Ad

வெள்ளி, 19 மார்ச், 2021

`மாட்டு வண்டியில் மணல் அள்ளலாம்!' - செந்தில் பாலாஜி பேசியது சரியா... சூழலியல் ஆர்வலர்கள் சொல்வதென்ன?

கரூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க-வைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, கரூர் நகரில் பிரசாரம் செய்தபோது, ``தி.மு.க ஆட்சிக்கு வந்து, முதல்வராக ஸ்டாலின் கையெழுத்துப் போட்ட அடுத்த நொடியே, மாட்டு வண்டி உரிமையாளர்கள், ஆற்றுக்குள் இறங்கி மணல் அள்ளலாம். அதை யாரும் தடுக்க முடியாது. அப்படியே தடுக்கும் அதிகாரிகள் இங்கே பதவியில் இருக்க முடியாது" என்று பேசி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். செந்தில் பாலாஜியின் இந்தப் பேச்சைக் கண்டித்து, சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்களும், செந்தில் பாலாஜியின் இந்தப் பேச்சுக்கு எதிராகக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

காவிரி

செந்தில் பாலாஜி அதற்கு, ``உள்ளூர் தேவைக்காக மாட்டு வண்டியில் மணல் அள்ளுவது தவறில்லை. அது காலம் காலமாக நடைமுறையில் உள்ள விஷயம்தான். 15,000 மாட்டு வண்டி உரிமையாளர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். அவர்கள் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு சாதமாகத் தீர்ப்பு வந்தது. அரசும், `காவிரியில் 5 இடங்களில் உள்ளூர் தேவைக்காக மணல் அள்ள இடம் ஒதுக்கப்படும்'னு சொன்னுச்சு.

ஆனா, இதுவரை இடங்களைத் தேர்வு செய்து, அறிவிக்கவில்லை" என்று பதில் கூறியிருக்கிறார். இந்த நிலையில், மாட்டு வண்டியில் மணல் அள்ளுவது சட்டத்துக்கு உட்பட்டதா, கரூர் காவிரி, அமராவதி ஆறுகளின் நிலை என்ன என்பது குறித்து, விசாரித்தோம். இதுகுறித்து, நம்மிடம் பேசிய காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இராஜேஷ் கண்ணன்,

இராஜேஷ் கண்ணன்

``மக்கள் பிரிதிநிதியாக இருக்கும் செந்தில் பாலாஜியின் பொறுப்பற்ற இந்தப் பேச்சு, அதிர்ச்சியளிக்கிறது. மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதை, எந்தச் சட்டம் அனுமதிக்கிறது என்பதை அவர் சொல்லட்டும். மாட்டு வண்டிகளில் மட்டுமல்ல, வெறும் கைகளில்கூட மணலைக்கூட அள்ளக்கூடாது என்பதுதான் விதி. காவிரி, அமராவதி ஆறுகளில் இருந்த மணல் முற்றிலும் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது. கே.சி.பி, தி.மு.கவில் உச்சத்தில் இருந்தபோது, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள மணலை அள்ளினார். அ.தி.மு.க ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல் கரூர் மாவட்ட எல்லைக்குள் 12 மணல் குவாரிகளை அமைத்து, அரசே மணலை விதிகளை மீறி அள்ளி, ஆற்றை எலும்பு கூடாக்கியது. காவிரியை மணல் அள்ளும் கொள்ளைக்காகப் பயன்படுத்தி, அ.தி.மு.க, தி.மு.க என அனைத்து ஆட்சியிலும் அள்ளினாங்க.

5 வருஷம் மணல் அள்ளினால், அடுத்த 5 வருடங்களுக்கு கைப்பிடி அளவுகூட மணல் அள்ளக்கூடாதுங்கிறது விதி. ஆனா, தொடர்ந்து அள்ளினாங்க. அதேபோல், 3 அடிக்கு கீழே மணலை எடுக்கக்கூடாதுங்கிறது விதி. ஆனால், காவிரியில் 30 அடி ஆழம் வரை மணலை அள்ளிட்டாங்க. இப்படி, கரூர் டு திருச்சி வரை மணல் அள்ள அரசு வகுத்துள்ள 28 விதிகளையும் மீறி மணல் அள்ளி, பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடாகச் சம்பாதித்திருக்கிறார்கள் ஆளுங்கட்சியினர். அப்போ, மத்த பகுதிகள், தி.மு.க ஆட்சியில் நடந்த கொள்ளை என்று கணக்குப் போட்டால், நமக்கு மயக்கம் வந்துவிடும்.

அமராவதி ஆறு

Also Read: மணல் அள்ள அனுமதி; கமலின் விமர்சனம் `அரைவேக்காட்டு பேச்சு’ என செந்தில் பாலாஜி பதிலடி

`கரூர் டு திருச்சி வரை காவிரியில் மணல் கொள்ளை நடந்திருக்கு' என்று முசிறியைச் சேர்ந்த சீனிவாசன், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த சுடலைமுத்து ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், மதுரை உயர் நீதிமன்றக் கிளை, விசாரணை குழுவை அமைத்து விசாரித்து, `100 சதவிகிதம் மணல் கொள்ளை நடந்தது உண்மைதான்'னு 58 பக்க அறிக்கை கொடுத்தாங்க. அப்போதைய கரூர் கலெக்டர் கோவிந்தராஜ்கிட்ட விளக்கம் கேட்டதுக்கு, `எந்த மணல் கொள்ளையும் நடக்கலை. இந்தக் குற்றச்சாட்டுகள் முழுக்க சிலரது கற்பனை'னு முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தார். மணல் கொள்ளையைத் தடுக்காத கலெக்டர் தொடங்கி, ஒவ்வொரு பகுதி வி.ஏ.ஓ வரை இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினோம்.

ஆனால், ஒரு தடவைகூட மணல் கொள்ளை நடப்பதாக நாங்க புகார் சொன்ன பகுதிகளை கலெக்டர் ஆய்வுகூட பண்ணாமல், `மணல் கொள்ளை கரூரில் 0 சதவிகிதம் கூட நடக்கலை'ன்னு மழுப்பினார். வைகோ, பழ.நெடுமாறன், நல்லகண்ணு, சி.மகேந்திரன் உள்ளிட்ட தலைவர்களை அழைத்து வந்து போராட்டம் நடத்தினோம். அதன் விளைவாக, 12 குவாரிகளும் மூடப்பட்டன. இதுதான், இப்படினா அமராவதி ஆற்றில் சுத்தமா மொட்டையடிச்சுட்டாங்க. இப்போது, காவிரி, அமராவதி ஆறுகள் அபாயக் கட்டத்தில் உள்ளன. ஆனால், செந்தில் பாலாஜி இப்படி பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. `கொலை செய்வது சட்டத்துக்கு புறம்பான செயல்'னு சட்டம் சொல்லுது. ஆனா, 'நாங்க ஆட்சிக்கு வந்தால், கொலை செய்யலாம்'னு சொல்றது போலதான், இதுவும் இருக்கு.

செந்தில் பாலாஜியின் சர்ச்சை பேச்சு

ஆளுங்கட்சி, எதிர்கட்சின்னு முக்கிய கட்சி புள்ளிகள் தலா 20-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை வச்சு, மணல் அள்ளுறாங்க. அதை லாரிகளில் ஏற்றி, விற்பனை செய்றாங்க. அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை நடந்தப்ப, அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியதோடு, கோர்ட்டில் வழக்கும் போட்டார் ஜோதிமணி. ஆனால் அவரே, செந்தில் பாலாஜி அப்படி பேசும்போது அருகில் அமைதியாக நின்றார். செந்தில் பாலாஜியின் இந்தப் பேச்சு தவறான முன்னுதாரணம்" என்றார்.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர்,

``மணல் அள்ள அனுமதித்தால், காவிரி, அமராவதி ஆறுகளின் மூலமே வாழ்வாதாரத்தை இதுவரை பெற்று வந்த பல லட்சம் விவசாயிகளின் நிலைமை ரொம்ப கவலைக்கிடமாக மாறும். காவிரியில் இருந்து ராமநாதபுரம், தூத்துக்குடி வரை பல மாவட்டங்களுக்கு குடிநீர் தரும் நிலையும் அழிந்து, பல லட்சம் மக்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும். அதனால், இனிமேல் காவிரியில் கைப்பிடி மணலை அள்ளக்கூட அனுமதிக்க கூடாது. அப்போதுதான், கர்நாடகம் நமக்கு தண்ணீர் தரவில்லை என்றாலும், காவிரி மூலம் அந்தப் படுகை முழுக்க உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படும். மண்ணுக்கும் உயிர் உண்டு. காவிரி மண்தான் கோடானகோடி நுண்ணுயிர்கள், தாவரங்கள், சிறு குறு விலங்குகள், ஆற்று ஓரம் வளரும் மரங்கள், மரங்களில் இருந்து வளரும் செடி, கொடிகள், ஏராளமான வகை பறவைகள், அவற்றிற்கு உணவாக வாழும் தவளை, மீன் வகைகள் போன்ற அனைத்து உயிர்களையும் வாழ வைக்கும் உயிராக இருந்தது.

காவிரி

அத்தகைய மணலை காவிரியில் அள்ளியதன் மூலம் மேலே சொன்ன அத்தனை உயிர்களும், தாவரங்களும் அழிவைச் சந்திக்க ஆரம்பித்திருக்கு. அப்போ, அந்த ஆறும் செத்துவிட்டது என்றுதான் அர்த்தம். காவிரிக்கரைகளில் உள்ள பனை மரங்களும், தென்னை மரங்களும் பட்டுப்போயிருக்கின்றன. இதனால், காவிரிப் படுகையில் நடந்துவந்த பல்லுயிரின பெருக்கம் தடைபட ஆரம்பிச்சிருக்கு. அதனால், காவிரிப் படுகை பல இயற்கை பேரழிவை சந்திக்க நேரிடும். ஆகவே, செந்தில் பாலாஜி சொல்வது போல், மாட்டு வண்டியில் மட்டுமல்ல, சிறு கூடையில் கூட மணல் அள்ள அனுமதிக்கக் கூடாது" என்று எச்சரித்து முடித்தனர்.

இதுகுறித்து, கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் பேச முயன்றோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.



source https://www.vikatan.com/news/environment/karur-activists-oppose-senthil-balajis-speech-about-sand-mining

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக