விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான தொகுதியில், ஆளும் கட்சியின் முக்கிய நபர் ஒருவருக்கு, சகுனத்தைக் காரணம் காட்டி சீட் மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில், அண்மையில்(2019) இடைத் தேர்தலை சந்தித்த தொகுதி விக்கிரவாண்டி. திமுக-வை சேர்ந்த கு.ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து 2019-ல் இடைத்தேர்தலை சந்தித்தது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி. அதிமுக சார்பில் R.முத்தமிழ்செல்வனும், தி.மு.க சார்பில் N.புகழேந்தியும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்த அந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வை சேர்ந்த முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றார்.
தேர்தலுக்கு பின்னர் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு குறைந்ததாகவும், உட்கட்சியினருக்கு அவர் மீது சற்று அதிருப்தி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், மாநில அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினராகவும், விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய செயலாளராகவும் உள்ள எசாலம் பன்னீரை இவருக்கு மாற்றாக நிறுத்தலாம் என ஆளும் தரப்பில் முன்னதாக பரிசீலிக்கப்பட்டதாம். இதனால் விருவிருப்பாக களப்பணி செய்ய தொடங்கி காய்நகர்த்தி வந்தாராம் எசாலம் பன்னீர்.
அ.தி.மு.க தரப்பில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக மாநில மாநாடு ஒன்று நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டு விழுப்புரம் மாவட்டத்திலேயே விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வி.சாலை பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலேயே இடம் தேர்வு செய்யப்பட்டது. ‘சீட் தனக்குதான்’ எனக் கூறப்படுவதால் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆலோசனைப்படி இணக்கமாகவே இருந்து மாநாட்டுக்கான பணியை இழுத்துபோட்டு செய்து வந்தாராம் எசாலம் பன்னீர்.
மாநாடு கடந்த மாதம் இறுதியில் நடக்கும் என கூறப்பட்ட நிலையில், பிப்ரவரி 22-ம் தேதியே அடிக்கல் நாட்டுவிழாவிற்கு விழுப்புரத்திற்கு வந்திருந்த முதலமைச்சர், போகும் வழியில் மாநாடு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு சென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து 26-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் வி.சாலையில் நடைபெற இருந்த அ.தி.மு.க மாநில மாநாடு தடைப்பட்டுப் போனது. இந்த மாநாடு தடைபட்டுப் போனதினால் எசாலம் பன்னீருக்கு சீட்டும் இல்லை எனும் நிலை உருவாகிவிட்டதாம். ‘தேர்தலுக்கு முன்பாக நம் கட்சியின் சார்பில் முதன்முதலாக நடத்தப்பட இருந்த மாநாடு இது. உங்கள் மூலமாக தான் அதற்கான ஏற்பாடுகள் நடந்தது. உங்களுடைய முதல் ஏற்பாடே தடைபட்டுப் போய்விட்டது.
சகுனமே சரியில்லை. அதனால் இந்த முறை உங்களுக்கு சீட் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை’ என அமைச்சரே நேரடியாக அவரிடம் சொல்லிவிட்டாராம். இதனால் எசாலம் பன்னீர் அப்செட் என முணுமுணுக்கின்றனர் நெருங்கிய வட்டாரத்தினர். அதனால், முத்தமிழ்செல்வனுக்கே மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாமா, என ஒரு யோசனையும், தி.மு.க தரப்பில் மீண்டும் N.புகழேந்தியை நிறுத்தினால் அதே பெயரைக் கொண்ட ஒருவரையே தங்கள் தரப்பிலும் நிறுத்தலாமா என மற்றொரு யோசனையும் போய்க் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
source https://www.vikatan.com/news/politics/vikravandi-candidate-selection-problem-in-admk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக