ராமேஸ்வரத்தில் பிறந்து உலக நாடுகளை வியக்க வைத்து இந்தியாவிற்கு பெருமைகள் சேர்த்தவர் டாக்டர். அப்துல் கலாம். 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி மேகாலயாவில் அவருக்கு மிகவும் பிடித்த மாணவர் சமூகத்திடம் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது அவர் உயிர் பிரிந்தது. அவரின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அவர் விதைக்கப்பட்ட பேய்க்கரும்பு எனும் இடத்தில் மத்திய அரசு தேசிய நினைவிடம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அப்துல்கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர்(104) வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு (7.03.2021) இராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர், தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரன் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவரகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அப்துல்கலாம் அவர்களின் இறப்பிற்கு பின் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி தற்போது மறைந்த, அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் காலில் விழுந்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது. முத்து மீரான் அவர்களின் பூத உடல், ராமேஸ்வரத்தில் உள்ள முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளிவாசலில் சுமார் காலை 11 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
மேலும் முத்து மீரானின் பேரன் சேக் சலீம் நம்மிடம் பேசிய போது," தாத்தாவுக்கு கடந்த சில மாதங்களாகவே உடல் நிலை சரியில்லை. 104 வயதை அடைந்த அவருக்கு தன் தம்பியின் இறப்பு மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்தது. `நான் உயிரோடு இருக்கிறேன் என் தம்பி அப்துல் கலாம் இறந்துவிட்டானே’ என்று அடிக்கடி சொல்லி வருத்தப்படுவார். கடந்த இரண்டு மாதமாக படுத்த படுக்கயாக இருந்துவந்தார். தற்போது அவரின் உயிர் பிரிந்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியஸ்தர்கள என பலரும் நேரிலும், போனிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.” என்று கூறினார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/abdul-kalams-brother-dies-of-oldage
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக