Ad

வியாழன், 19 நவம்பர், 2020

`போலீஸ் வந்திருந்தா ரெண்டு உசுரும் போயிருக்காது!’ - கொடுமுடி இரட்டைக் கொலையில் நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்தவர்கள் பெருமாள் - மேனகா தம்பதியர். இவர்கள் தீபாவளிக்காக நவம்பர் 13-ம் தேதி இரவு 9.30 மணியளவில் கொடுமுடி அருகேயுள்ளே சிட்டபுள்ளாபாளையத்தில் வசிக்கும் மேனகாவின் தந்தை வீட்டிற்கு மகனுடன் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது சிட்டபுள்ளாம்பாளையம் கிராமத்தில் சூரியா என்னும் நபர், அவருடைய நண்பர்களுடன் நடுரோட்டில் குடிபோதையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அப்போது கணவருடன் பைக்கில் வந்த மேனகாவை, குடிபோதையில் இருந்த அந்த இளைஞர்கள் கேலி செய்து பேசியுள்ளனர்.

கொலையான ராமசாமி - அருக்காணி தம்பதியினரின் வீடு

இதனைத் தட்டிக்கேட்ட மேனகா மற்றும் அவருடைய கணவர் பெருமாளை, அந்த இளைஞர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். விஷயமறிந்து ஓடிவந்த மேனகாவின் தந்தை ராமசாமி - தாய் அருக்காணி, ஊர்மக்கள் ஆகியோர் பிரச்னை செய்த இளைஞர்களை சத்தம்போட்டுக் கண்டித்துள்ளனர். ராமசாமிக்கும் மதுபோதையில் இருந்த இளைஞர் சூரியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பாகியுள்ளது. இதற்கிடையே காயமடைந்த மேனகா, கொடுமுடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கணவருடன் சென்றுள்ளார். அதனையடுத்து பிரச்னை செய்த இளைஞர் சூர்யா,`தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ராமசாமி ஊர்மக்கள் முன்னிலையில் நம்மை அசிங்கப்படுத்திவிட்டாரே... அவரை சும்மா விடக்கூடாது’ என அவருடைய தந்தை சாமிநாதன் மற்றும் நண்பர் கிருபாகரசங்கருடன் சென்று, தூங்கிக் கொண்டிருந்த ராமசாமி மற்றும் அருக்காணியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

`மதுபோதையில் இருந்த இளைஞர்கள் பிரச்னை செய்தபோதே, அருகிலிருந்தவர்கள் போலீஸாருக்கு புகார் கொடுத்திருக்கின்றனர். கொடுமுடி போலீஸாரோ விஷயத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். போலீஸார் சரியான நேரத்திற்கு சம்பவ இடத்துக்கு வந்து, அந்த இளைஞர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்திருந்தால், இந்த இரட்டைக் கொலை நடந்திருக்காது. போலீஸார் மெத்தனமாக இருந்துள்ளனர்.

கொடுமுடி மற்றும் ஈரோடு அரசு மருத்துவமனையில் போஸ்மார்டம் செய்ய வசதியிருந்தும், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் வைத்து போஸ்ட்மார்டம் செய்தது சந்தேகமளிக்கிறது. அதுமட்டுமில்லாமல், கொலை நடந்த இரண்டே நாளில் சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு ரூ.8.25 லட்ச ரூபாய் நிவாரணத்தைக் கொடுத்தும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளர். எதையோ மறைக்கவே, போலீஸார் வேகமாகச் செயல்படுவதைப் போல பிம்பத்தைக் காட்டுகின்றனர்’ என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

Also Read: நெல்லையை அதிரவைத்த இரட்டைக் கொலை - சிறுவன் கண் முன்பாக தாத்தா, தாய் கொல்லப்பட்ட கொடூரம்!

இதுகுறித்து உயிரிழந்த ராமசாமி - அருக்காணி தம்பதியினரின் இளையமகன் பூபதியிடம் பேசினோம். ``போதையில பசங்க பிரச்னை செஞ்சப்பவே வெளியூர்ல இருந்த எனக்கு போன் வந்துச்சு. உடனே, கொடுமுடி ஸ்டேஷனுக்கு போன் செஞ்சு, `என்ன பிரச்னைன்னு கொஞ்சம் பாருங்க சார்’ன்னு சொன்னேன். ஆனா, போலீஸார் சம்பவ இடத்துக்குப் போயி ரகளை செஞ்ச இளைஞர்களை வெறுமனே சத்தம் போட்டு அனுப்பியிருக்காங்க. அந்தப் பசங்களை ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போய் விசாரிச்சிருந்தா எங்க அம்மா - அப்பா பிழைச்சிருப்பாங்க.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் அதிகாரிகள்

கொலை செஞ்ச சூரியா, `நான் உள்ள போய் வெளிய வந்தாலும், இன்னும் உங்க குடும்பத்துல 5 பேரு இருக்கீங்கள்ல. குடும்பத்தையே அழிக்காம விட மாட்டேன்’ என போலீஸ் ஸ்டேஷன்ல வச்சே சவால் விடுறான். 3 பேர் மட்டுமே இந்தக் கொலையில் ஈடுபட்டதாகச் சொல்கின்றனர். வேரு யாரேனும் இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கிறார்களா என விசாரித்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்த விவகாரம் குறித்து ஈரோடு எஸ்.பி தங்கதுரையிடம் பேசினோம்.``சம்பவத்தன்று பிரச்னை செய்த இளைஞர்கள், கொலையாளிகள் என மொத்தம் 8 பேரையும் சம்பவத்திற்கு மறுநாளே கைது செய்துவிட்டோம். பிரச்னை குறித்து தகவலறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு இளைஞர்கள் எவருமே இல்லை. இந்த விவகாரத்தில் போலீஸார் வேகமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.

ஈரோடு எஸ்.பி தங்கதுரை

இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கும்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் விரைவாக அவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கியுள்ளோம். இப்போதுவரை போலீஸார் சம்பவம் நடந்த வீட்டின் முன் பாதுகாப்பில் உள்ளனர். இந்தக் கொலையில் வேறு யாருக்கேனும் சம்பந்தமிருக்கிறதா எனவும் விசாரித்து வருகிறோம்” என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/crime/what-happened-in-the-kodumudi-double-murder-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக