எந்தவொரு புதிய தடுப்பூசியை மக்களிடம் அறிமுகப் படுத்தும்போதும் பல்வேறு குழப்பங்களும் சந்தேகங்களும் இயல்பாகவே எழும். உலகையே ஆட்கொண்ட கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசியும் இதற்கு விதிவிலக்கல்ல. பல்வேறு நாடுகளைப் போலவே இந்தியாவிலும் கோவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கிவிட்டது.
முன்களப் பணியாளர்களுக்குப் பிறகு, பொதுமக்களுக்கும் படிப்படியாகத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் பட்டியலில் உள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது புற்றுநோயைக் கண்டறியும் மேமோகிராம் ஸ்கேன் பரிசோதனை செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது.
சந்தேகத்துக்கு விடையளிக்கிறார் மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் எம்.சுபாஷினி:
பொதுவாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (Immune response) அதிகரிக்கும். அதாவது அடுத்த முறை கொரோனா வைரஸ் உடலைத் தாக்க வரும்போது அதை எதிர்த்துப் போராடுவதற்கான எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும்.
அதன் வெளிப்பாடாக அக்குள் பகுதியில் சிலருக்கு நெறிக்கட்டிகள் (Lymphnodes) உருவாகி சிறிய அளவில் வீங்கக்கூடும். அந்த நேரத்தில் மேமோகிராம் செய்யும்போது அக்குள் பகுதியில் காணப்படும் வீக்கம் தடுப்பூசி போட்டதால் வந்ததா, புற்றுநோய்க்கான அறிகுறியா, வேறு ஏதேனும் பிரச்னையா என்ற தேவையில்லாத குழப்பம் ஏற்படும்.
Also Read: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள Co-Win இணையதளத்தில் பதிவு செய்வது எப்படி?
வழக்கமான பரிசோதனைதான் ஒரு மாதம் கழித்துகூட செய்துகொள்ளலாம் என்றால் தடுப்பூசி போடுவதற்கு முன்பு அல்லது போட்டுக்கொண்ட 4 முதல் 6 வாரங்களுக்குப் பிறகு மேமோகிராம் செய்துகொள்ளலாம். மிகவும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் தடுப்பூசி போட்டுக்கொண்ட 4 முதல் 6 வாரங்களுக்குப் பிறகு மேமோகிராம் பரிசோதனை செய்வது பாதுகாப்பான விஷயமாக இருக்கும்.
ஒருவேளை மார்பகப் பகுதியில் கட்டி, புண், காம்பு பகுதியில் சீழ் அல்லது ரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகள் இருந்தால் எதற்கும் தாமதிக்கக்கூடாது. தடுப்பூசி போட்டிருந்தாலும் போடாவிட்டாலும் உடனடியாக மேமோகிராம் செய்துகொள்ள வேண்டும். வழக்கமான பரிசோதனை என்றால் மட்டுமே மேமோகிராம் பரிசோதனையைத் தள்ளிப்போடலாம்" என்கிறார்.
source https://www.vikatan.com/health/women/a-doctor-explains-about-covid-19-vaccinated-person-can-get-mammogram-checkup
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக