Ad

சனி, 27 மார்ச், 2021

'மணல் திருட்டு விஜயபாஸ்கர்!' - கரூரில் ஸ்டாலின் ஆவேசம்

தி.மு.க சார்பில், கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் தி.மு.க தலைவர் மு..க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

ஸ்டாலின் பிரசாரம்

அப்போது பேசிய ஸ்டாலின்,`` ஆளுங்கட்சிக்கு சிம்ம சொப்பனமாக உள்ள செந்தில் பாலாஜிக்கு, வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து, மிகப்பெரிய வெற்றியை தரவேண்டும். மக்களுடைய வரிப்பணத்தில் இயங்கும் அரசு, பல ஆயிரம் கோடி செலவு செய்து தினசரி பத்திரிகைகளில் முழு பக்க விளம்பரங்களை செய்து வருகிறது. இதெல்லாம் வரும் ஏப்ரல் 6 - ம் தேதி முடிவுக்கு வரப்போகிறது.

மக்களிடம், மக்கள் வரிப்பணத்தில் பொய் விளம்பரங்கள் செய்து, இந்த அரசு ஏமாற்றி வருகிறது. அ.தி.மு.க அரசு முகத்திரையை கிழித்து, மக்கள் இதற்கு ஒரு முடிவு கட்டப் போகிறார்கள். தமிழகத்தில் பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் பதவி வகித்த இரண்டு அமைச்சர்களில் விஜயபாஸ்கர் என்ற பெயர் கொண்ட இரு அமைச்சர்கள் இருக்கின்றனர். ஒருவர் சுகாதாரத்துறை அமைச்சர் குட்கா விஜயபாஸ்கர். மற்றொருவர் கரூரில் உள்ள மணல் திருட்டு விஜயபாஸ்கர்.

ஸ்டாலின் பிரசாரம்

இருவரும் இந்த தேர்தலில் டெபாசிட்டுகளை இழந்து, அரசியலை விட்டு ஓடப்போகிறார்கள். கரூர் விஜயபாஸ்கர் காவிரி ஆற்றங்கரையில் மணல் கொள்ளை நடைபெறுவதற்கு உறுதுணையாக இருப்பவர். அமராவதி ஆற்றில் சுத்திகரிப்பு செய்யாமல் சாயக்கழிவை கலக்கவிடுவோரை காப்பாற்றி வருகிறார். பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி 10 ஆண்டுகள் முடியப்போகிறது. சாயபட்டறை நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணத் தொகையை கிடைக்க விடாமல் செய்து கமிஷன் பார்த்து வருகிறார். விவசாயிகளை ஏமாற்றி வருகிறார்.

கரூர் அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு நடைபெற உடந்தையாக இருக்கிறார். 'யாருக்கும் அனுமதி இல்லை' என மறுக்கும் அதிகாரிகளை பணி மாறுதல் செய்து பந்தாடி வருகிறார், மணல் திருட்டு விஜயபாஸ்கர். பல கோடி ரூபாய் மணல் திருட்டு கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அதனை தட்டிக்கேட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மீது பல்வேறு வழக்குகளை பதிந்து, சிறைக்கு அனுப்பினார். ஆற்று மணல் கொள்ளையை நீதிமன்றம் தடை செய்ததை பயன்படுத்தி, தனது உறவினர்கள் பெயரில் எம்.சாண்ட் மணல் தயாரிக்கும் நிறுவனங்களை நடத்துகிறார்.

Also Read: கரூர்: `எட்டப்பன் வேலை பார்த்தவர் செந்தில் பாலாஜி!' - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

அதேபோல், போக்குவரத்துத் துறையில் ஜி.பி.எஸ் கருவி பொருத்துவது, ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற பணிகளை அவரது பினாமிகளுக்கு மட்டுமே வழங்கியிருக்கிறார். அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கூண்டு கட்டும் பணியை மேற்கொள்ள தனது பினாமிகளுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கியுள்ளார். இதனால், உள்ளூரில் உள்ள கூண்டு கட்டும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் நீங்கள் தான் முடிவு கட்ட வேண்டும்.

தமிழக அரசு ஒரு மோசமான ஆட்சியை நடத்தி வருகிறது. உதாரணத்திற்கு, தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம். ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதி மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டனர். இதற்காக, 100 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். ஒரு அமைதிப் பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்தினர். அதுவும், காந்திய வழியில் அறவழியில் இந்த போராட்டத்தை நடத்தினர்.

ஸ்டாலின் பிரசாரம்

அவர்கள் மீது பயிற்சி பெற்ற காவலரை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 13 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் இருவரும் காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்டனர். பொள்ளாச்சியில் மூன்று ஆண்டுகளாக இளம்பெண்களை சித்திரவதைக்கு ஆளாக்கி கொடுமைப்படுத்தினர். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, 200-க்கும் மேற்பட்ட பெண்களை வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்து வந்துள்ளனர். இந்தக் கொடுமை காவல்துறைக்கு கூட தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், புலனாய்வுத் துறைக்கு எப்படி தெரியாமல் போனது?

தினந்தோறும் முதலமைச்சருக்கு காலை மாலை இரு வேளைகளில் புலனாய்வுத்துறை அறிக்கை கிடைக்கும்போது ஏன் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது? ஆளும் கட்சியின் தலையீடு தான் இதற்கு காரணம். அதிகாரத்தில் உள்ளவர்களின் வாரிசுகள் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர். சென்னையில் பேனர் வைத்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணத்துக்கு காரணமான அரசுதான் தற்போது ஆளும் அ.தி.மு.க அரசு. விசாயிகளை பாதிக்கும் எட்டுவழிச்சாலை, டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு திட்டம் ,தேனியில் நியூட்ரினோ திட்டம் என அனைத்திற்கும் காரணமான ஆட்சிதான் பழனிசாமி தலைமையில் நடைபெறக்கூடிய அ.தி.மு.க ஆட்சி.

ஸ்டாலின் பிரசாரம்

நான் இல்லாததை கூறவில்லை. 'ஊர்ந்து சென்று முதலமைச்சர் ஆனார்' என்று தெரிவித்தேன். வாட்ஸ்அப்பில் வந்த வீடியோவில் பார்த்திருப்பீர்கள். இதற்கு, எடப்பாடி பழனிசாமி, `நான் என்ன பாம்பா, பல்லியா?' என்று கேட்கிறார். பாம்பு, பல்லி ஆகியவற்றிடம் இருக்கும் விஷத்தை விட, துரோகம் செய்வது தான் பெரிய விஷம். ஊர்ந்து போய் முதலமைச்சர் ஆனது உண்மையா, இல்லையா, அதற்கு முதலில் எடப்பாடி பழனிசாமி பதில் கூற வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/news/election/mkstalin-speech-against-transport-minister-vijayabaskar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக