Ad

செவ்வாய், 9 மார்ச், 2021

வயிற்று வலியால் உயிரிழப்பு - தவறான சிகிச்சை காரணமா? சிவகங்கையில் தொடரும் மரணங்கள்

சிவகங்கை மாவட்டம், ஏரியூரை அடுத்த மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி செல்லப் பிரியா பிப்ரவரி 3-ம் தேதி தலை பாரமாக உள்ளதென்று மதகுப்பட்டியிலுள்ள தனியார் கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற்றிருக்கிறார். அரசு மருத்துமனையில் பணியாற்றும் மருத்துவர் செந்தில்குமார் அவரது கிளினிக்கில் தலைவலிக்கு சிகிச்சை அளித்து, மூன்று ஊசிகள் போட்டிருக்கிறார். ஊசி போட்ட சில நிமிடங்களில் செல்லப்பிரியா மயங்கி விழுந்து உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

சிவகங்கை நகர் காவல் நிலையம்

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு மாதம் கடந்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்து சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதே போல் மீண்டும் ஒரு சம்பவம் சிவகங்கையில் அரங்கேறியுள்ளது. சிவகங்கை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷன். டூ- வீலர் மெக்கானிக் கடை வைத்திருக்கும், இவருக்கு திவ்யஸ்ரீ என்ற மகளும், கதிர்வேல் என்ற மகனும் உள்ளனர்.

திவ்யஸ்ரீ சிவகங்கையில் 11-ம் வகுப்பு படித்துவரும் நிலையில், நேற்று காலை சுமார் 11:30 மணியளவில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திவ்யஸ்ரீயை அவரது தந்தை கணேசன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நரம்புகள் மூலம் ஊசி போட்டதாக கூறப்படுகிறது. திவ்யஸ்ரீக்கு ஊசி போட்ட சில நிமிடங்களில், அவர் சுயநினைவு இழந்து, மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

உயிரிழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து புகார்

ஆனால், அரசு மருத்துவமனையில் சோதித்த போது, திவ்யஸ்ரீ ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களது மகள் திவ்யஸ்ரீ மரணத்திற்கு, மருத்துவர்தான் காரணம் என சிவகங்கை நகர் காவல்நிலையத்தில் மாணவியின் தந்தை கணேசன் புகார் அளித்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது.



source https://www.vikatan.com/news/general-news/girl-dies-after-injected-by-doctor-in-sivaganga

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக