ஐபிஎல் ஃபீவர், இங்கிலாந்து சீரிஸ் பரபரப்பு என ஒருபக்கம் ரசிகர்கள் கவனம் குவிந்திருக்க இன்னொரு பக்கம் சாலை பாதுகாப்பு தொடரில் பல நாடுகளின் முன்னாள் வீரர்களும் பட்டையைக் கிளப்பி வருகின்றனர். அவர்கள் ஆடும் ஒவ்வொரு ஷாட்டும்... வீழ்த்தும் ஒவ்வொரு விக்கெட்டும் பல 'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே' மொமன்ட்டுகளைக் கிளப்பிவிடுகின்றன.
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா லெஜண்ட்ஸ் அணி வங்கதேச லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக ஆடிய போட்டியில் ஷேவாக் வின்டேஜ் வீருவாக மாறி வெளுத்தெடுத்திருந்தார். அந்தப் போட்டியில் விக்கெட்டே விடாமல் சச்சின் - ஷேவாக் கூட்டணியே டார்கெட்டை சேஸ் செய்து வெற்றிகரமாகத் தொடரைத் தொடங்கியிருந்தது.
இந்நிலையில் நேற்று இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கும் இந்தியா லெஜண்ட்ஸ் அணிக்குமான போட்டி நடைபெற்றது. இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கு கேப்டனாக கெவின் பீட்டர்சன் செயல்பட்டார். டாஸ் வென்ற சச்சின் டெண்டுல்கர் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதனால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் சார்பாக கெவின் பீட்டர்சனும், மஸ்டர்ட்டும் ஓப்பனர்களாக களமிறங்கினர். ப்ரக்யான் ஓஜா வீசிய இரண்டாவது ஓவரிலிருந்தே கெவின் பீட்டர்சன் அதிரடியை தொடங்கிவிட்டார். அந்த ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸர்களையும் பவுண்டரியையும் அடித்தார். மன்ப்ரீத் கோனி, முனாஃப் படேல் என எல்லாருடைய ஓவர்களிலுமே பெரிய ஷாட்களை ஆடி மிரட்டினார் பீட்டர்சன். தொடர்ச்சியாக, ஷார்ட் பால்களாகவும் பவுன்சர்களாகவும் வர அவற்றை ஸ்கொயர் லெக்கிலும், ஃபைன் லெக்கிலும் மடக்கி சிக்ஸர்களை அடித்து அசத்தினார்.
பீட்டர்சனின் ஷாட்களிலும் சரி, அணுகுமுறையிலும் சரி அதே பழைய கேபி-யாக இன்னமும் துடிப்பாகவே இருக்கிறார். யுவராஜ் சிங்கின் ஓவரில் இரண்டு சிக்ஸர்களை தொடர்ந்து அடித்து அரைசதத்தை கடந்து அசத்தினார். 37 பந்துகளில் 75 ரன்கள். 2011 உலகக்கோப்பை சமயத்தில் கெவின் பீட்டர்சனின் ஸ்விட்ச் ஹிட்டுக்குப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உண்டு. ஆனால், அதிரடியாக பல ஷாட்களை ஆடிய கேபி அந்த ஸ்விட்ச் ஹிட்டை மட்டும் ஆடாமல் போனது வருத்தமே.
பீட்டர்சனின் அதிரடியால் இங்கிலாந்து அணி 188 ரன்களை எடுத்தது. 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணிக்காக ஷேவாக்கும், சச்சினும் ஓப்பனர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் இருவரும் நாட் அவுட்டாக மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியிருந்தனர். குறிப்பாக, ஷேவாக் அதே பழைய வீருவாக அடித்து துவம்சம் செய்திருந்தார். இந்தப் போட்டியிலும் பீட்டர்சனின் இன்னிங்ஸுக்குப் பதிலடியாக அப்படியொரு இன்னிங்ஸை ஷேவாக் ஆடுவார் என எதிர்பார்த்திருக்க ஷேவாக் சீக்கிரமே அவுட் ஆகி ஏமாற்றினார். ஹோகார்ட்டின் பந்தில் ஒரு பெரிய சிக்ஸருக்கு முயன்று பவுண்டரி லைனில் கேட்ச் ஆகி இரண்டாவது ஓவரிலேயே வெளியேறினார்.
சச்சினும் பனேசரின் ஓவரில் இறங்கி வந்து சிங்கிள் தட்ட முயன்று ஸ்டம்பிங் ஆனார். சச்சின், ஷேவாக், பத்ரிநாத், கெய்ஃப் என முக்கிய பேட்ஸ்மேன்கள் நால்வரும் பவர்ப்ளேக்குள்ளாகவே வெளியேறினர். பீட்டர்சனுக்குப் பதிலடி இன்னிங்ஸை யுவராஜ் ஆடுவார் என எதிர்பார்க்க அவரும் ஏமாற்றவே செய்தார். இதன்பிறகு, பதான் பிரதர்ஸ் இருவரும் கூட்டணி போட்டனர். இருவரும் சில பல பவுண்டரிகளை அடிக்க இலங்கைக்கு எதிராக 2009-ல் ஒரு டி20 போட்டியில் பதான் பிரதர்ஸ் நின்று சேஸ் செய்து கொடுத்த இன்னிங்ஸ் ஞாபகம் வரத் தொடங்கியது. ஆனால், அதுவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. யூசுஃப் பதானும் 17 ரன்னில் வெளியேறி ஏமாற்றினார்.
ஆனால், இதன்பிறகுதான் உண்மையான சர்ப்ரைஸே காத்திருந்தது. இர்ஃபான் பதானுடன் கூட்டணி போட்ட மன்ப்ரீத் கோனி, பொல்லார்டைப்போல நின்ற இடத்திலிருந்து சிக்ஸர் அடித்து மிரட்டினார். கடைசியாக இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு சுமாரான பௌலராக பார்த்ததாக ஞாபகம். அவர் இப்படி ஆடுவார் என எதிர்பார்க்கவே இல்லை. கடைசி 5 ஓவர்களில் 78 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இர்ஃபான் பதானும், கோனியும் வெறியாட்டம் ஆடினர். ட்ரெம்லட்டின் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள், ட்ரெட்வெல்லின் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள் என மன்ப்ரீத் கோனி வாயடைக்க வைத்தார். இர்ஃபான் பதானும் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார்.
கடைசி ஓவரில் 19 ரன் தேவைப்பட்ட நிலையில் சைட்பாட்டம் வீசிய அந்த ஓவரில் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி தோற்றிருந்தாலும் இர்ஃபானும் கோனியும் ஒரு காட்டு காட்டிவிட்டனர். பிட்டர்சனே ஒரு கட்டத்தில் இவர்களின் ஆட்டத்தைப் பார்த்து அரண்டு போய்விட்டார்.
source https://sports.vikatan.com/cricket/india-legends-vs-england-legends-road-safety-world-series-t20-match-report
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக