Ad

செவ்வாய், 11 மே, 2021

ஸ்ரீரங்கம் : கோயில் நிர்வாகம் ஜீயரை நியமிக்க முடியுமா... சர்ச்சைக் கிளப்பிய அறிவிப்பும், ரத்தும்!

6.5.2021 அன்று ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலிலிருந்து வெளியான ஒரு விளம்பர அறிக்கை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயர் 51-ம் பட்டத்துக்கான இடம் காலியாக இருப்பதாகவும் அதற்குத் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த அறிவிப்பு கூறுவதோடு அந்தப் பணிக்கான தகுதிகளையும் பட்டியல் இடுகிறது. இது பக்தர்களிடையேயும் ஆன்மிகப் பணி செய்யும் அன்பர்களிடையேயும் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா இதுகுறித்து ஒரு ட்வீட் ஒன்றை வெளியிட பிரச்னை மேலும் பரபரப்பானது.

வைணவர்களுக்குக் கோயில் என்றாலே அது ஸ்ரீரங்கத்தைத்தான் குறிக்கும். வைகுண்டத்துக்கு இணையான இந்தத் தலத்தில்தான் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடம் உள்ளது. பாரம்பர்யமான இந்த மடத்தின் முதல் ஜீயராக ஸ்ரீ ஆளவந்தார் போற்றப்படுகிறார். அவருக்குப் பின் ஸ்ரீ ராமாநுஜர் அந்த பீடத்தை அலங்கரித்தார். ராமாநுஜர் தன் காலத்தில் திவ்ய தேசங்களை எல்லாம் பராமரிக்கவும் நித்திய வழிபாடுகள் செய்யவும் சிம்மாசனக் காரர்களை நியமித்தார். அந்த அளவில் இந்த மடம் சம்பிரதாயத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே வைணவர்களால் கருதப்படுகிறது.

ராமாநுஜர்

இந்த மடத்துக்கான ஜீயரைத் தேர்ந்தெடுக்கவே அரங்கநாதர் திருக்கோயில் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த மடத்தின் 50-வது ஜீயர் 2018-ம் ஆண்டு பரமம்பதித்ததைத் தொடர்ந்து (காலமானார்) அடுத்த ஜீயர் தேர்வு செய்யப்பட வில்லை. பொதுவாக ஜீயர்கள் தாங்கள் வாழும் காலத்திலேயே, பக்தியிலும் சிரத்தையிலும் மிகுந்த ஒருவரைத் தேர்வு செய்து அவரை அடுத்த ஜீயராக அடையாளம் காட்டிவிட்டுப் போவார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த ஸ்தலத்தார் கூடி தகுதியானவரைத் தேர்வு செய்வது வழக்கம். இந்த நடைமுறை கடந்த ஆயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

1975-ம் ஆண்டு திருமலை அய்யங்கார் (பூர்வாஸ்ரமப் பெயர்) 49-வது ஜீயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 12 ஆண்டுகள் அந்தப் பட்டத்தில் இருந்தார். 1982-ம் ஆண்டு இவர் சில காரணங்களுக்காக நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடுத்தார் (வழக்கு எண் OS/245/1982). இந்த வழக்கில் 1986-ம் ஆண்டு ஜீயருக்கு எதிராகத் தீர்ப்பாகியது. கோர்ட் அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கியது. அதன்பின் 1989-ம் ஆண்டு கெரடிகோயில் வரதாசார்யர் (பூர்வாஸ்ரமப் பெயர்) பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் 2018-ம் ஆண்டு காலமானதைத் தொடர்ந்து ஜீயர் பட்டத்துக்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இதுகுறித்து கடந்த 50 ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாக நடைமுறைகளை அறிந்த பக்தர் ஒருவரோடு பேசினோம்.

“இது முதலில் காஞ்சிமடம் போலவோ அஹோபில மடம்போலவோ தனி ஒரு மடம் இல்லை. இது திருக்கோயிலோடு சேர்ந்த மடம். திருக்கோயில் கைங்கர்யத் துறவிக்கான மடம். இந்த ஜீயரையே கைங்கர்ய சந்நியாசி என்று சொல்வதுண்டு. கோயிலில் சில கைங்கர்யங்களை இவரே மேற்கொள்ள வேண்டும். இப்படிக் கோயிலோடு தொடர்புடைய கோயிலோடு சேர்ந்த மடம் இந்த மடம். எனவே இதை மற்ற மடங்களுடன் ஒப்பிடுவது தவறு. இரண்டாவது, கோயில் நிர்வாகமே ஜீயரை தேர்வு செய்வதும் வழக்கத்தில் உள்ளதுதான். அதாவது ஸ்தலத்தார்தான் தீர்மானம் செய்யப்போகிறார்கள். மேலும் இப்போதும் கோயில் அறங்காவலர் ஐவரில் ஒருவர் ஸ்தலத்தாரில் ஒருவர்தான். அப்படியிருக்க அவர்கள் ஒப்புதல் இல்லாமல் யாரையும் பதவியில் அமர்த்த முடியாது. ஸ்தலத்தார் மூன்றாண்டுகளாக ஒரு ஜீயரைத் தேர்வு செய்யவில்லை. இப்போது வெளியிட்டிருக்கும் அறிவிப்புக்கும் எதிர்ப்பு சொன்னால் எப்படி?” என்றார்.

கோயிலின் நிர்வாகத்தில் அதாவது ஆகமப் பூர்வமான நிர்வாகத்தோடு தொடர்புடையவர்கள் ஸ்தலத்தார், தீர்த்தக்காரர்கள் போன்றோர். இதில் ஸ்தலத்தார் என்பவர்கள் பரம்பரை பரம்பரையாக இத்தலத்தில் வாழ்பவர்கள். கோயில் வழிபாடுகளோடு தொடர்புடையவர்கள். இவர்களில் ஒருவரே கோயில் அறங்காவலர்களில் குழுவில் டிரஸ்டியாகவும் இருப்பார். அப்படிப்பட்ட ஸ்தலத்தாரில் ஒருவரான பராசர பத்ரிநாராயண பட்டரிடம் பேசினோம்.

பராசர பத்ரிநாராயண பட்டர்

“திருக்கோயில் நிர்வாகம் தற்போது செய்திருப்பது முற்றிலும் அறம் அற்ற செயல். காரணம், ஜீயர் என்னும் உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரை ஏதோ சாதாரண அலுவலகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளைக் கொண்டு தாமே தேர்ந்தெடுக்க முயல்வது நிச்சயம் அத்துமீறல்தான். கோயிலின் நிர்வாகம் வரவு செலவுகளைப் பார்க்கவே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அது மதம் சார்ந்த, ஆகமம் சார்ந்த விஷயங்களில் தலையிடக்கூடாது என்பது விதி. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆர்டிகிள் 26, ‘அரசோ, அரசு சார்ந்த நிறுவனங்களோ கோயில்களில் மதம் சார்ந்த விஷயங்களில் தலையிடக் கூடாது’ என்று சொல்கிறது. இதைப் பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. 50வது ஜீயர் பரமம்பதித்து மூன்றாண்டுகளாக ஏன் புதிய ஜீயரை நியமிக்கவில்லை என்றால் அது சாதாரண செயல் இல்லை. தகுந்த ஆள் தேவை. பட்டம் ஏற்பவர் இதுவரை இருந்த பாரம்பர்யத்தைக் கட்டிக்காப்பவராக இருக்க வேண்டும். வைணவ சம்பிரதாயத்தை முழுமையும் அறிந்தவராக இருக்க வேண்டும். இந்தப் பீடத்துக்கு இன்னும் பெருமை சேர்ப்பவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பட்டத்துக்கு உடனே ஆளைப் பிடி என்றால் அதுவும் இந்த கொரோனா காலத்தில் அது எப்படி சாத்தியம்? அறநிலையத் துறையில் கூட எவ்வளவோ பதவிகள் காலியாக இருக்கின்றன. அவற்றை எல்லாம் அந்தத் துறை முதலில் நிரப்பட்டும். தேவையில்லாமல் சாஸ்திர சம்பிரதாயங்களில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ளட்டும்” என்றார் பராசர பட்டர்.

இது பிற மடங்களைப்போலத் தனித்த மடம் இல்லை என்றும் ஜீயர் அப்படித் தனித்த மடாதிபதி இல்லை என்று சொல்கிறார்களே என்றதற்கு, “ஆளவந்தார் ஸ்தாபிதம் செய்த ஸ்ரீராமாநுஜர் வழிவகுத்த மடத்தின் தலைவர் மடாதிபதி இல்லை என்று எப்படிச் சொல்லலாம்... சொல்லப்போனால் இதுதான் அனைத்தையும்விட முதன்மையானது. கோயில் கைங்கர்யங்களோடு தொடர்பு ஏற்படுத்தப்பட்டதற்குக் காரணம் கோயில் சம்பிரதாயங்களைக் கண்காணிக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே ஸ்ரீரங்கநாராயண ஜீயரை மடாதிபதி இல்லை என்று சொல்வது மிகவும் அபத்தமானது” என்றார்.

இந்தப் பிரச்னை குறித்து தன்னார்வலராகச் செயல்பட்டுப் போராட்டங்களில் பங்கெடுத்துவரும் ஸ்ரீரங்கத்தில் வாழும் சேது அரவிந்திடம் பேசினோம்.

“குருபரம்பரையாக வழிவழியாக வர வேண்டிய ஆசார்யரை கோயில் நிர்வாகம் நியமித்து அவரைத் தன் வேலையாளாக மாற்றும் முயற்சி இது. ராமாநுஜர் காலம்தொட்டு இருந்துவரும் சம்பிரதாயங்களில் ஏன் தேவையில்லாமல் மாற்றங்களைக் கொண்டுவருகிறார்கள். ஸ்ரீரங்கத்தில் குளறுபடிகள் நடக்கத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏற்கெனவே சிலைத் திருட்டு வழக்கு ஒன்றும் நடந்துகொண்டிருக்கிறது. இதன் பின்னணியில்தான் இந்த முயற்சியையும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஜீயர் நியமிக்கப்பட்டுவிட்டால் அவரை மீறி ஸ்தலத்தார் யாரும் செயல்பட முடியாது என்பது விதி.

நிர்வாகம் கோயிலை வருமானம் வரும் ஓர் இடமாகவே பார்க்கிறது. பெருமாளுக்கு ஒரு நாளில் ஆறுகால பூஜை நடைபெற வேண்டும். ஆனால் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட காலங்களில் கூட்டம் அதிகம் உள்ள நாள்களில் அவ்வாறு பூஜை நடைபெறாமல் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதித்திருக்கிறது நிர்வாகம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் திருப்பணி செய்பவர்களைப் பல வகைகளிலும் ஓரங்கட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்படும். அவற்றில் ஒன்று ஆயிரம் ஆண்டுகளாக அவர்கள் குடியிருக்கும் வீடுகளை காலிசெய்யச் சொல்லி அனுப்பிய நோட்டீஸ். கோயில்களில் இவர்களுக்கு தீர்த்தம் சடாரிகூடத் தராத நிலை என்று பல்வேறு அவமானங்களையும் பொறுத்துக்கொண்டு அவர்கள் திருப்பணி செய்து வருகிறார்கள்.

சேது அரவிந்த்

இதை எல்லாம் ஸ்ரீரங்கம் வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லி முறையிட ஸ்தலத்தார் முயன்றபோது அவரை சந்திக்க விடாமல் தடுத்துவிட்டது ஆலய நிர்வாகம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்தலத்தாரை டிரஸ்டியாக்குவதிலும் இழுபறி. பல முட்டுக்கட்டைகள். இப்போது ஜீயரையே அரசுப் பணியாளரை நியமிப்பதுபோல என்.ஓ.சி, குற்றப் பின்னணி இல்லா சான்றிதழ், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு என சான்றிதழ்களைக் கேட்டு விண்ணப்பிக்கக் கோரியிருப்பது மிகவும் வருந்தத்தக்க செயல். தகுதியான நபரை ஸ்தலத்தார் உரிய காலத்தில் தேர்ந்தெடுப்பார்கள். ஜீயர் பணி என்பது எளிமையானதல்ல. மிகவும் கடினமான அந்தப் பணிக்கு சகலத்தையும் துறந்து ஒருவர் வரவேண்டும். அப்படி வரும்போது அவர் ஆகமங்களையும் சம்பிரதாயத்தையும் அறிந்தவர்தானா என்பதை அறிந்து ஸ்தலத்தார் நியமிப்பார்கள். இதுதான் நடைமுறை. இதுதான் தொடர வேண்டும். அதை விடுத்து அறநிலையத்துறையே துறவிகளையும் நியமிப்போம் என்று தொடங்கிவிட்டால் அது நிச்சயம் நம் தர்மத்துக்குக் கேடுவிளைவிக்கும் செயல் என்பதில் ஐயமில்லை.

இந்த அறிக்கையை கோயில் நிர்வாகம், ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பதற்கு ஒருநாள் முன்னதாக வெளியிட வேண்டிய அவசியம் என்ன? புதிய அறநிலையத்துறை அமைச்சர் வந்தபின் நிர்வாகம், நினைத்தது எதுவும் நடக்காது என்ற அச்சத்தில் அப்படிச் செய்தார்களா என்று தெரியவில்லை” என்று கூறினார்.

ரங்கநாதர்

இதற்கிடையே ஶ்ரீரங்கம் ஜீயர் அறிவிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் எஸ்.மாரிமுத்து அறிவித்திருக்கிறார். ''நிர்வாக காரணத்துக்காக ஜீயர் நியமனம் குறித்த அறிவிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது'' என அவர் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா காலத்தில் கோயில் உற்சவங்கள் ஏதும் முறையாக நடைபெற்றதா என்று தெரியவில்லை என்று கவலைப்படும் பக்தர்கள் அப்படியே நடத்தப்பட்ட உற்சவங்களிலும் பல தீய சகுனங்களாகக் குடை கவிழ்ந்தது, குதிரை வாகனம் முறிந்தது, தீ விபத்து போன்ற பலவும் நடைபெற்றதை நினைவுகூர்கிறார்கள். விரைவில் இந்தக் குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து ரங்கநாதருக்கு உரிய முறையில் உற்சவங்களும் சேவைகளும் நடைபெற வேண்டும். தரிசனத்துக்கு விரைவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஸ்ரீரங்கத்துக்காரர்களின் கோரிக்கையாகவும் ஆசையாகவும் இருக்கின்றன.



source https://www.vikatan.com/spiritual/news/controversy-regarding-appointing-jeeyar-swamigal-in-srirangam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக