Ad

வெள்ளி, 6 நவம்பர், 2020

மதுரை: ஆடு முதல் காஸ்ட்லி கார் வரை! - திருமண சீர்வரிசையால் திகைக்க வைத்த முன்னாள் எம்.எல்.ஏ

மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன், தன் மகள் திருணத்துக்கு கொடுத்த பிரமாண்ட சீர்வரிசை விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. சமூக ஊடகங்களில் இந்த சீர்வரிசை குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பைக், டிராக்டர், கார் சீர்வரிசை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டாங்குடியைச் சேர்ந்தவர் தமிழரசன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவர், தற்போது மதுரை கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளராகவும், மதுரை ஆவின் தலைவராகவும் இருக்கிறார். விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், இவருடைய குடும்பத்தினர் ஒப்பந்தப் பணி உட்பட பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறார்கள்.

வரும் சட்டமன்ற தேர்தலில் இவர்தான் மேலூர் வேட்பாளர் என்று சொல்லி வரும் நிலையில், இவர் மகளின் திருமணம் பற்றி மதுரை மட்டுமில்லாமல் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மகள் ஆர்த்திக்கும் கொடிமங்கலத்தைச் சேர்ந்த வெற்றிவேலுக்கும், மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கடந்த 4-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

தமிழரசன் இல்லத் திருமணம்

இந்த திருமணத்தில் கொடுக்கப்பட்ட சீர்வரிசைகள் பற்றி திருமணத்தில் கலந்துகொண்ட யாருக்கும் அப்போது தெரியவில்லை. அதை சிலர் வீடியோவாக எடுத்து இதுதான் சீர்வரிசை என்று பகிர்ந்த பின்புதான் "ஆத்தாடி.." என்று எல்லோரும் வாயைப் பிளக்கிறார்கள்.

பொதுவாக மதுரை, சிவகங்கை, தேனி மாவட்டங்களில் நடக்கும் குறிப்பிட்ட சமூகங்களின் திருமணங்களில் சீர்வரிசை அதிகமாக செய்வார்கள். அதில்தான் தங்கள் கௌரவம், செல்வாக்கு எல்லாம் அடங்கியிருப்பதாக நினைப்பார்கள்

Also Read: ஒரு லட்சம் சீர்வரிசை; தேனிலவுக்கு ரூ.5,000..! - மணமக்களை நெகிழவைத்த ரஜினி ரசிகர்கள்

ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் தமிழரசன் தன் மகளுக்கு கொடுத்த சீர்வரிசை பற்றி எல்லோரும் பேசி வருகிறார்கள். ஆடு, கோழி, இரண்டு டூ வீலர்கள், டிராக்டர், விலை உயர்ந்த கார், குத்துவிளக்கு, பெரிய சைஸ் டிவி, கட்டில், பிரோ, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், தங்கத் தட்டுகள், வெள்ளிக் கிண்ணங்கள், அனைத்து வகையான பித்தளை, அலுமினிய, வெள்ளி, எவர்சில்வர் பாத்திரங்கள், சட்டிகள், அண்டாக்கள். அடுக்கி வைக்கப்பட்ட அரிசு மூட்டைகள். மிளகாய் மல்லி என மசாலா பொருள்கள், மளிகைப் பொருள்கள், அம்மி, ஆட்டு உரல், பாய், துடைப்பம் என ஒன்றையும் விடவில்லை.

சீர்வரிசை

இப்படி சீர்வரிசைக்கு மட்டும் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஒட்டுமொத்த திருமணச் செலவுக்கும் பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கும் என்று சொல்கிறார்கள். திருமண சீர்வரிசைப் படங்களும், வீடியோவும் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.



source https://www.vikatan.com/news/politics/admk-ex-mlas-daughter-wedding-photos-gone-viral

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக