Ad

செவ்வாய், 10 நவம்பர், 2020

ஒன்ஸ் UPON A டைம், THERE லிவ்ட் A கோஸ்ட்... மும்பையின் ஸ்பெஷல் கறி விருந்து எப்படி?! #MIvDC

துபாய், ஷார்ஜா, அபுதாபினு ஊர் ஊரா அலைஞ்சு, கிரவுண்ட் கிரவுண்டா ஓடி, பாய்ஞ்சு, பறந்து, அடிப்பட்டு, மிதிப்பட்டு, எதிரணிக்கு கொக்காணி காட்டினது எல்லாம் எதுக்கு? எல்லாம் இந்த கப்புக்குத்தானே! அதற்கான இறுதிப்போட்டி, சீரும் சிறப்புமாக துபாயில் நேற்று நடந்து முடிந்தது.

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மும்பை - டெல்லி அணிகளே, இறுதிச்சுற்றிலும் ஜோடி போட்டுப் பார்க்க, ஐபிஎல் வரலாற்றின் பெரும் ஐயிட்டங்காரனான மும்பையே மீண்டும் கப் அடிக்குமா, அல்லது இளம் ரத்தமான டெல்லி புது வரலாறு படைக்குமா எனும் ஆவலுக்கு மத்தியில் ஆர்பரிப்போடு தொடங்கியது மேட்ச். பேட்டைக்காரனா, கருப்பா? பேட்டையா, ஜித்தா? குருபாதமா, பர்மாவா?

IPL 2020: #MIvDC

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ், "கடைசி மேட்ச் முதல் பேட்டிங் ஆடிதான் ஜெயிச்சோம். இந்த மேட்சும் அதைத்தான் பண்ணப்போறோம்" என பூப்பாதையைத் தேர்ந்தெடுத்தார். மும்பை அணியில் ராகுல் சஹாருக்குப் பதிலாக, ஜெயந்த் அணிக்குள் நுழைந்தார். டெல்லி அணியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. டெல்லியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனுக்கும் டக் அவுட்டுக்கும் தொட்டுத் தொடர்ந்து வந்த முட்டைப் பாரம்பரியம், கடைசி மேட்சில்தான் முடிவுக்கு வந்தது. அதனால், ஸ்டாய்னிஸ் - தவான் ஜோடியையே மீண்டும் இறக்கிவிட்டார் ஷ்ரேயாஸ். இந்தப் பக்கம் முதல் ஓவரை வீசவந்தார் `கேனான்' போல்ட்.

ஆட்டத்தின் முதல் பந்து. மீண்டும் அந்த முட்டைப் பாரம்பரியம் டெல்லி ரசிகர்களின் முகத்தில் முள்ளை வைத்து சாத்தியது. ஸ்டாய்னிஸ், தங்க வாத்தாக மாறினார். `அதான் ஓப்பனிங் இறங்கினாலே நமக்கு டக் அவுட் ஆகுற வியாதி இருக்குனு தெரியுதுல்ல. நார்க்கியாவையும் ரபாடவையும் இறக்கிவிட வேண்டியதுதானே' என டென்ஷன் ஆனார்கள் டெல்லி ரசிகர்கள். அறுபது பிரம்படிகள் கொடுத்துவிடும் கோவத்தில் கடுகடுவென அமர்ந்திருந்தார் பான்டிங் டீச்சர். ஓவரின் நான்காவது பந்து, மிட் விக்கெட் திசையில் ஒரு பவுண்டரியைத் தட்டினார் தவான். முதல் ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 5 ரன்கள் என சிறப்பான துவக்கத்தைத் தந்தது மும்பை அணி. 2வது ஓவரை வீசவந்தார் பூம் பூம் பும்ரா. தேர்ட் மேன் திசைக்கு ஒரு பவுண்டரியைத் திருப்பிவிட்டார் தவான். மீண்டும் வந்தார் போல்ட். கவர் திசையில் ஒரு பவுண்டரியை விரட்டிவிட்டார் கப்பார். ஓவரின் 4வது பந்து, ரஹானேவின் பேட்டை உரசிச்சென்று டி காக்கின் கைகளில் தஞ்சம் புகுந்தது. `அவுட்' என ஒற்றைக் கையைத் தூக்கினார் அம்பயர். சில டெல்லி வாலாக்கள் கண்ணீர் வடித்தார்கள்.

IPL 2020: #MIvDC

4-வது ஓவரை வீச ஜெயந்த் யாதவ் வந்தார். `லக்கா மாட்டிகிச்சு, தொக்கான ஓவர்' என அலறினார்கள் இரும்புமனம் கொண்ட சில டெல்லி ரசிகர்கள். கடைசியில் அதே ஓவரில் அவுட்டாகி, அந்த இரும்பு மனங்களையும் உருக செய்தார் தவான். டெல்லிவாலே புச்சுடேனச்சா! அடுத்து ஸ்ரேயாஸுடன் களத்தில் இணைந்தார் பன்ட். பவர்ப்ளேயின் முடிவில் 41/3 என பரிதாப நிலையில் இருந்தது டெல்லி. ஜெயந்த் வீசிய 7வது ஓவரில், 5 ரன்கள் மட்டுமே கிட்டின. க்ருணாலும் அடுத்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஜெயந்த் வீசிய 9-வது ஓவரில், 8 ரன்கள் கிடைத்தன. 10வது ஓவரில்தான், வாங்கி வைத்திருந்த பட்டாசைக் கொளுத்தினார் பன்ட். சைட் ஸ்க்ரீன் இருக்கும் திசையில் ஒன்று, டீப் மிட் விக்கெட் திசையில் ஒன்று என இரண்டு ராக்கெட்கள் `சொய்ங்' என சிக்ஸருக்கு பறந்தன.

`அப்படியே, அந்த அணுகுண்டை கொளுத்திவிடு தம்பி' என குஷியான ரசிகர்கள், அடுத்த ஓவரை வீச பும்ரா கிளம்பி வந்ததைப் பார்த்ததும், `வேணாம் வேணாம். பாம்பு மாத்திரையைப் போட்டுவிட்டு குழப்பிவிடுங்க' என அமைதியாகினர். 12-வது ஓவரை வீச பொல்லார்டு வந்தார். பாயின்ட் திசையில் ஒரு பவுண்டரியை வெட்டினார் பன்ட். அதே ஓவரில், லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸரை அணுப்பிவைத்தார் கேப்டன் ஷ்ரேயாஸ். 12 ஓவர்களின் முடிவில், 94/3 என திருப்பி அடிக்கத் தொடங்கியிருந்தது டெல்லி. கூல்டர் நைல் வீசிய 13-வது ஓவரில், 5 ரன்கள் கிடைத்தன. க்ருணால் வீசிய 14-வது ஓவரில், ஷார்ட் ஃபைன் திசையில் ஒரு பவுண்டரியை அறைந்தார் பன்ட். கூல்டர் நைல் வீசிய 15வது ஓவரில், டபுள் பவுண்டரிகளைக் கொளுத்திவிட்டு அரைசதம் கடந்திருந்த ரிஷப் பன்ட், அதே ஓவரில் அவுட்டும் ஆகி அழவைத்தார். சிறப்பான பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. மும்பை அணி பெருமூச்சு விட்டது!

IPL 2020: #MIvDC

ஜெயந்த் தனது கடைசி ஓவரை வீச வந்தார். லாங் ஆஃப் திசையில் ஒரு பவுண்டரியைக் கடாசினார் ஹெட்மயர். பும்ரா வீசிய 17-வது ஓவரில், மிட் ஆஃபில் ஒன்று, பாயின்ட்டில் ஒன்று என இரு பவுண்டரிகளை அடித்திருந்த ஷ்ரேயாஸ், இந்த இன்னிங்ஸில் அரை சதத்தையும், சீசனில் 500-வது ரன்னையும் கடந்திருந்தார். `ஹெட்மயர், ஹிட்மயரா மாறு' என டெல்லி ரசிகர்கள் வேண்டிக்கொண்டிருந்த கேப்பில், போல்ட் அவரை அவுட் செய்திருந்தார். `ஏலேய் போல்ட்டு... என் வயிறு எரியுதுலே' என துடித்தனர். அடுத்து அக்ஸார் வந்தார். தேர்ட்மேனில் ஒரு பவுண்டரியைப் போட்டார். பும்ரா வீசிய 19-வது ஓவரிலும் 6 ரன்கள் மட்டுமே கிடைத்தன. இதில் இன்னும் கொடுமையாக கடைசி ஓவரை வீசவந்த கூல்டர் நைல், அக்ஸார் மற்றும் ரபடா இருவரின் விக்கெட்களையும் கழட்டினார். இரண்டு விக்கெட்களுக்கு மத்தியில் ஒரேயொரு சிக்ஸரை அடித்தார் கேப்டன் ஷ்ரேயாஸ். 20 ஓவரின் முடிவில், 156/7 என சுமாரான ஸ்கோரை அடித்திருந்தது டெல்லி.

"இன்னைக்கு தலைவன் ரோ-ப்ரோ சதம் அடிக்கணும்னு காத்திருந்தோம். ஒரு 200 ரன்னாவது அடிச்சுருக்கலாம் இந்த டெல்லி. எல்லாத்துக்கும் போல்ட் பயதான் காரணம்" என மும்பை ரசிகர்கள் வேறுமாதிரியான சோகத்தில் இருந்தனர். ரோஹித்தும் டி காக்கும் மும்பை எக்ஸ்பிரஸை ஸ்டார்ட் செய்ய, முதல் ஓவரை வீசவந்தார் ரவிச்சந்திரன் அஷ்வின். ஓவரின் 3-வது பந்து, லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் ரோஹித். அடுத்த ஓவரை வீசவந்தார் ஊதாக்கலரு தொப்பி ரபடா. 2-வது பந்து, எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியைத் தட்டி ஆரம்பித்தார் டி காக். 3வது பந்து லெக் பைஸில் 4 ரன்கள். 5வது பந்து, மிட் விக்கெட்டுக்கு மேல் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். கடைசிப் பந்தில், பாயின்ட் திசை மேல் ஒரு பவுண்டரியை வெளுத்து சரவெடி கொளுத்தினார் டி காக்.

IPL 2020: #MIvDC

அஷ்வின் வீசிய 3-வது ஓவரில், மிட் விக்கெட் திசையில் இன்னுமொரு பவுண்டரி கிடைத்தது குயின்டனுக்கு. 4-வது ஓவரை வீச நார்க்கியா வந்தார். பல்லைக் கடித்துக்கொண்டு பந்துகளை எறிந்தார். கூலாக, லாங் லெக் திசையில் ஒரு பவுண்டரியும் தனது டிரேட் மார்க் புல் ஷாட்டில் ஒரு சிக்ஸரும் விளாசினார் ரோஹித். 5 ஓவரை வீசவந்த ஸ்டாய்னிஸ், முதல் பந்திலேயே டி காக்கின் விக்கெட்டைக் கழட்டினார். பான்டிங்கிடம் வாங்கிய பிரம்படி வேலை செய்தது. கடைசியில், களத்துக்கே ஒருவர் பிரம்பைத் தூக்கிக்கொண்டு வந்தார். பெயர் சூர்யகுமார் யாதவ்! வந்ததும் வராததுமாக கவர் திசையில் ஒரு பவுண்டரி, ஃபைன் லெக் திசையில் ஒரு சிக்ஸரை வெளுத்துவிட்டு `நான் இருக்கேன்' என்பதை மீண்டும் நினைவுப்படுத்தினார். `இவன் வேற என்னைய ரொம்ப டார்ச்சர் பண்றான்டா' என டெல்லி ரசிகர்கள் கலங்கினர்.

பவர்ப்ளேயின் முடிவில் 61/1 என கெத்தாக ஆடிக்கொண்டிருந்தது மும்பை. அக்ஸர் வீசிய 6-வது ஓவரில் 3 ரன்களும், துபே வீசிய 7வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தன. இன்னும் சிறப்பாக 8வது ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார் அக்ஸார். ஆனால், அடுத்த ஓவரில் 2 சிக்ஸர்களையே கொடுத்தார் துபே. லாங் ஆஃபில் ஒன்று, லாங் ஆனில் ஒன்று என விளாசினார் ரோஹித். அக்ஸார் வீசிய அடுத்த ஓவரில், ஃபைன் லெக் திசையில் ஒரு பவுண்டரியும் கிடைத்தது கேப்டனுக்கு. அஸ்வின் வீசிய 11வது ஓவரின் 5வது பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் தட்டிவிட்டு, ரோஹித் சிங்கிள் ஓட முயன்றார். வேண்டாம் என சூர்யகுமார் எவ்வளவோ சொல்லியும், ரோஹித் ஓடிவந்ததால் விக்கெட்டைத் தியாகம் செய்தார். அவரின் தியாக உணர்வைப் பாராட்டி, கரகோஷங்கள் எழுப்பி பெவிலியனுக்கு வரவேற்றார்கள் மும்பை அணியினர்.

IPL 2020: #MIvDC

ரபடா வீசிய 12-வது ஓவரில், டபுள் பவுண்டரிகளை விரட்டி தனது அரைசதத்தை நிறைவு செய்தார் ரோஹித். அஷ்வின் வீசிய 13-வது ஓவரிலும், ரோஹித்துக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது. 15=வது ஓவரை வீசவந்த ஸ்டாய்னிஸுக்கு லாங் ஆஃப் திசையில் ஒரு சிக்ஸரை தீபாவளி பரிசாக கொடுத்து அணுப்பினார் கிஷன். டூபே வீசிய 16வது ஓவரில், இனிப்பு மற்றும் காரம் என இரண்டு வெரைட்டிகளில் இரு பவுண்டரிகளையும் விளாசினார். 24 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலை. நார்க்கியா வீசிய 17-வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார் ரோஹித். சப்ஸ்டிட்யூட் வீரரான லலித் அற்புதமான கேட்ச் ஒன்றைப் பிடித்து, அருமையான இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டு வந்தார்.

அப்போதும், மும்பையின் ஆட்டத்தில் வேகம் குறையவில்லை. பொல்லார்டு, தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை பொளந்தார். 18 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே தேவை. ரபடா வீசிய 18-வது ஓவரில் அநியாயமாக அவுட் ஆனார் பொல்லார்டு. `ஏம்பா அவசரம்' என பதறினார்கள் மும்பை வாசிகள். இன்னும் ஒரு ரன் எடுத்தால் வெற்றி எனும் நிலை. அப்போது அவுட்டானார் ஹர்திக். `அட போங்கப்பா' என பல்தான்கள் சந்தோஷமாக நொந்துகொண்டார்கள். அடுத்து அவரது சகோதரர் க்ருணால் ஒரு சிங்கிளைத் தட்ட, மும்பை கோப்பைத் தட்டியது!

IPL 2020: #MIvDC

டெல்லியின் கோட்டையை தனியாளாக தகர்த்தெறிந்த போல்ட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆர்.சி.பி அணியின் அட்டகாசமான பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல்லுக்கு இந்த சீசனின் சிறப்பாக வளர்ந்துவரும் வீரருக்கான விருது வழங்கப்பட்டது. படிக்கல்லின் பயணத்தில் முக்கியமான மைல்கல்! கோப்பை மட்டுமல்ல, ஃபேர் ப்ளே விருதும் மும்பைக்குத்தான். ஜோசிய ஆர்ச்சருக்கு இந்தத் தொடரின் மதிப்புமிக்க வீரருக்கான விருது வழங்கபட்டது. ''பான்ட்டிங் மாதிரி ஒரு கோச் கிடைக்க நாங்க கொடுத்து வெச்சிருக்கணும். இவ்வளவு தூரம் நாங்க வந்ததுக்கே ரொம்ப சந்தோஷம் அடையுறோம். மும்பை மாதிரியான ஒரு அணிக்கு எதிரா, ஐபிஎல் மாதிரியான ஒரு தொடரின் இறுதிப்போட்டியில் எதிர்த்து விளையாடுறதே பெரிய விஷயம். அடுத்த சீசன்ல இன்னும் கெத்தா வருவோம்'' என்றார் ஷ்ரேயாஸ்.

Also Read: நேற்று இல்லை நாளை இல்லை... மும்பைதான் எப்போதும் சாம்பியன்ஸ்... ஏனென்றால்?! #MIvDC

"எல்லோரும் சிறப்பா விளையாடினோம். இப்போ கப் ஜெயிச்சுருக்கோம். ஆரம்பத்துல இருந்தே ஜெயிக்குறதை ஒரு வழக்கமா மாத்திக்கணும்னு முடிவு பண்ணோம். அந்த மனநிலைதான் எங்களை வெற்றியாளர்களா மாத்தியிருக்கு. இந்த வெற்றிக்கு காரணமான அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனதார நன்றி சொல்லிக்குறேன். நன்றி வணக்கம்" என முடித்தார் கேப்டன் ரோஹித்!

IPL 2020: #MIvDC

கங்குலியிடம் இருந்து கோப்பையைப் பெற்றுக்கொண்ட ரோஹித், தனது அணியினருடன் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினார். "கலர் பேப்பரா தூவிவிட்டு எவ்வளவு குப்பை போடுறாய்ங்க பாரு. கிரவுண்ட் கூட்டுற ஆயா ரொம்ப பாவம். மனசாட்சி இல்லாதவய்ங்க" எனப் போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்தார் அந்த டெல்லி ரசிகர்.

அடுத்த சீசன்ல சந்திப்போம் மக்களே..!



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-mumbai-indians-vs-delhi-capitals-final-match-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக