Ad

ஞாயிறு, 9 மே, 2021

புதுச்சேரி: `முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா பாசிட்டிவ்!’ - தொடர் காய்ச்சலால் சென்னையில் சிகிச்சை

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற்றது. அதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் நிறுவன தலைவர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து கடந்த 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவருக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவுக்கு முதல் நாளிலிருந்தே லேசான உடல் சோர்வுடன் இருந்திருக்கிறார் ரங்கசாமி.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா

அதற்கு மறுநாள் 8-ம் தேதி தனது ஆன்மிக குருவான சேலம் அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலுக்குச் சென்ற ரங்கசாமிக்கு, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூர் அழுக்கு சாமி கோயிலுக்குச் செல்லும் பயணத்தை ரத்து செய்த அவர், சேலத்திலிருந்து புதுச்சேரிக்கு திரும்பினார். அன்றைய தினமே அவருடன் காரில் சேலம் சென்று திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து ரங்கசாமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் அவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தியிருக்கின்றனர். ஆனால் முதல்வர் ரங்கசாமி, காய்ச்சலுக்காக மாத்திரை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருந்திருக்கிறாராம். நேற்று காலை காய்ச்சல், உடல்வலியுடன் வாந்தியும் ஏற்பட்டதால், பதறிப்போன கட்சி நிர்வாகிகள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி அவருக்கு அழுத்தம் கொடுத்திருக்கின்றனர். அதன்பிறகே இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் அவருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Also Read: புதுச்சேரி: `எம்.எல்.ஏ-க்கு கொரோனா பாசிட்டிவ்!’ - அதிர்ச்சியில் முதல்வர், ஆளுநர்

அதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான என்.எஸ்.ஜே ஜெயபால் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நம் முதல்வருக்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பெரியளவில் பாதிப்பில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஒருவாரம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும். அதனால் யாரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை. இறைவன் அருளால் விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்றுவார்” என்று தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-cm-rangasamy-tested-corona-positive-and-admitted-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக