையின்போது, யார் கல் எடுத்து வீசினார்கள் என இப்போதுவரை எனக்குத் தெரியாது. அதுதொடர்பாக நான் கலெக்டரிமும் மனு கொடுத்தேன். எந்த நேரத்திலும் கலவரம் செய்தோ, மத ரீதியாக வித்தியாசப்படுத்தியோ நாங்கள் பார்ப்பதில்லை.”

``கமல் என்ற பிம்பத்தை எப்படி எதிர்கொண்டீர்கள்?”

`` `உங்களுடன் எப்போதும் நெருக்கமாக உணரக்கூடிய நபராகப் பார்த்து வாக்களியுங்கள். கடந்தமுறை தோற்றாலும் உங்களுக்காக 5 ஆண்டுகள் களப்பணி செய்தவள் நான்' என்றும், மக்களுக்கு நான் என்ன செய்தேன், என்ன செய்ய உள்ளேன் என்பதையும் மீண்டும் மீண்டும் கூறினேன். வெற்றி பெற்றாலும் கமல் பிக்பாஸுக்குத்தான் செல்வார் என்பதையும் ஆரம்பத்திலேயே கூறினேன். தாஜ் ஹோட்டலில் தங்கி, சுற்றிலும் பௌன்சர்களை வைத்துக் கொண்டிருந்தார் கமல். அவர் உதவியாளர்களைத் தாண்டி யாரும் அவரை நெருங்க முடியாது. ஆனால், எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம் என்று மக்களிடம் சொன்னேன். அது எங்களுக்குக் கைகொடுத்தது.”

கமல்ஹாசன் வானதி சீனிவாசன்

``வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பத்தில் நீங்கள் 3-வது இடத்தில்தான் இருந்தீர்கள். அப்போது என்ன நினைத்தீர்கள்?”

``தெற்கு தொகுதியில் எப்போதும் ஆரம்பத்தில் எண்ணப்படக் கூடிய வாக்குகள், நாங்கள் பலவீனமாக இருக்கும் பகுதிகள். ஆனால், எங்களுக்குள் பெரிய வித்தியாசம் வராமல் இருந்தது. மூன்று பேரும் மாறி மாறி முன்னிலையில் வந்து கொண்டிருந்தோம். கூட்டணியில் இந்தத் தொகுதி கிடைக்குமா, கிடைக்காதா என்று பேச்சு வந்தபோதுகூட, `எந்தத் தொகுதியில் நின்றால் வெற்றி கிடைக்குமோ அதைக் கட்சி முடிவு செய்யட்டும்’ என்றுதான் கூறினேன். எங்கள் கட்சியும் கூட்டணியும் நம்பி எனக்கு வாய்ப்பளித்தனர். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்தேன். கோவை, தெற்குத் தொகுதியில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் நான் வேலை செய்திருக்கிறேன். நமது வேலையை முழுமையாகச் செய்துள்ளோம் என்பதால் ரிசல்ட்டைப் பற்றி நான் கவலைப்படவில்லை.”

``கமல்தான் பெரும்பாலான சுற்றுகளில் முன்னிலை வகித்தார். தோற்றுவிடுவோம் என எந்த இடத்திலும் பயமாக இல்லையா?”

``நான் அவ்வளவு எளிதில் எதற்கும் பதற்றமடைய மாட்டேன். உள்ளே இருந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர்கூட, `3-வது இடத்தில் இருக்கும்போதும், முதல் இடத்துக்கு வரும்போதும் ஒரே மாதிரிதான் ரியாக்ட் செய்கிறீர்கள்?!’ என்று கிண்டலாகக் கேட்டார். 24-வது சுற்றின் முடிவிலேயே 1,400 வாக்குகள் நாங்கள் முன்னிலை வந்துவிட்டோம். அடுத்துவரக்கூடிய பகுதிகள் எங்கள் கூட்டணி பலமாக உள்ள பகுதி என்பதால் நாங்கள் மிகுந்த நம்பிக்கைக்குச் சென்றுவிட்டோம். ஆரம்பத்தில் இருந்தே கமல் குறைந்த வித்தியாசத்தில்தான் முன்னிலையில் இருந்தார்.”

கமல்ஹாசன்

``வாக்கு எண்ணிக்கையின்போது நீங்களும் கமலும் பேசினீர்களே?”

``கமல் தனது முதன்மை ஏஜென்டிடம் மட்டும்தான் பேசிக் கொண்டிருந்தார். ஏற்கெனவே இருவரும் பரஸ்பரம் வணக்கம் வைத்துக்கொண்டோம். கிளம்பும்போது கமலிடம், `தேர்தல் பிரசாரத்தில் நான் உங்களை ஏதாவது காயப்படுத்தியிருந்தால், `Sorry... Please Excuse’ என்று சொன்னேன். அதற்கு கமல் `Okay... It's alright’ எனக் கூறினார். `நல்ல ஓட்டு வாங்கியுள்ளீர்கள். உங்கள் அரசியல் பயணத்துக்கு வாழ்த்துகள். சென்னையில் சந்திப்போம்’ எனக் கூறிச் சென்றுவிட்டேன்.”

``வெற்றி பெற்ற பின்னர் மறக்க முடியாது பாராட்டு?”

``எல்லோரும் பாராட்டினார்கள். அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை, ஸ்மிருதி இரானி தோற்கடித்திருந்தார். அப்போது அவரை எல்லோரும் `Giant killer’ என்று பாரட்டினர். ஸ்மிருதி இரானி எனக்கு நீண்டகால நண்பர். அவர் இருந்த தேசிய மகளிரணிக்கு நான் வந்தபோதே அவர், `என்னுடைய இடத்துக்கு நீ வந்துவிட்டாய்’ என மகிழ்ந்தார். அவர் ராஜ்யசபா எம்.பி-யாக இருந்தபோதும் அமேதி தொகுதியில் வேலை செய்ததை நான் பார்த்திருக்கிறேன். நான் வெற்றி பெற்ற உடன் ஸ்மிருதி இரானி, என்னை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். நிர்மலா மேடமும் என்னை வாழ்த்தி தமிழில் ட்வீட் செய்திருந்தார். மேற்கு வங்க ஆளுநர், `நீ எங்களை எல்லாம் பெருமையடையச் செய்துவிட்டாய்’ எனப் பாராட்டினார். என் இரண்டாவது மகன், `எல்லோருக்கும் ஒரு நிமிடம் இதயம் வெளியில் வந்து, உள்ளே சென்றிருக்கிறது’ எனக் கிண்டல் செய்தான். என்னையும் `Giant killer’ என்று பாராட்டினார்கள். பலர், `நீ எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றுள்ளாய் என்பதை உணரவில்லை’ என்று கூறினர். மேற்கு வங்கத்துக்கு சென்ற பிறகுதான் அதை நான் உணர்ந்தேன்.”

வானதி சீனிவாசன்

``உங்களது வெற்றியில் சந்தேகம் இருப்பதாக கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளாரே?”

``காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரைத் தவிர, கடைசி நேரம் வரை எல்லோரும் வாக்கு எண்ணிக்கையின்போது இருந்தோம். கமல்ஹாசன் கண் முன்னர்தான் இ.வி.எம் மெஷினை ஓப்பன் செய்து வாக்கு எண்ணினார்கள். கமலின் முன்னிலை எட்டிப்பிடிக்கும் தூரத்தில்தான் இருந்தது. புகாரளித்துள்ள ராகுல்காந்தி வாக்கு எண்ணும் இடத்தில் எனக்கு பின்னால் அமர்ந்து என்னுடன் பேசிக்கொண்டுதான் இருந்தார். இதில் எந்தக் குளறுபடியும் இல்லை. குற்றம்சாட்டுபவர்கள் ஆதாரத்துடன் பேச வேண்டும்.”

``எம்.எல்.ஏ, தேசிய மகளிரணி தலைவர் என்று பல பொறுப்புகளை, சவால்களை எப்படிக் கையாளப்போகிறீர்கள்?”

``நான் வெற்றி பெற்ற இரண்டே நாள்களில், மேற்கு வங்கத்தில் எங்கள் கட்சி மகளிரணி தொண்டர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளுக்கு எதிராகப் போராட சென்றுவிட்டேன். அங்கிருந்து வந்த தகவல்களால் என்னால் இரண்டு நாள்கள் தூங்க முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தேன். எங்கள் கட்சியைச் சேர்ந்த பெண்கள், உறவினர்களை எல்லாம் நிர்வாணமாக்கி திரிணாமுல் காங்கிரஸார் அடித்தனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அடையாளப் போராட்டம் நடத்தினோம். உடனடியாக எங்களைக் கைது செய்தனர். எத்தனை பொறுப்புகள் இருந்தாலும், அதைக் கையாள்வதில்தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது. குடும்பத் தலைவியாக, எம்.எல்.ஏ-வாக, தேசியத் தலைவராக நான் சிறப்பாகச் செயல்படுவேன். எங்கு சென்றாலும் தொகுதியைக் கைவிடமாட்டேன். தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற, மத்திய, மாநில அமைச்சர்களிடம் பேசிவருகிறேன்.”

வானதி சீனிவாசன்

``தி.மு.க அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?”

``ஒரு வாரத்தில் அரசை அனுமானிப்பது கடினம். அவர்களுக்கு சற்று நேரம் கொடுக்க வேண்டும்.”

``கோவை தெற்குத் தொகுதியில் உங்கள் முதல் நடவடிக்கை என்னவாக இருக்கும்?”

``நான் அனைத்து மக்களுக்குமானவள். விருப்பு, வெறுப்பு இல்லாமல் எல்லா பணிகளையும் தொடர்ந்து கொண்டேதான் இருப்பேன். கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்க நிறைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது உள்ளன.”



source https://www.vikatan.com/government-and-politics/politics/coimbatore-south-mla-vanathi-srinivasan-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக