Ad

வெள்ளி, 6 நவம்பர், 2020

நோய்கள் வராமல் தடுக்கும் பசு நெய்... யார் யார் எவ்வளவு சாப்பிடலாம்?

`நெய் சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வந்துடும்' என்ற அளவில்தான் நெய்யைப் பற்றிய நம்முடைய புரிந்துணர்வு இருக்கிறது. ஆனால், நம் பாரம்பர்ய மருத்துவமுறைகளில் பசு நெய்க்கு முக்கியமான இடம் இருக்கிறது. நெய்யின் மருத்துவ பலன்கள், நெய்யை எல்லா வயதினரும் சாப்பிடலாமா, யார் எந்தளவு சாப்பிட வேண்டும், நெய்யில் இருப்பது நல்ல கொழுப்பா கெட்ட கொழுப்பா, மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றாநோய்கள் இருப்பவர்கள் நெய் சாப்பிடலாமா என்பதுபோன்ற சந்தேகங்களை சித்த மருத்துவர் செல்வ சண்முகத்திடம் கேட்டோம்.

``நான் இங்கே பேசவிருப்பது நெய்யைப் பற்றி அல்ல. பசு நெய்யைப்பற்றி. இதில் இருப்பது நல்ல கொழுப்பு மட்டுமே. சுத்தமான பசு நெய்க்குத்தான் மருத்துவ பலன்கள் இருப்பதாக சித்த மருத்துவ நூல்கள் சொல்கின்றன.

நெய் நமக்கு என்னென்ன நன்மைகள் செய்யும்?

உடலில் சூடு அதிகரிப்பதால் வருகிற கண் எரிச்சல், வயிற்று எரிச்சல், குடல் பிரச்னைகள், சரும வறட்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் பசு நெய்யைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து மேலே சொன்ன பிரச்னைகள் படிப்படியாகச் சரியாகும்.

உடலின் உள்ளே ஏற்படுகிற காயங்களை பசு நெய் விரைவில் குணமாக்கும்.

பசு நெய் உடலினுள் இருக்கிற கழிவுகளை வெளியேற்றும். இதனால், புற்றுநோய் வருவது தடுக்கப்படும்.

இதிலிருக்கிற அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்புசக்தியைத் தரும்.

பசு நெய்யின் சத்துகள் நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆர்த்ரைட்டிஸ் போன்ற தொற்றாநோய்கள் வருவதைத் தடுக்கும். நீரிழிவு பிரச்னையைக் கட்டுக்குள் வைக்கும். இந்த நோய்கள் இருந்து அவற்றுக்கான மருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் மருத்துவரிடம் கேட்டு அவர் ஆலோசனைப்படி பசு நெய் சாப்பிட்டால், இந்த நோய்களால் வருகிற பின்விளைவுகளைத் தடுக்கலாம்.

சிறுவயதிலிருந்தே பசு நெய்யை உணவில் சேர்த்து வருபவர்களுக்கு மூளை செல்கள் ஆரோக்கியமாக இருக்கும். அல்சைமர், பார்க்கின்சன்ஸ் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

வெள்ளையணுக்களை பலப்படுத்தும் ஆற்றல் பசுநெய்க்கு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதனால், புற்றுநோய்க்கான சிகிச்சையெடுத்துக் கொண்டிருப்பவர்கள், உடலில் சத்துப்பிடிப்பதற்காக பசு நெய் சாப்பிடலாம்.

சித்த மருத்துவர் செல்வ சண்முகம்

மாரடைப்பைத் தடுக்குமா பசு நெய்?

இதயத்துக்குச் செல்லக்கூடிய ரத்தக்குழாய்களின் உள்வரிகளில் ஏற்படக்கூடிய மாறுபாடுகள் மற்றும் ரத்தக்குழாயின் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் மாறுபாடுகளால் வருகிற மாரடைப்பை பசு நெய்யால் தடுக்க முடியும்.

உடல் பருமனாக இருப்பவர்கள் நெய் சாப்பிடலாமா?

பசு நெய்யில் இருக்கிற ஒமேகா 3 கொழுப்பு அமிலம், உடல் பருமனாவதைத் தடுக்கும். அதனால், உடல் பருமனாக இருப்பவர்கள் அவர்கள் உடலில் இருக்கிற கொழுப்பின் தன்மை மற்றும் அளவை பரிசோதித்துவிட்டு, மருத்துவரின் அறிவுரையின்படி பசு நெய்யைச் சாப்பிடலாம்.

பருப்பு / சாதம்

யாருக்கு, எவ்வளவு?


பிறந்த குழந்தைக்கு 6 மாதங்களுக்குப் பிறகு அதன் ஒரு வயது வரை, கஞ்சி அல்லது பருப்பு சாதத்துடன் தினமும் 2 முதல் 3 டீஸ்பூன் வரை பசு நெய் சேர்த்துத் தரலாம்.

ஒரு வயது முதல் ஐந்து வயது வரை தினமும் 4 டீஸ்பூன் பசு நெய் வரை கொடுக்கலாம்.

5 வயதுக்கு மேல் தினமும் 6 டீஸ்பூன் சாப்பிடலாம்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தினசரி 8 டீஸ்பூன் பசு நெய் சாப்பிடலாம்.

obesity

Also Read: நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்... யார் யார் எவ்வளவு சாப்பிடலாம்?

பசு நெய்யைப் பற்றி சித்த மருத்துவம் என்ன சொல்கிறது?

தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் வராமல் தடுக்க, தேரையர் என்னும் சித்தர், நீர் சுருக்கி, மோர் பெருக்கி, நெய் உருக்கி சாப்பிட வேண்டும் என்று தன் பாடலில் சொல்லியிருக்கிறார். பசு நெய்யை பயப்படாமல் சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.’’



source https://www.vikatan.com/health/food/siddha-doctor-explains-health-benefits-of-cow-ghee

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக