Ad

வெள்ளி, 19 மார்ச், 2021

`மொத்தம் ரூ.48 கோடி; பரம்பரைச் சொத்துகள் நோ!’ -ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் பின்னணி

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் திமுக-வும், அதிமுக-வும் நேரடியாக மோதுகின்றன. தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.காந்தி 6-வது முறையாகக் களம் காண்கிறார். 1996, 2006, 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள காந்தி, 2001, 2011 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவினார். ஒருமுறை வெற்றி, மறுமுறை தோல்வி என அவருக்கான தேர்தல் களம் அமைந்திருக்கிறது. 6 என்ற வரிசைப்படியே அவரது வெற்றியும் இருப்பதால், இந்த தேர்தலை அச்சத்துடனேயே எதிர்கொள்கிறார் காந்தி.

இந்த நிலையில், காந்தி, வேட்பு மனு படிவத்துடன் தாக்கல் செய்துள்ள சொத்து விபரம் மலைக்க வைத்துள்ளது. கிட்டத்தட்ட 48 கோடி ரூபாய் சொத்துகளை சுயமாக அவரே சம்பாதித்துள்ளதாகக் கூறியிருப்பதுதான் ஹைலைட்டாகப் பேசப்படுகிறது. பரம்பரைச் சொத்துகள் எதுவும் இல்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பு மனு தாக்கலின்போது...

அசையும் சொத்துகள் தன் பெயரிலும், மனைவி கமலா மற்றும் குடும்பத்தாரின் பெயரிலும் 26,02,83,027 ரூபாய் மதிப்புக்கு இருப்பதாகக் கணக்கு காட்டியுள்ளார் காந்தி. அதேபோல், அசையா சொத்துகள் தன் பெயரிலும், மனைவி பெயரிலும் சேர்த்து 21,91,30,123 ரூபாய் மதிப்பில் நிலையாக இருப்பதாகக் கூறியுள்ளார். வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடன் தொகை 14,46,35,282 ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார்.

முழு விபரம்:

காந்தி மூன்று லக்ஸரி கார்களைப் பயன்படுத்துகிறார். அதன் மதிப்பு 95,12,070 ரூபாய். காந்தியின் மனைவி பெயரில் டிராக்டர் ஒன்றும், லக்ஸரி கார் ஒன்றும் இருக்கிறது. அவற்றின் மதிப்பு 31,38,266 ரூபாய். காந்தி மற்றும் அவர் மனைவியிடம் 271 பவுன் தங்க நகைகள் உள்ளன. தங்கத்தின் மதிப்பு 33,10,373 ரூபாய் ஆகும். அதேபோல், இருவரிடமும் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் 33,140 கிராம் வெள்ளி நகைகளும் இருக்கின்றன.

கையிருப்பாக காந்தி 16,43,412 ரூபாயும், அவரின் மனைவி கமலா 5,05,432 ரூபாயும், இவர்களின் குடும்பத்தார் 12,13,216 ரூபாயும் வைத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் காந்தியும் அவரின் மனைவியும் 13,33,985 ரூபாயை வைப்புத்தொகையாகச் செலுத்தியுள்ளனர். அதேபோல், தனிப்பட்ட முறையில் சுமார் 6 கோடி ரூபாயை வெளியில் கடனாகக் கொடுத்துள்ளார்.

தி ஜி.கே கல்வி அறக்கட்டளை, கே.பி புளூ மெட்டல்ஸ், ஜி.கே ரெசிடன்ஸி உள்ளிட்ட சொத்துகளின் மதிப்பு 11,18,45,681 ரூபாய். இந்த அசையும் சொத்துகளில் காந்தியின் மனைவி கமலாவும் பங்குதாரராக இருக்கிறார். மனைவிக்கான பங்குத்தொகையாக 6,60,57,198 ரூபாயைக் கணக்குக் காட்டியிருக்கிறார் காந்தி.

உதயநிதி பிரசாரத்தின்போது...

இதுமட்டுமின்றி ஆர்.கே.பேட்டை, வாணாபாடி உட்பட பல்வேறு பகுதிகளில் காந்தி, அவர் மனைவிப் பெயரில் 52,18,635 ரூபாய் மதிப்பில் விளை நிலங்கள் இருக்கின்றன. அதேபோல், பிஞ்சி, வாணாபாடி, பெங்களூரு போன்ற பகுதிகளில் விவசாயம் அல்லாத கட்டுமான நிலங்களையும் ஏக்கர் கணக்கில் வாங்கிப் போட்டுள்ளனர். அவற்றின் மதிப்பு ரூ.18 கோடியைத் தாண்டுகிறது.

ரூ.3 கோடி மதிப்பிலான வணிக வளாகக் கட்டடங்களையும், குடியிருப்பு கட்டடங்களையும் தன்வசம் வைத்துள்ளார் காந்தி. இதைத்தவிர ஷில்பா ஏ.சி., ஏ.எம்.ஃபேப்ரிகேஷன், சரஸ்வதி அண்ட் கோ, ராசிகா லெதர்ஸ், ஷீலா வினோத் ஏ.சி., வினோத் காந்தி ஏ.சி., ராஹா அசோசியேட்ஸ் லே-அவுட் ஏ.சி., தி ஜி.கே டிஜிட்டல் கம்யூனிகேஷன் போன்ற நிறுவனங்களிலும் பங்குதாரராக இருக்கிறார் காந்தி.

பொருளாதாரத்தில் அபார வளர்ச்சிக் கண்டிருக்கும் காந்தி பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். 37 பக்கமுள்ள அவரது சொத்து விவரப் பட்டியலில் எந்த இடத்திலும் பூர்வீகச் சொத்துகள் பற்றி குறிப்பிடவே இல்லை.காந்திக்கு இப்போது 75 வயதாகிறது. சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்-அப் தவிர வேறு எதிலும் அவர் கணக்கு வைத்திருக்கவில்லை.

அதேபோல், அவர்மீது மொத்தம் மூன்று குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கும்பலாகச் சேர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி மற்றும் திருவலம் ஆகிய காவல் நிலையங்களில் இரண்டு வழக்குகள் காந்தி மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. காட்பாடி நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த இரு வழக்குகளில் இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

ஆர்.காந்தி

அதேபோல், ஒப்பந்தத் தொகை மோசடி தொடர்பாக தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் மாஹன்காலி காவல் நிலையத்திலும் காந்திமீது ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. செகன்தராபாத் கூடுதல் பெருநகர முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கு போதிய ஆதாரம் இல்லையென்று முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களையெல்லாம் காந்தி தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டவைதான்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தி.மு.க-வில், துரைமுருகனுக்கு அடுத்த நிலையில் அதிகாரமிக்கவராகப் பார்க்கப்படுகிறார் காந்தி.



source https://www.vikatan.com/government-and-politics/election/property-value-of-dmk-candidate-for-ranipet-constituency

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக