Ad

வியாழன், 18 பிப்ரவரி, 2021

மகாராஷ்டிரா: அதிகரிக்கும் கொரோனா... அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்!

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மும்பையில் புறநகர் ரயில்களில் அனைவரும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட பிறகு படிப்படியாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்களும் முக கவசம் அணியாமல் விதிகளை சரியாக பின்பற்றாமல் இருந்தனர். பொதுமக்கள் சரியாக விதிகளை பின்பற்றாவிடில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் மேயர் ஆகியோர் எச்சரித்திருந்தனர். 75 நாட்களுக்கு பிறகு நேற்று மகாராஷ்டிராவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,427 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் மட்டும் 736 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மும்பையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் கோயில் விழாக்களில் 50 பேர் மட்டுமே கூட வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஜெயந்த் பாட்டீல்

வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு கையில் சீல் வைக்கப்படும் என்றும், திருமண நிகழ்ச்சிகள், ஹால்கள், கிளப்கள், ரெஸ்டாரண்ட்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா விதிகள் மீறப்படுகிறதா என்பதை பார்க்க திடீர் ரெய்டு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் தெரிவித்தார்.

புறநகர் ரயில்களில் பயணிகள் முக கவசம் அணியாமல் பயணம் செய்கின்றனர். அவர்களை பிடிக்க 300 பீட் மார்ஷல்களை நியமிக்க மும்பை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முக கவசம் அணியாமல் இருக்கும் 25 ஆயிரம் பேரை தினமும் பிடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு குடியிருப்பு கட்டடத்தில் 5 பேருக்கு கொரோனா இருந்தால் அக்கட்டிடம் சீல் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேயர் கிஷோரி பட்நாகர் கூறுகையில், ``புறநகர் ரயிலில் பயணம் செய்பவர்கள் முக கவசம் அணிவதில்லை. முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்” என்று எச்சரித்தார்.

கிஷோரியும் புறநகரில் பயணம் செய்து, பயணிகள் முககவசம் அணிந்து பயணம் செய்கின்றனரா என்பதையும் ஆய்வு செய்தார். மும்பையில் செம்பூர் பகுதியில் புதிதாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதோடு கொரோனா சோதனையையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் யவத்மால், அகோலா, வார்தா மற்றும் அமராவதி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அங்கும் பொதுமுடக்கத்தின் போது இருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அமராவதி உட்பட சில மாவட்டங்களிலும் உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமராவதி, சதாரா, யவத்மால் ஆகிய மாவட்டங்களில் தலா 4 மாதிரிகளும், புனேயில் 12 மாதிரிகளும் உருமாறிய கொரோனா சோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அமராவதி மற்றும் யவத்மால் மாவட்டங்களில் உருமாறிய கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அகோலா மாவட்டத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாக மகாராஷ்டிராதான் இதுவரை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

மும்பை

இதற்கிடையே மாநில நீர்வளத்துறை அமைச்சரும், மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெயந்த் பாட்டிலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ம் தேதியில் இருந்து கட்சியை வலுப்படுத்த மாநிலம் முழுவதும் பரிவார் சம்வாத் யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவருக்கு கொரோனா இருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று உறுதி படுத்தியதோடு சமீபத்தில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். தனது சுற்றுப்பயண விபரத்தையும் தள்ளி வைத்துள்ளார். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபேவிற்கும் கொரோனா தொற்றியுள்ளது. அவரும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறது. முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/healthy/corona-in-maharashtra-new-restrictions-enforced

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக