சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். "வெற்றிநடை போடும் தமிழகம்.." என்று அ.தி.மு.க-வினரும், "ஸ்டாலின் தான் வாராரு.." என்று தி.மு.க-வினரும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், அ.தி.மு.க-வை நிராகரிப்போம் மக்கள் கிராம சபை என்று பெயரில் தமிழகம் முழுவதும் கூட்டங்கள் நடத்தினார்.
Also Read: மதுரை: அனுமதி கேட்ட அழகிரி... முந்திய தி.மு.க! -கருணாநிதி சிலையைத் திறந்துவைத்த ஸ்டாலின்
அடுத்தகட்டமாக, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சென்று மக்கள் பிரச்னையை கேட்டு வருகிறார். மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது, தி.மு.க ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் தீர்வு.. இதுதான் அந்தக் கூட்டத்துக்கான மையக்கரு.
இந்நிலையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக, ஸ்டாலின் கோவை வந்துள்ளார். கோவை கொடிசியா மைதானம் அருகே நிகழ்ச்சி நடந்தது. இதற்காக காலை 8 மணி முதலே கோவை சிட்டி முழுவதும் இருந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு மக்கள் அழைத்து வரப்பட்டனர். நுழைவு வாயிலில் நுழைந்ததும், ஏராளமான தி.மு.க-வினர் வரிசையாக அமர்ந்து மக்களின் புகார்களை விண்ணப்பமாக பெற்றுக் கொள்கின்றனர்.
அதில் மக்களின் பெயர், முகவரி போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. புகார் மனுவுக்கு கொடுக்கப்படும் அக்னாலேஜ்மென்ட் இருந்தால்தான் உள்ளே அனுமதி.
இதையடுத்து, விண்ணப்பம் பூர்த்தி செய்தவுடன் சானிடைஸர் கொடுத்து மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். முன் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற செல்பி கார்னர், ஸ்டாலின் கட் அவுட்கள், ஜல்லிக்கட்டு தொடர்பான கட்அவுட் வைக்கப்பட்டிருந்தன. அங்கு மக்கள் ஜாலியாக செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர்.
அதை ஊடகத்தினரும் போட்டோ எடுக்க, அவசர அவசரமாக வந்த ஐ-பேக் டீம், ஸ்டாலின் கட்அவுட்களுக்கு பச்சை துண்டு அணிவிக்கச் செய்தனர். ஆனால், ஓரத்தில் ஒரு ஸ்டாலின் கட்அவுட் தலையில் அடித்துக் கொள்வது போன்ற போஸில் சாய்ந்திருந்ததை, ஐ-பேக் டீமோ, தி.மு.க-வினரோ கண்டுகொள்ளவில்லை.
ஐ- பேக் டீம் கறுப்பு வண்ணத்தில் உடை அணிந்திருந்தனர். அந்த டீ-ஷர்டின் முன் பகுதியில்,`ஹிந்தி தெரியாது’ என்ற வாசகமும், பின் பகுதியில் TN DESERVES BETTER என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. இதை போட்டோ எடுக்கலாம் என்று முயற்சித்தபோது, ஐ-பேக் டீமை சேர்ந்த ஒருவர் நம் கேமராவில் விழுந்துவிடக் கூடாது என்று சிட்டாகப் பறந்துவிட்டார்.
இதையெல்லாம் கடந்து நிகழ்ச்சி நடக்கும் அரங்குக்கு சென்றோம். அங்கு, தி.முக, அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் புகழ் வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தன. 10.30 மணிக்கு ஸ்டாலின் மேடைக்கு வந்தார். அவர் வரும்போது, "ஸ்டாலின்தான் வாராரு பாடல்.." ஒலித்தது.
மேடை ஏறியவர், உடனே இறங்கி மக்கள் மத்தியில் சென்றுவிட்டார். குழந்தைகளைக் கொஞ்சுவது, பெரியவர்களை நலம் விசாரிப்பது, செல்ஃபி எடுப்பது என்று 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் மேடை ஏறினார்.
இதையடுத்து, எருமைசாணி யூ-ட்யூப் சேனல் புகழ் விஜய், கோவையில் இலவசமாக பிரியாணி வழங்கும் ஷஃப்ரினா என்ற பெண், விளையாட்டு மற்றும் வித்தியாசமான சாதனைகளால் ட்ரெண்டினாவர்களை பாராட்டி சால்வை போட்டு ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார். கோவை பிரச்னைகள் தொடர்பான குறும்படமும் ஒலிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த 2 மாவட்ட பொறுப்பாளர்களையும் பாராட்டிவிட்டு, ``உங்க எல்லாரையும் பேச வைக்கறது முடியாத காரியம். அதனால, 10 பேர் மட்டும் உங்க கோரிக்கைகளைச் சொல்லுங்க. ஆளுக்கு 2-3 நிமிஷம்தான். 5 நிமிஷம் எடுத்துக்கிட்டா, மொத்தம் 5 பேருக்குதான் பேச அனுமதி கொடுப்போம்" என்றார் ஸ்டாலின்.
Also Read: மதுரை: அனுமதி கேட்ட அழகிரி... முந்திய தி.மு.க! -கருணாநிதி சிலையைத் திறந்துவைத்த ஸ்டாலின்
ஸ்டாலின் ஒவ்வொரு பெயராக வாசிக்க, சில நிமிடங்களிலேயே மைக் அவர்களிடம் சென்றது. ஏற்கெனவே பேப்பரில் எழுதி வைத்ததை சிலர் படிக்க, இன்னும் சிலரோ புகார் சொல்ல மறந்து தி.மு.க மற்றும் ஸ்டாலின் புகழைத் தான் பாடினர். ஸ்டாலினும், ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, அவர்களுக்கு விளக்கம் அளித்தார். அனைவரும் பேசி முடிந்ததும்,
``உங்கக் கைல கொடுத்துருக்கற கார்டை எல்லாம் பத்திரமா வெச்சுக்கோங்க. நாங்க பதவிப் பிரமாணம் எடுத்து 100 நாள்ல இதுக்கு தீர்வு கிடைக்காட்டி, இந்த அட்டையைக் காண்பிச்சு நீங்க கோட்டைல இருக்கற முதல்வர் அறைக்கு கூட வரலாம். அதுல பதிவு எண்ணும் இருக்கு" என்றார்.
பிறகு, மக்களின் மனுக்களை பெட்டியில் பூட்டி அதற்கு சீல் வைத்தனர். மீண்டும் மைக் பிடித்த ஸ்டாலின், ``கொங்கு மண்டலம் அ.தி.மு.க கோட்டை என்று சொல்லிக் கொள்கின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே அந்தக் கோட்டையில் ஓட்டை விழுந்துவிட்டது. இந்தத் தேர்தலில் அதை குழிதோண்டி புதைப்போம். கோவையில் அமைச்சர் வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், பினாமிகள் மாநகராட்சியில் பல ஊழல்களை செய்துள்ளனர்.
வேலுமணியின் அண்ணன் அன்பரசன்தான் நிழல் அமைச்சராக வலம் வருகிறார். வேலுமணி என்ன கோவையைக் குத்தகைக்கு எடுத்துள்ளாரா? விரைவில், ஆட்சி மாறும். அப்போது காட்சியும் மாறும். தி.மு.க ஆட்சியமைந்தவுடன் வேலுமணி மீது ஊழல் வழக்குப் பாயும்" என்றார்.
source https://www.vikatan.com/news/politics/live-report-of-ungal-thogudhiyil-stalin-public-meet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக