Ad

வியாழன், 18 மார்ச், 2021

`ராயபுரத்தில் ஜெயக்குமார் ஜெயிப்பாரா?’ - ஸ்டார் தொகுதி ரிப்போர்ட்

தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகள் பட்டியலில் முதல் தொகுதியாக ராயபுரமே நீண்டகாலமாக இருந்துவந்தது. தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பிறகு, கும்மிடிப்பூண்டி முதல் தொகுதியாக மாறிவிட்டது. வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ராயபுரம் தொகுதி, கடலோரமாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டு முறையும் தி.மு.க ஏழு முறையும் அ.தி.மு.க ஐந்து முறையும் இங்கு வெற்றிபெற்றுள்ளன. கடந்த நான்கு தேர்தல்களாகத் தொடர்ந்து வெற்றிபெற்றுவருகிறார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

ஜெயக்குமார்

முதன்முறையாக, 1991-ம் ஆண்டு ஆண்டு ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டார் ஜெயக்குமார். அந்தத் தேர்தலில் அவர் வெற்றிபெற்றார். 1996 சட்டமன்றத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். அதன் பிறகு 2001, 2006, 2011, 2016 ஆகிய நான்கு தேர்தல்களிலும் ஜெயக்குமார்தான் வெற்றிபெற்றார். மீனவர் சமூகத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், ஆரம்பத்தில் ராயபுரம் தொகுதிவாசியாக இருந்தார். ராயபுரம் தொகுதியில் பனைமரத்தொட்டி, காசிபுரம், ஏ.ஜே.காலனி உள்பட பத்து மீனவர் கிராமங்கள் அமைந்துள்ளன. முக்கியமான வியாபார ஸ்தலமாகவும் இந்தத் தொகுதி விளங்குகிறது.

அமைச்சராக ஆன பிறகு பட்டினப்பாக்கம் பகுதியில் ஜெயக்குமார் குடியேறிவிட்டார். ஆனாலும், ராயபுரம் தொகுதி மக்களுடனான நெருக்கத்தை அவர் குறைத்துக்கொள்ளவே இல்லை. தொகுதி மக்களுக்குத் தேவையானவற்றை செய்துகொடுத்து தொகுதியில் நல்லபிள்ளையாகவே இருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தும், தங்களுக்கு அவர் பெரியதாக எதையும் செய்யவில்லையே என்கிற வருத்தம் மீனவர் சமூகத்தினரிடம் இருக்கிறது. மீன்வளத்துறை அமைச்சர் என்கிற முறையில் தமிழகம் முழுவதிலும் உள்ள மீனவர் சமூகத்தினருக்கு தேவையானவற்றை செய்யவில்லை என்று மீனவர் சமூகத்தினர் குறைப்பட்டுக்கொள்கிறார்கள்.

காசிமேடு

உதாரணத்துக்கு, சென்னைக்கு அருகே காட்டுப்பள்ளித் துறைமுகத்தால் தாங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதாக அந்தப் பகுதி மீனவர்கள் போராடுகிறார்கள். ஆனால், அந்தப் பிரச்னை குறித்து அமைச்சர் வாயே திறக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள் மீனவர் சமூகத்தினர். ராயபுரம் தொகுதியை மட்டும் பார்த்துக்கொண்டால் போதுமா என்று அவரை நோக்கிய கேள்வி எழுப்புகிறார்கள். கொரோனா நேரத்தில் மீனவர்களுக்கு அவர் பெரிதாக உதவிகள் செய்யவில்லை என்றும் அந்த சமூக மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

அந்த அதிருப்தியை உணர்ந்த ஜெயக்குமார், சமீபத்தில் அனைத்து மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அழைத்து சமாதானம் செய்துவிட்டார் என்கிறார்கள் தொகுதி மக்கள். ‘நம்ம சமுதாயத்துக்கென்று இருக்கிற ஒரே பிரதிநிதி நான்தான். என்னை காலிசெய்துவிட்டு என்ன செய்யப்போறீங்க? வேறு யார் வந்து உங்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள்? உங்கள் பிரச்னைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்...’ என்று ஜெயக்குமார் பேசியிருக்கிறார்.

இப்போது, ``அமைச்சர் மீது என்னதான் வருத்தம் இருந்தாலும், எங்களுக்கு நல்லது கெட்டது என்றால் அவரிடம்தானே போய் நிற்க வேண்டும்” என்கிறார்கள் மீனவர் மக்கள். சுமார் இரண்டு லட்சம் வாக்காளர்களைக் கொண்ட ராயபுரம் தொகுதியில், 30,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இருக்கிறார்கள். அந்த வாக்குகள் வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கும் என்கிறார்கள் அந்தத் தொகுதியைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர்கள்.

ஜெயக்குமார்

Also Read: அ.தி.மு.க - 7; தி.மு.க எத்தனை?! - அதிக முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த கட்சி எது தெரியுமா?

பொதுவாக ஒரு விஷயத்தில் ஜெயக்குமாரை எல்லோரும் பாராட்டுகிறார்கள். “ஒரு காலத்தில் ராயபுரம் பகுதியில் ரவுடியிசம் மிக மோசமாக இருந்தது. இப்போது அந்த சூழலில் மாறிவிட்டது. அதற்குக் காரணம் ஜெயக்குமார்தான். அதனால் இப்போது எங்களால் நிம்மதியாக தொழில் செய்ய முடிகிறது” என்கிறார்கள் ராயபுரம் தொகுதி வியாபாரிகள்.

ராயபுரம் தொகுதியில் செல்வாக்குமிக்க ஜெயக்குமாரைத் தோற்கடிப்பதற்கு ‘ஐ ட்ரீம்’ திரையரங்க உரிமையாளரான ஐ ட்ரீம் மூர்த்தியை தி.மு.க களமிறக்கியுள்ளது. ‘பாரம்பர்யமான தி.மு.க-க்காரர்’ என்று அறியப்பட்ட ஐ ட்ரீம் மூர்த்தி, ஜெயக்குமாருக்கு எதிரான பிரசாரத்தில் இறங்கியுள்ளார். ஐ ட்ரீம் என்பது அந்த வட்டாரத்தில் பிரபலமான பெயர். ஆனால், பெயர் பிரபலமானது என்றாலும், மக்களுடனான நெருக்கம் மூர்த்திக்கு இல்லை என்பதை மைனஸ் ஆகப் பார்க்கப்படுகிறது.

`ஐ ட்ரீம்’ மூர்த்தி

திரையரங்கம் தவிர, ரியல் எஸ்டேட் தொழிலிலும் வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறார். வசதிபடைத்தவர், அதிகம் செலவுசெய்யக்கூடியவர் என்பதால் தி.மு.க-வில் இவருக்கு சீட் வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ‘ஐந்து முறை வெற்றிபெற்றும் ராயபுரம் தொகுதிக்கு எதையுமே ஜெயக்குமார் செய்யவில்லை’ என்ற பிரசாரத்தை மூர்த்தி முன்னெடுக்கிறார். 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயக்குமாரைத் தோற்கடிப்பேன் என்று ஐ ட்ரீம் மூர்த்தி சபதம் செய்கிறார்.

ஆனால், திருவொற்றியூர் தொகுதியின் தி.மு.க வேட்பாளரான கே.பி.சங்கரை, ராயபுரத்தில் நிறுத்தியிருந்தால் ஜெயக்குமாருக்கு கடும் போட்டியைக் கொடுத்திருப்பார் என்கிறார்கள், அந்தத் தொகுதியை உன்னிப்பாகக் கவனித்துவரும் அரசியல் பார்வையாளர்கள் சிலர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/will-jayakumar-win-in-assembly-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக