Ad

வியாழன், 18 மார்ச், 2021

பா.ஜ.க-வின் 'தொலைநோக்கு'த் திட்டம்... பதறும் அ.தி.மு.க!

''தேர்தல் முடிவுக்கு பிறகு கூட்டணி அமைச்சரவை குறித்து முடிவு செய்யப்படும்!'' என்று சொல்லி அ.தி.மு.க-வை மீண்டும் அதிரவைத்திருக்கிறது பா.ஜ.க!

காரைக்குடியில் நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, செய்தியாளர்களிடம் பேசியபோது, ''அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெறும். தேர்தல் முடிவுக்கு பிறகு கூட்டணி அமைச்சரவை குறித்து முடிவு செய்யப்படும்!'' என்று பரபரப்பை பற்றவைத்திருக்கிறார். இது அ.தி.மு.க-வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி

ஏனெனில், 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் கூட்டணிக்குத் தலைமை தாங்கக்கூடிய கட்சி அ.தி.மு.க-தான். அ.தி.மு.க கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே எங்கள் கூட்டணியில் பங்குபெற முடியும். மேலும், கூட்டணி ஆட்சிக் கனவோடு வருகிற தேசியக் கட்சிகளுக்கு இங்கு இடம் இல்லை!' என்றெல்லாம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே உறுதிபடத் தெரிவித்திருந்தது அ.தி.மு.க.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அ.தி.மு.க தேர்தல் பிரசார தொடக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி, ''திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தை சீரழித்துவிட்டது என்று சில கருங்காலிகள் சொல்கிறார்கள். சில தேசியக் கட்சிகள் சொல்லிவருகின்றன. சில சந்தர்ப்பவாதிகள் சொல்லிவருகின்றனர். ஆனால், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை கடந்த 50 ஆண்டுகாலமாக திராவிட இயக்கம் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.

எந்தத் தேசியக் கட்சியானாலும் சரி, அ.தி.மு.க தலைமையில்தான் ஆட்சி. இதிலே கூட்டணி ஆட்சி என்பதற்கு எந்தத் தேவையும் இல்லை. கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று சொல்லிவரும் தேசியக் கட்சிகளின் எண்ணம் நிறைவேறாது!'' என்று ஆவேசமாக முழங்கியிருந்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க தரப்பிலிருந்து மீண்டும் 'கூட்டணி ஆட்சி' குறித்த சர்ச்சைப் பேச்சு எழுந்திருப்பதையடுத்து அ.தி.மு.க-வின் கருத்தை அறிந்துகொள்வதற்காக கே.பி.முனுசாமியிடம் பேசினோம்... ''அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார். தேர்தல் முடியட்டுமே... 'ஏன் இப்படி பேசியிருக்கிறீர்கள்' என்று நீங்கள் அவரைத்தானே கேட்கவேண்டும். என்னிடம் கேட்கிறீர்களே... கூட்டணி ஆட்சி இல்லை என்பது குறித்து நான் ஏற்கெனவே தெளிவாகப் பேசிவிட்டேன்.

கே.பி.முனுசாமி

இப்போது தேர்தல் வேலைகள் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஆக்கபூர்வமான கேள்விகளைக் கேளுங்களேன்... சண்டை போடுகிற நிகழ்வாக கேள்விகள் இருக்கக்கூடாது. 'வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது, கூட்டணிக் கட்சிகள் எப்படி வேலை செய்கின்றன' என்றெல்லாம் கேள்வி கேளுங்களேன். என்னுடைய அரசியல் வாழ்க்கையில், எங்கேயுமே நான் மாற்றிப் பேசியது இல்லை. அவ்வளவுதான் வணக்கம்!'' என்று மிகத் தெளிவாக கேட்ட கேள்விக்குப் நேரடி பதிலைச் சொல்லாமல், சுற்றிவளைத்து 'பாதுகாப்பான பதிலை' சொல்லி முடித்தார்.

இதையடுத்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசியபோது, ''1977, 1980, 1984 என தொடர்ந்து 2016-வரை அனைத்துத் தேர்தல்களிலும் அ.தி.மு.க கூட்டணி அமைத்தே தேர்தலைச் சந்தித்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. 2016 தேர்தலில் 3 தோழமைக் கட்சிகளோடு 234 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தோம். இதன்மூலம் கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றிலேயே 'ஒரு கட்சி, ஒரே சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சி அமைத்த வரலாறு' என்ற சாதனையை அ.தி.மு.க படைத்தது.

ஆக, தேர்தலில் மட்டும்தான் கூட்டணி. மற்றபடி 'ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை' என்பதுதான் அ.தி.மு.க-வின் கடந்தகால வரலாறு. அதே நிலைதான் இப்போதும் நீடிக்கிறது. 'கூட்டணி ஆட்சி கிடையாது' என்பதை ஏற்கெனவே தெளிவாக எங்கள் கட்சித் தலைவர்கள் பலமுறை சொல்லிவிட்டார்கள். எனவே, எந்தச் சூழ்நிலையிலும் அ.தி.மு.க தனித்துதான் ஆட்சி அமைக்கும்.

பா.ஜ.க-வில் அப்படிச் சொல்கிறார்கள் என்றால் அது அவர்களுடைய சொந்தக் கருத்தாக இருக்கும். மற்றபடி 'ஆட்சியில் பங்கு' என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை!'' என்கிறார் உறுதியாக.

கோவை செல்வராஜ்

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தமிழக பா.ஜ.க-வின் கருத்தை அறிந்துகொள்வதற்காக மாநில பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் பேசினோம்... ''தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மெயின் பார்ட்னர் அ.தி.மு.க-தான். அவர்களது தலைமையில்தான் நாங்கள் தேர்தலையும் சந்தித்துவருகிறோம்.

இதில், கூட்டணி ஆட்சி இருக்கிறதா, இல்லையா அல்லது கூட்டணி ஆட்சி உருவாகுமா, உருவாகாதா என்பதெல்லாம் தேர்தலுக்குப் பிந்தையை சூழலைப் பொறுத்ததுதான் என்பது எல்லோருக்குமே தெரியும்...! நரேந்திர மோடிதான் பிரதமர் என்பதுபோல், எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்று ஏற்கெனவே நாங்கள் பேசி முடிவெடுத்துவிட்டோம். ஆக ஏற்கெனவே பேசிய விஷயத்தை, அதாவது அரைத்த மாவையே அரைப்பதுபோல... இந்தக் கூட்டணிக்குள்ளே விரிசல் வருமா, கூட்டணிக் கருத்துகளின் மூலமாக விரிசலை ஏற்படுத்தலாமா என்றெல்லாம் திட்டமிட்டு சிலர் பிரசாரம் செய்துவருகிறார்கள்.

Also Read: `எத்தனையோ தொகுதிகள் இருக்கு; ஆனா இங்க வந்துட்டிங்க’ - வேட்பாளர் அறிமுகத்தில் கே.என்.நேரு பேச்சு

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்பது மட்டுமே எங்களது ஆசையாக இருக்கிறது!'' என்றார் நழுவலாக.

கடந்த சில மாதங்களுக்கு முன்புவரையிலும் 'முதல்வர் வேட்பாளர் யார்' என்பதில் பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் தொடர்ந்து மல்லுக்கட்டிக்கொண்டிருந்தன. ஆனால், திடீரென ஏற்பட்ட அரசியல் சூழல் மாற்றத்தால், 'முதல்வர் வேட்பாளர்' என்ற தன் பிடிவாதத்தை மெல்லத் தளர்த்திக்கொண்டு இறங்கிவந்தது பா.ஜ.க. அடுத்து கூட்டணி ஆட்சி குறித்த கருத்துக்கும் அ.தி.மு.க தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பவே, அதைப்பற்றிப் பேசுவதையே தவிர்த்து கூட்டணி அமைக்கும் பணியில் மட்டும் முழு கவனம் செலுத்தியது தமிழக பா.ஜ.க. இந்த நிலையில், மறுபடியும் 'கூட்டணி ஆட்சி' குறித்த கோரிக்கையை அகில இந்திய பா.ஜ.க நிர்வாகியின் மூலமாக வெளிப்படையாகப் பேசவைத்திருப்பது தமிழக அரசியல் சூழலில், பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கரு.நாகராஜன்

இந்த விஷயத்தில், பா.ஜ.க-வின் 'தொலைநோக்குத் திட்டம்தான் என்ன...' என்ற கேள்விக்கு விடைகேட்டு பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, ''தமிழ்நாட்டில், தி.மு.க கூட்டணியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் நரேந்திர மோடி - அமித் ஷா கூட்டணியின் முக்கிய குறிக்கோள்! புதுச்சேரியில் யார் ஜெயித்தாலும் அதிகாரத்துக்கு பா.ஜ.க-தான் வரும். அதே மாதிரி, தமிழ்நாட்டிலும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதுதான் அவர்களது இலக்காக இருக்கிறது. ஏனென்றால், வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ்நாட்டிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையில் சீட் வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இந்த அடிப்படை எண்ணத்துக்கான ஆயத்தப் பணிகளைத்தான் இப்போது இங்கே பா.ஜ.க செய்துவருகிறது.

இந்த இலக்கில் பா.ஜ.க எந்தளவு வெற்றி பெறும் என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது. ஆனால், முடிந்தவரையில் இலக்கை எட்டுவதற்கான வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். உதாரணமாக கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பிரசாரத்துக்காக நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா, புரந்தேஸ்வரி, தேஜஸ்வி சூர்யா என 30 பேர் வரையிலும் வரவிருக்கிறார்கள்.

Also Read: `பலருக்கு நன்றி இல்லை’ கண்ணீர் வழிய குலதெய்வம் கோயிலில் சசிகலா வழிபாடு!

மேற்கு வங்காளத்தை கைப்பற்றுவதுதான் பா.ஜ.க-வின் முதல் இலக்கு. அதற்கு நிகராகவே தற்போது தமிழ்நாட்டையும் கொண்டுவருகிறார்கள். இந்தத் தேர்தலில், தி.மு.க கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனாலும்கூட 'கூட்டணி ஆட்சி' என்று இப்போதே பா.ஜ.க பேசிவருவது, 'நாங்கள் சொல்வதுதான் இங்கே சட்டம்' என்ற தகவலை அ.தி.மு.க-வின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் ஓர் அம்சம்தான். யார் என்ன சொன்னாலும், கடைசியில் பா.ஜ.க சொல்வதுதான் நடக்கும்.

ராதாகிருஷ்ணன்

எந்தவொரு பிரச்னை என்றாலும் பா.ஜ.க தனது கருத்தை மெல்ல இதுபோன்று கசியவிட்டு, அதற்கு என்னவிதமான எதிர்வினைகள் வருகிறது என்று பார்ப்பார்கள். அதன்பிறகு தாங்கள் செய்ய நினைப்பதை அதிகாரபூர்வமாகவே அறிவித்துவிடுவார்கள்!'' என்கிறார் தெளிவாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-on-bjps-plan-that-shocks-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக