Ad

செவ்வாய், 10 நவம்பர், 2020

கொரோனா வந்து குணமானவர்கள் சபரிமலை வருவதற்கு முன் செய்யவேண்டியவை... கேரள அமைச்சரின் வழிகாட்டுதல்!

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் மண்டல கால, மகர விளக்கு பூஜைகள் இம்மாதம் 17-ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக சபரிமலையில் வாரத்தின் திங்கள் முதல் வெள்ளி வரை ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிறு தினங்களில் இரண்டாயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கான ஆன்லைன் புக்கிங் நவம்பர் ஒன்றாம் தேதியே நிறைவடைந்துவிட்டது.

இந்த நிலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கேரள சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

"பக்தர்கள் கூட்டமாக வருவது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும். பக்தர்கள் ஒன்றுகூடும் நிலக்கல், பம்பை மற்றும் சந்நிதானத்தில் கொரோனா பரவலுக்கு வாய்ப்பு அதிகம். காற்றோட்டம் குறைவான இடம், மக்கள் கூடும் இடம், முகத்துக்கு நேராக நின்று பேசுவது ஆகிய மூன்றும் அதிக அளவிலான கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும். இதைக் கருத்தில் கொண்டு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

பக்தர்கள் மலை ஏறும்போது சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். பக்தர்கள் நெருக்கமாக மலை ஏறக்கூடாது. மலை யாத்திரையின்போது கைகழுவ வேண்டும், அதற்காக சானிடைசர் கையில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வோர் அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை கைகழுவுதல் அல்லது சானிடைசர் கொண்டு கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும். சரியான முறையில் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், வாசனை அறியமுடியாத நிலை உள்ளவர்கள் மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

நிலக்கல்லுக்கு வரும் அனைத்து பக்தர்களும் 24 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும். அரசு மருத்துவமனை அல்லது அரசு அங்கீகாரம்பெற்ற மையங்களில் சோதனை செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கொரோனா பாதித்து குணம் அடைந்தவர்களில் பத்து சதவீதம்பேருக்கு மூன்று வாரம் வரையும், இரண்டு சதவிகிதம் பேருக்கு மூன்று மாதம் வரையும் அந்தப் பாதிப்பு தொடர்ந்து இருக்கும்.

சபரிமலை

அதில் சிலருக்கு உடலை வருத்தும்போது மீண்டும் பாதிப்பு வர வாய்ப்பு உண்டு. அவர்கள் மலை ஏறும்போது மூச்சுத்திணறல், இதய பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. எனவே அதுபோன்றவர்கள் யாத்திரைக்கு முன்பு நுரையீரல், இதயம் சம்பந்தமான பரிசோதனைகள் செய்ய வேண்டும். கழிவறைகளை ஒவ்வொருமுறை பயன்படுத்தியபிறகும் கிருமிநீக்கம் செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட அனைத்து நடைமுறைகளும் பக்தர்களுடன் வரும் வாகன டிரைவர்கள், கிளீனர்கள் மற்றும் சமையல் செய்பவர்களுக்கும் பொருந்தும்" என்று அந்த வழிகாட்டு நெறிமுறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/spiritual/temples/guidance-for-cured-corona-patients-who-are-visiting-sabarimalai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக