Ad

வியாழன், 18 பிப்ரவரி, 2021

`ஜனநாயகம் காப்பாற்றப்பட பாஜக, அதிமுக வீழ்த்தப்பட வேண்டும்!’ - அரசியல் எழுச்சி மாநாட்டில் டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதுரையில் நடத்திய அரசியல் எழுச்சி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உட்பட கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

சிபிஐ அரசியல் எழுச்சி மாநாடு

சிபிஐ-யின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா பேசும்போது, ``பா.ஜ.க என்பது ஆர்எஸ்எஸ்-ன் கருவி. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தை நாசப்படுத்தும் அரசாக பா.ஜ.க செயல்படுகிறது. மோடி பிரதமரானவுடன்தான் அரசியலுக்கு நேரடியாக ஆர்எஸ்எஸ் வந்துள்ளது. இது பாசிஸ ஆட்சியை உருவாக்க முயற்சிக்கிறது. இதுதான் இந்துத்துவா என்கின்றனர்.

மனுசாஸ்திரபடி ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறது. மதசார்பின்மையை குழிதோண்டி புதைக்கிறது. மோடி பிரதமரானவுடன் இந்திய வளங்கள் மற்றும் உற்பத்திகளை சில கார்ப்பேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்காக புதிய சட்டங்களை உருவாக்கி செயல்படுகிறார்.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக வேண்டும் என, இதுவரை எந்த பிரதமரும் பேசாத ஒன்றை மோடி பேசுகிறார். பாதுகாப்புதுறை, வங்கித்துறை உட்பட அனைத்தையும் தனியார்மயமாக்கி வருகிறார்.

டி.ராஜா மு.க.ஸ்டாலினுடன்

மோடி அரசு மக்களுக்கான அரசாக இல்லை, பெரும் முதலாளிகளுக்கான அரசாக செயல்படுகிறது. விவசாயிகள் போராட்டம் வீறுகொண்டு எழுகிறது. ஆனால் மோடி அரசு அவர்களை பற்றி கவலைபடுவதாக இல்லை. மத்திய அரசு கொண்டு வந்த 3 சட்டங்களும் இந்திய நலனுக்கு எதிரானது என விவசாயிகள் கூறுகின்றனர். மக்களின் உழைப்பை சுரண்டும் கார்ப்பரேட்டை வளர்க்கும் மத்திய அரசு தேவையா?

ஒரு பக்கம் பாசிஸ்ட் அரசு, மற்றொரு பக்கம் கார்ப்பரேட் ஊக்கம் என்பது மோடியின் கொள்கையாக உள்ளது.

மோடி அரசை தூக்கி எறிந்தால் தான் இந்தியா காப்பாற்றப்படும். தமிழகத்தில் இந்தியாவின் கூட்டாச்சி நடைபெறவில்லை. மோடியின் தலைமையில் மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது.

அ.தி.மு.க அரசு, பா.ஜ.க-வின் எடுபிடியாக செயல்படுவதால் அதை தமிழ் மக்கள் அனுமதிக்கலாமா? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மாநில உரிமை, நலன் காப்பாற்றப்படவில்லை. மாநில உரிமைகள் பட்டியலில் உள்ள கல்வி, வேளாண்மையில் மாநில அரசை கேட்காமலயே மத்திய அரசு மாற்றம் கொண்டுவருகிறது.

வந்திருந்த தொண்டர்கள்

இந்திய கல்வியை காவி மயமாக்க வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு செயல்படுகிறது. போராடி பெற்ற இட ஒதுக்கீடு மீதான தாக்குதல் வரும்போது தமிழக அரசு, எதிர்ப்புகுரல் எழுப்பவில்லை. மாநில நலனுக்காக அ.தி.மு.க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதே இல்லை.

ஆளும் எடப்பாடி அரசு, அரசியல் பிழைகளை செய்துவருகிறது. இவர்களை சரித்திரம் மன்னிக்காது. வரும் தேர்தலில் ஆட்சிமாற்றம் மூலம் இவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.

தேர்தல் நடைபெறும் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க தோல்வியடையும் என்பதால் மோடி அனைத்து மாநிலங்களிலும் பயணம் மேற்கொள்கிறார். இந்த மாநிலங்களில் பா.ஜ.க-வுக்கு கிடைக்கும் தோல்வி மோடியின் தோல்விக்கான தொடக்கமாக இருக்கும்.

தமிழக மக்கள் அரசியல் முதிர்ச்சி பெற்றவர்கள், இது பெரியார் மண். இங்கு மதவெறி அரசியல் வெற்றி பெறாது... பா.ஜ.க வீழும்.

டி.ராஜா மு.க.ஸ்டாலினுடன்

அரசை கேள்வி கேட்டாலோ, விமர்சனம் செய்தாலோ தேச விரோதி என்று கூறி ஜனநாயகத்தை நாசப்படுத்திவிட்டது. இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம் காப்பாற்ற வேண்டும் எனில் பா.ஜ.க - அ.தி.மு.க வீழ்த்தபட வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/cpi-political-conference-at-madurai-d-raja-slams-admk-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக