Ad

வியாழன், 6 மே, 2021

புதுக்கோட்டை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ `டீ மொய் விருந்து'... அசத்தும் டீக்கடைக்காரர்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வம்பனில் இருக்கிறது பகவான் டீக்கடை. டெல்டா மாவட்டங்களை சிதைத்துப் போட்ட கஜா புயலை எப்படி மறக்க முடியாதோ அதுபோலவே அந்தப் பகுதி மக்கள் பகவான் டீக்கடையை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். கஜா பேரிடர் நேரத்தில் கடையின் உரிமையாளர் சிவக்குமார் தன்னால் முடிந்த ஒரு உதவியாகத் தனது கடையில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த டீக்கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மரங்களைப் பாதித்த விவசாயிகளுக்கு இலவசமாக சந்தனமர, செம்மரக்கன்றுகளை வழங்கியது, நிலவேம்பு கசாயம் வழங்குவது, வாழ்நாள் முழுவதும் பச்சிளங்குழந்தைகளுக்கு இலவசமாகப் பால் வழங்குவது என இவரது நேசக்கரம் நீண்டு கொண்டே போகிறது.

மொய் விருந்து - டீ

இந்த நிலையில்தான் தற்போது டெல்லி, குஜராத், கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் தான், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் தனது கடையில் டீ மொய் விருந்து நடத்தி அசத்தியுள்ளார். வாடிக்கையாளர்களும் கரம் கொடுக்க ஓரளவு நிதி திரட்டப்பட்டிருக்கிறது. மொய் விருந்து மூலம் கிடைக்கும் இந்தப் பணத்தை வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவ இருக்கிறார்.

இதுகுறித்து சிவக்குமாரிடம் பேசியபோது, "பொதுவா மொய்விருந்துன்னா எங்க பகுதியில கறி சாப்பாடுதான். கறி சாப்பாடு போட எல்லாம் என்கிட்ட வசதியில்லை. என்னை வாழவைக்கிறது இந்த டீக்கடை. அதனாலதான் டீ மொய் விருந்து வைக்கலாம்னு தோணுச்சு. எப்பவும் நம்ம பகுதி மக்களுக்கு என்னால முடிஞ்ச உதவியை செய்வேன். இந்த முறை வாடிக்கையாளர்களையும் அதில் சேர்த்துக்கிட்டேன். வாடிக்கையாளர்களும் ரொம்ப ஆர்வமா கஷ்டப்படுறவங்களுக்கு உதவ முன்வந்தாங்க.

சிவக்குமார்

இலவசமா நான் டீ கொடுத்தாலும், வாடிக்கையாளர்கள் பலரும் ஆர்வமா ரூ.500வரையிலும் நிவாரண நிதி பாத்திரத்தில் போட்டாங்க. சின்ன குழந்தைகளும் அவங்களால முடிஞ்ச பணத்தைக் கொடுத்தாங்க. வாடிக்கையாளர்களும் என்னோட கரம் கோர்த்தப்ப மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. டீ மொய்விருந்து மூலமா இதுவரைக்கும் ரூ.20,000 வரையிலும் சேர்ந்திருக்கு. தொடர்ந்து கிடைக்கும் பணத்தை வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து உதவ உள்ளோம்" என்கிறார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/pudukkottai-tea-party-to-help-people-affected-by-coronavirus

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக