Ad

செவ்வாய், 11 மே, 2021

கரூர்: அதிமுக-வில் சீட் மறுப்பு; செந்தில் பாலாஜி முன்னிலையில் தி.மு.கவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ!

அ.தி.மு.கவில் சீட் கிடைக்காத கோபத்தில் இருந்த, கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ கீதா, செந்தில் பாலாஜி முன்னிலையில் தி.மு.கவில் இணைந்து, அ.தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

தி.மு.கவில் இணைந்த கீதா

Also Read: ஸ்டாலின் பதவியேற்ற 5-வது நிமிடம்... செந்தில் பாலாஜி சொன்னது நடக்கக் கூடாது- பதறும் இயற்கை ஆர்வலர்கள்

கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்று கிருஷ்ணராயபுரம் (தனி). இந்த தொகுதியில், கடந்த 2016 - 2021 வரை அ.தி.மு.க எம்.எல்.ஏவாக இருந்தவர் கீதா. இவர்தான், கரூர் எம்.எல்.ஏவும், மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜியை சென்னையில் சந்தித்து, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். அவரோடு, அவரது கணவரும், நெரூர் வடபாகத்தின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவருமான மணிவண்ணனும் சென்றிருந்தார்.

செந்தில் பாலாஜி

தொடர்ந்து, கீதாவையும், அவரது கணவரையும் தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம், செந்தில் பாலாஜி அறிமுகப்படுத்தினர். அதன்பிறகு, இருவரும் தி.மு.கவில் தங்களை இணைத்துக்கொண்டனர். தேர்தலுக்கு முன்பு, கிருஷ்ணராயபுரம் தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ காமராஜ், சீட் கிடைக்காத கோபத்தில் தி.மு.கவில் இணைந்தார். இப்போது கீதாவும் தி.மு.கவில் இணைந்து, அ.தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து, விசாரித்தோம். "கீதா, நடந்து முடிந்த தேர்தலில் மறுபடியும் சீட் கிடைக்கும் என்று நம்பியிருந்தார். அதற்காக, அ.தி.மு.க தலைமை வேட்பாளரை அறிவிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே தொகுதியில் வலம் வந்தார். ஆனால், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கீதாவுக்கு சீட் வாங்கி தராமல், தனது விசுவாசியான, எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்டச் செயலாளரான தானேஷ் என்கிற முத்துக்குமாருக்கு சீட் வாங்கி கொடுத்தார். இதனால் கோபமான கீதா, அப்போதே செய்தியாளர்களை அழைத்து, கட்சி தலைமைக்கும், மாவட்ட தலைமைக்கும் எதிராக பேட்டிக் கொடுத்தார். 'எனக்கு எதனால் சீட் தரவில்லை என்று காரணம் சொல்ல வேண்டும். இல்லை என்றால், சில தினங்களில் எனது முடிவை அறிவிப்பேன்' என்று அதிரடியாக பேட்டிக் கொடுத்தார். அது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. 'அ.ம.மு.கவுக்கு செல்லப் போகிறார். அந்த கட்சியின் வேட்பாளராக போகிறார்' என்று பரவலாக பேசப்பட்டது. இன்னும் சிலர், 'அவர் தி.மு.கவுக்குதான் செல்வார்' என்றார்கள். ஆனால், அப்போது அவர் எந்தக் கட்சிக்கும் செல்லவில்லை. அமைதியாக இருந்தார்.

கீதா (முன்னாள் எம்.எல்.ஏ)

தேர்தல் வேலையும் பார்க்காமல் ஒதுங்கி இருந்தார். இதனால், அ.தி.மு.க வேட்பாளர் முத்துக்குமார், தி.மு.க வேட்பாளர் சிவகாமசுந்தரியிடம் தோல்வியை தழுவினார். 'இதற்கு காரணம், கீதா எனது வெற்றிக்காக வேலை பார்க்காதது தான்' என்று தலைமைக்கு, அ.தி.மு.க வேட்பாளர் புகாரைத் தட்டிவிட்டார். இதனால், கட்சியில் தொடர்ந்து நீடிப்பதில் சிக்கல் வர, தனது அரசியல் குருவான செந்தில் பாலாஜி தலைமையில், தி.மு.கவில் ஐக்கியமாகி, அ.தி.மு.கவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். கடந்த ஆட்சியில் அவர் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏவாக இருந்தாலும், கடந்த 2011 - ம் ஆண்டு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக இருந்தார். அப்போது, அ.தி.மு.கவில் மாவட்டச் செயலாளராக இருந்த செந்தில் பாலாஜி தான், கீதாவுக்கு மாவட்ட கவுன்சிலர் சீட் வாங்கி கொடுத்து, அவரை மாவட்ட சேர்மனாக்கினார். அதனால், அ.தி.மு.க மீதுள்ள வெறுப்பினால், தனது அரசியல் குரு உள்ள தி.மு.கவில் இணைந்திருக்கிறார் கீதா" என்றார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-ex-mla-joins-dmk-after-seat-rejected-in-assembly-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக