சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை தென்காசி மாவட்டத்தில் இன்று தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடையநல்லூர் பகுதியில் தொண்டர்களிடம் பேசினார். அவர் பேசத் தொடங்கிய சற்று நேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. உடனடியாக பேச்சை நிறுத்திய முதல்வர், ஆம்புலன்ஸுக்கு வழிவிடச் சொன்னார்.
மீண்டும் அவர் பேசிக் கொண்டிருந்தபோது மற்றொரு ஆம்புலன்ஸ் வேகமாக வந்தது. அதைப் பார்த்ததும் பேச்சை நிறுத்திய அவர், ‘அனைவரும் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு நில்லுங்கள்’ என்று சொன்னார். அதனால் தொண்டர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தார்கள்.
தொடர்ந்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “எத்தனையோ தலைவர்கள் பிறக்கிறார்கள், ஆனால், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மக்களுக்கான பல நல்ல திட்டங்களை நிறைவேற்றியதால் இப்போதும் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார்கள்.
ஆனால், சில தலைவர்கள் தங்களுக்காகவும் தங்களின் குடும்பத்துக்காகவும் மட்டுமே வாழ்ந்தவர்கள். அவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும். அதனால் அம்மாவின் வழியில் ஆட்சி செய்யும் இந்த அரசுக்கு ஆதரவளிக்கும் வகையில் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
இரு பெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வழியில் ஆட்சி செய்துவரும் நான் தமிழக மக்களுக்காக ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றி இருக்கிறேன். ஆனால், ஸ்டாலின் வேண்டுமென்றே அவதூறான பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு இந்த தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும் இடம் எல்லாம் ஸ்டாலின் ஒரு திண்ணை போல அமைத்து அதில் அமர்ந்துகொண்டு ஒரு பெட்டியை வைத்து அதில் பெட்டிஷன் போடச் சொல்கிறார். அதைப் பூட்டி சீல் வைத்து வீட்டுக்கு எடுத்துச் சென்று 3 மாதம் கழித்து அதைத் திறந்து படித்துப் பார்த்து 100 நாளில் நிறைவேற்றுவாராம். கடைந்தெடுத்த பொய் இது.
2019-ல் இதே போல மனு வாங்கினார்கள். அந்த மனுக்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார். அந்த வாக்குறுதிகள் என்னவாச்சு? நான் இப்போது முதல்வராக இருக்கிறேன். பிரச்னைகளுக்கு நான் தான் தீர்வு கொடுக்க வேண்டும். ஆனால் நீங்கள் மனு வாங்கி என்ன செய்யப் போகிறீர்கள் ஸ்டாலின்?
இது விஞ்ஞான உலகம். இந்தக் காலத்தில் இது போல மனுப் பெட்டி வைத்து நாடகத்தை அரங்கேற்றி மக்களை ஏமாற்றி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிடலாம் என ஸ்டாலின் கனவு காண்கிறார். இந்தத் தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து அவருக்குப் பதிலடி கொடுக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதையடுத்து மாநிலத்தில் நடைபெற்ற போராட்டங்களின் போது சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தடையை மீறி நடந்த இந்தப் போராட்டங்களின் போது பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் உள்ளிட்டவற்றுக்காக 1,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல், காவல் துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், வன்முறை உள்ளிட்ட குற்றங்களுக்குப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தவிர மற்றவை அனைத்தும் கைவிடப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா காலத்தில் வன்முறையில் ஈடுபட்டது, முறைகேடாக இ-பாஸ் பெற்றது, காவல்துறையைப் பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற வழக்குகள் தவிர மற்ற வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.
கூடங்குளம் போராட்டக் காலத்தில் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படன. அந்த வழக்குகள் அனைத்தும் சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு ரத்து செய்யப்படுவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதைத் தொடர்ந்து புளியங்குடி மற்றும் சங்கரன்கோவிலில் நடந்த கூட்டங்களிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார்.
source https://www.vikatan.com/news/politics/cm-says-all-the-cases-booked-for-caa-agitation-will-be-revoked
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக