Ad

வியாழன், 6 மே, 2021

ஆட்சிப்பொறுப்பேற்றதும் அதிரடி! - மாற்றப்பட்ட காவல்துறை அதிகாரிகளை மீண்டும் பணியில் அமர்த்திய மம்தா!

மேற்கு வங்கத்தில் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்னைகளுக்கு இடையே, மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் மம்தா பானர்ஜி. பதவிப்பிரமானம் செய்து வைத்த ஆளுநர் ஜக்தீப் தங்கர் மரபுக்கு மாறாக, மாநிலத்தில் நடந்துவரும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இது அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்து பேசிய மம்தா "நிச்சயம் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை சரிசெய்வதே என்னுடைய முதன்மைப் பணியாக இருக்கும்” என தெரிவித்தார். இந்நிலையில், பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே, காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் 29 பேரை மாற்றி அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார். குறிப்பாக, தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பெரும்பாலானவர்களை அவர்கள் முன்னதாக வகித்துவந்த பதவிகளுக்கே திரும்பவும் பணியமர்த்தப்பட்டனர்.

மேற்கு வங்கம் போராட்டம்

குறிப்பாக, காவல்துறை தலைமை இயக்குநர் வீரேந்திரா (DGP- Director general of police), சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜாவேத் ஷமிம் (ADG- Additional Director general, law and order) மற்றும் பாதுகாப்பு தலைமை இயக்குநர் விவேக் சஹாய் ஆகியோர் தங்களின் பழைய பொறுப்புகளையே கவனிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரேந்திராவுக்கு பதிலாக காவல்துறை தலைமை இயக்குநராக இருந்த நீரஜ் நயன் பாண்டே இப்போது தீயணைப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். மேலும், சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநராக இருந்த ஜக்மோகன் சிவில் பாதுகாப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல், கிட்டதட்ட 29 உயர்மட்ட அதிகாரிகளை மாற்றம் செய்துள்ளார் புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள முதல்வர் மம்தா.

மேலும், கடந்த ஏப்ரல் 10-ம் தேதி சிதல்குச்சி தொகுதி வாக்குப்பதிவின் போது, நடைபெற்ற கலவரத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் (CISF- Central industrial security force) நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது கூச் பெஹார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த எஸ்.பி. டெபாஷிஸ் தார் என்பவரையும் தற்போது பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் மம்தா. இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே சிஐடி (CID) விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மம்தா பானர்ஜி

“கடந்த மூன்று மாதங்களாக நிர்வாகம் எனது கட்டுப்பாட்டில் இல்லை. அது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால் உண்டான சில திறமையின்மையால் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை சீர்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்களால் நிலைமை கட்டுக்குள் வரும்” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

Also Read: மேற்குவங்கம்: தேர்தல் முடிவுகளால் வெடித்த மோதல்; 14 பேர் பலி! - பதற்றமான சூழலில் பதவியேற்ற மம்தா



source https://www.vikatan.com/government-and-politics/politics/mamata-brings-backs-the-police-officers-who-where-changed-by-election-commission

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக